Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்

12.12.2018.
நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன்,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை
திரு. பூ. லக்ஸ்மன், இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரவை
திரு. த. வசந்தராஜா,
இணைத் தலைவர், தமிழ் மக்கள் பேரiவை.
அன்புடையீர்!
திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை இழந்திருக்கின்றது என்று எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கருதுகின்றது.
பின்வரும் காரணங்களுக்காக எமது கட்சி இந்த தீர்மானத்துக்கு வந்திருக்கின்றது.
1. தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான, நின்று நிலைக்கக்கூடிய, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க, ஒரு தீர்வை வென்றெடுப்பதற்கான பலமானதோர் அழுத்தக் குழுவாக இயங்குவதற்கான ஒரு மக்கள் இயக்கமாகவே உருவாக்கப்பட்டது. இவ்வாறான ஓர் அடிப்படையில் கூட்டிணையுமாறு அழைக்கப்பட்டதாலேயே, எமது கட்சி அதில் இணைந்து கொண்டது.
தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பொது நோக்கம் இருந்தாலும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், அந்த பொது இலக்கைச் சென்றடையும் அணுகுமுறை தொடர்பாக வெள்வேறான வழிமுறைகள் இருந்தன. அணுகுமுறை சார்ந்து வெள்வேறான கொள்கைகள் இருப்பதனால்தான் வெள்வேறு அரசியற்கட்சிகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை ஏற்று, ஆனால் ஒருங்கிணைந்து செயற்படவே தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பொழுது – அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன், அதில் இணைக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) என்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவோம். ஆனாலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகித்த தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்தது, ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகவே.
வடக்கு ‘எழுக தமிழ்!’, கிழக்கு ‘எழுக தமிழ்!’ ஏற்பாடுகள் மற்றும் இரண்டு ‘எழுக தமிழ்!’ நிகழ்வுகளுக்கான பிரகடனங்களை இரவு பகலாகத் தயாரித்தமை, பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை இரவு பகலாகத் தயாரித்தமை, அரசமைப்பு சபையின் வழிகாட்டல் குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கைக்கான பதில் அறிக்கை தயாரித்தமை என்பவற்றில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்தே கடுமையாக வேலை செய்தனர். ஏனெனில், ஒரு பொது நோக்கின் அடிப்படையிலேயே நாம் ,ணைந்திருந்தோம்.
விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஆதரவாக மக்கள் பேரவை முன்னெடுத்த போராட்டம் ஒன்றில், ‘தலைமை ஏற்க வருக!’ என்று விக்கினேஸ்வரன் ஐயாவை அழைக்கும் பதாகை ஒன்றை திரு. சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் சேர்ந்து திரு. கஜேந்திரகுமார் தூக்கிச் செல்லும் காட்சிகளை நாம் எல்லோரும் கண்டோம்.
இவ்வாறெல்லாம் ஒன்றிணைந்து பணியாற்றிய பின்பு, திடீரென ஏனைய கட்சிகளைப் பேரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என உப்புச் சப்பற்ற காரணங்களையும், பொய் கதைகளையும் அடுக்குவது மட்டுமன்றி, விக்கினேஸ்வரன் ஐயாவும் தவறானவர் என்று சித்தரித்து, அவருக்கு போட்டியாக இன்னுமொரு மாற்று தேர்தல் அணியை பேரவைக்கு உள்ளே இருந்தே ஆட்களை எடுத்து உருவாக்க முனைவதானது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரவைக்குள் இணைந்த நோக்கமே, அடுத்தவர்களைப் பாவித்து தமது கட்சியை வளர்ப்பதற்கு மட்டுமே என்பது புலனாகின்றது.
தொடக்கத்தில் இருந்தே, தமிழ் மக்கள் பேரவை என்பது தமது கட்சிதான் என்றவிதமான ஒரு கருத்துருவாக்கத்தை மக்களுக்குள் அவர்கள் செய்துகொண்டே வந்தனர். அதற்கும் ஒரு படி மேலே சென்று, நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களைப் பெருந் தலைவராக உருவாக்கியதே தமது கட்சிதான் என்ற ஒரு விம்பத்தையும் உருவாக்க முனைந்தனர்.
தற்பொழுது – பேரவைக்கு எழுந்த மக்கள் பலத்தையும், விக்கினேஸ்வரன் ஐயாவின் பெரும் செல்வாக்கையும், எம் எல்லோரது உழைப்பையும் பாவித்து, தமது கட்சியையும் தமது மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தையும் வளர்க்க முயற்சிக்கின்றனர். எல்லோரும் தமது கட்சிக்கு பின்னால் வந்து தமது சின்னத்தில் போட்டியிட வேண்டும் அல்லது சிதைந்து அழிந்துவிட வேண்டும் என்ற நோகத்துடன் செயற்படுகின்றனர். தம்மோடு இணையாத எல்லோரையும் இந்தியாவின் விசுவாசிகள், அமெரிக்காவின் அடிவருடிகள் என்று, எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காது, வெறுமனே சகட்டுமேனிக்கு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுவதும் அந்த நோக்கத்தின் ஓர் அங்கமே.
இந்த கீழ்தர அரசியலின் உச்சமாகவே – தற்போது, விக்கினேஸ்வரன் ஐயாவையும், வேறு எவருக்காகவோ வேலை செய்யும் அந்நிய அடிவருடி என்றவிதமாகக் கதைகளைக் கட்டி தமிழ் மக்கள் பேரவையையும் பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் இறங்கியுள்ளனர்.
2. இலங்கை நாடாளுமன்றம் அரசமைப்பு சபை ஆக்கப்பட்டு, புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் முயற்சியில், மாநிலங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் உபகுழுவின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றது தொடர்பில் திரு. கஜேந்திரகுமார் குற்றம் சாட்டியிருப்பது – அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகின்றது.
குறித்த அந்த உப குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக இரண்டு விடயங்களை குறிப்பிடுகின்றது.
1. இந்த நாட்டில் 70 ஆண்டு காலமாக நீளும் தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கு காரணம், இந்த நாட்டின் ஒற்றையாட்சி முறைமையே ஆகும்.
2. இந்த நாட்டின் இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக ஒரு சமஸ்டி ஆட்சிமுறையே அமைய முடியும்.
அரசமைப்பு சபையின், மாநிலங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் உப குழுவில் இருந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஏனையோர் சிங்களவர்கள். இத்தகைய ஒரு குழுவின் அறிக்கையில் இந்த இரண்டு விடயங்களையும் குறிப்பிட வைப்பதானது – வெறுமனே ஒலிவாங்கிகளுக்கு முன்னால் அமர்ந்திருந்து கதையளப்பது போன்ற இலகுவான காரியம் அல்ல.
மேலும், கஜேந்திரகுமார் எழுதியிருப்பதைப் போல புதிய ‘ஒற்றையாட்சி அரசமைப்பு’ எதுவும் இந்த நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பதாக நான் அறியவில்லை. இப்போதுதான் ஒரு புதிய அரசமைப்பு வரைபு எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அது இனிமேல்தான் முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்பு – அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் விவாதிக்கப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, பின்பு அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். பின்பு, அது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும். இவையெல்லாம் நடந்து முடிந்த பின்புதான் வந்திருப்பது ‘ஒற்றையாட்சி’ அரசமைப்பா அல்லது வேறு ஏதுமா என்பது தெரியவரும். ,தற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது.
புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்க இலங்கை நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி, உண்மையில் தற்பொழுதும் கருத்தாடல் மட்டத்திலேயே உள்ளது. இதுவரையான கருத்தாடல்களின் அடிப்படையில் – வழிகாட்டல் குழுவால் ஓர் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த இடைக்கால அறிக்கையின் அடிaப்படையில் புதிய அரசமைப்பு வரைபு உருவாக்கப்பட்டு வருகின்றது. இன்னமும், அது தனது இறுதி வடிவத்தைப் பெறவில்லை. மேலும், உருவாக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட ஓர் அரசமைப்பு வாக்களிப்பிற்காக நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு, வாக்களிப்பும் நடந்து முடிந்த பின்புதான் – வந்திருப்பது எத்தகைய அரசமைப்பு என்பதும், அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்று வாக்களித்தாரா, மறுதலித்தாரா என்பதும் தெரியவரும். இதற்கு இடையில் – வெறும் பாதி வழியே கடந்திருக்கின்ற ஒரு முயற்சி பற்றி முடிவான ஒரு கருத்தை சொல்லுவது – கஜேந்திரகுமாரின் அரசியல் முதிர்ச்சியின்மையையும் அதிகப்பிரசங்கித்தனத்தையுமே காட்டுகின்றது.
அதே சமயத்தில் – எம்மீது குற்றம் சாட்டியிருக்கும் கஜேந்திரகுமார் அவர்களின் மூலக் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது, அதன் நிறுவனரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலத்திலிருந்து, பின்னர் – திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமை ஏற்றிருந்த காலத்திலிருந்து இன்று கஜேaaந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை வகிக்கும் காலம்வரை ஒற்றையாட்சி முறையையே ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த கட்சியின் யாப்பு அதனை தெளிவுபடுத்துகின்றது.
1972 இல் தந்தை செல்வநாயகத்தின் தலைவர் பொன்னம்பலம், பின்பு தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டு, தமிழர்களுக்காக தனி நாடு அமைக்கும் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, மக்களை ஏமாற்றி வாக்கு பெறுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அந்த கூட்டணியில் இணைந்ததே அல்லாமல், அது ‘தனது ஒற்றையாட்சி’ கொள்கையை கைவிட்டிருக்கவில்லை.
பின்னர் – தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த தமிழ் காங்கிரஸ் கட்சி, ஒரு சமஷ;டி ஆட்சிமுறைபற்றி அப்போது பேசித்திரிந்து, நாடாளுமன்றத்தில் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஏமாற்றியதே அல்லாமல், அப்போதும் அது தனது ஒற்றையாட்சி கொள்கையை கைவிட்டிருக்கவில்லை.
பின்பு, 2010 – இல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கவசப் பெயருடன், ‘தமிழ் தேசம்’ என்பதை தமது கொள்கையாக முன்னிறுத்தி தேர்தலுக்கு வந்த போதும், ‘ஒற்றையாட்சி’ முறையை ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கே அந்த கட்சி வாக்கு கேட்டது.
பின்பு – 2016 ஆம்; ஆண்டு, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டு, ‘தமிழ் தேசம்’ அங்கீகரிக்கப்பட்ட சமஷ;டி ஆட்சிமுறை கோரி தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்ட போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தாய் கட்சியான அகில ,லங்கை தமிழ் காங்கிரஸ் தனது ஒற்றையாட்சி கொள்கையைக் கைவிட்டிருக்கவில்லை. அதாவது ‘தேசம்’ என்றும் ‘ சமஷ;டி’ என்றும் மக்களை ஏமாற்றும் போலியான முகமூடி ஒன்றை போர்த்தியபடி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற நாமத்தில் தேர்தலுக்குச் சென்று, உண்மையில் ‘ஒற்றையாட்சி’ முறையை ஏற்றுக் கொண்டிருக்கும், ‘தேசம்’, ‘சமஷ;டி’ என்பவற்றை வலியுறுத்தாத சைக்கிள் சின்னத்துக்கே கஜேந்திரகுமார் வாக்குச் சேகரிக்கின்றார்.
சைக்கிள் சின்னம் அவர் பேசித்திரிவதைப் போல ஒரு மாற்றத்தின் சின்னம் அல்ல, அது உண்மையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு வரலாற்று மார்க்கத்தின் சின்னமாகும்.
3. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, பொய்யாகத் தங்களைத் தூய்மையானவர்களாகக் காட்டுவதற்காக தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைக் கறை படிந்தவர்கள் போல சித்தரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது, பேரவை உருவாக்கப்பட்ட மூல நோக்கத்திற்கு எதிரான செயற்பாடு ஆகும். உண்மையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, தங்களை வெளியில் காட்டிக்கொள்வது போல தூய்மையான கொள்கையுடைய ஓர் அமைப்பு அல்ல. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) கட்சியும், எமது கட்சியும் கொழும்பு கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைத்தமை பற்றி கதையளக்கும் மக்கள் முன்னணி, தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் கொழும்பு கட்சிகளுடன் ஆட்சியமைக்க அனுமதி அளித்துள்ளது.
திரு. நடராசா விஜிதரன் என்பவர் திருக்கோவில் பிரதேச சபையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவாகவும்,
திரு. நடராசா சசிதரன் என்பவர் பொத்துவில் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்க ஆதரவாகவும் வாக்களித்துச் செயற்பட தமிழ் தேசிய மக்கள் முன்ணணியால் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதவும் எடுத்து அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படாதது கட்சியின் அங்கீகாரத்தையே காட்டுகிறது.
உண்மையில் – சரியாக நோக்கினால், கிழக்கு மாகாணத்தில் தாங்கள் அதிஸ்டவசமாகப் பெற்றுக்கொண்ட இரண்டே இரண்டு உள்ளுராட்சி ஆசனங்களின் உறுப்பினர்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே கொழும்பு கட்சிகளிடம் சோரம் போயுள்ளது.
இந்த நிலையில் ஏனைய கட்சிகள் பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும், அந்நிய எஜமானர்களுக்காகவும் கொள்கை ஏதுமற்ற சோரம் போய்விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அருகதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி இழந்துள்ளது.
4. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அந்த அமைப்பு தமது கட்சியின் ஒரு முகவர் இயக்கம் போன்ற ஒரு தோற்றத்தையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்கள் மத்தியில் உருவாக்கிவந்தது. மக்கள் பேரவைக்குள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் உள்வாங்கப்பட்டவர்களையும் தமது கட்சிக்காக மட்டும் அவர்கள் செயற்பட வைத்தார்கள். ஆனால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் பேரவையிலிருந்த ஏனைய இரண்டு கட்சிகளும், மக்கள் பேரவையின் பெயரை தமது கட்சிகளின் வளர்ச்சி நலன்களுக்காகப் பயன்படுத்தியதில்லை. மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளின் உச்சமாக, கடந்த உள்ளுராட்சி தேர்தலின்போது – அகில ,லங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என ஏற்கனவே இருந்த இரண்டு பெயர்களுடன் ‘தமிழ் தேசிய பேரவை’ என்ற புதிய பெயரையும் சேர்த்துக் கொண்டு தேர்தலில் இறங்கினார்கள். இது – தமிழ் மக்கள் பேரவை என நினைத்து மக்களைத் தமது கட்சிக்கு வாக்களிக்க வைக்கும் கபட எண்ணத்துடன் செய்யப்பட்டது என்பது சிறுபிள்ளைக்கும் புரியக்கூடியது.
இவ்வாறான செயற்பாடுகள் – தமிழ் மக்கள் பேரவை என்பது அமைப்பு ரீதியாகவும், பேரவையில் இருக்கும் வேறு உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலும், உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் பாகுபாடு காட்டி, தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சார்பாக மட்டுமே செயற்படுகின்றனர் என்றும், இது விக்கினேஸ்வரன் ஐயாவின் கவனத்திற்கு எட்டாதவகையில் திட்டமிட்டு செய்யப்படுவதாகவும் ஒரு பலத்த சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியிலும், அங்கத்துவ கட்சிகள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதனையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துவிட விரும்புகின்றோம். இவ்வாறான பக்கசார்பான செயற்பாடுகளே, தமிழ் மக்கள் பேரவை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சிபெறுவதற்கு தடையாக இருந்து வருவதான கருத்தும் வெளியில் உண்டு.
இவ்வாறாக – தமிழ் தேசிய ,னப் பிரச்சினைக்கான உருப்படியான ஒரு தீர்வைக் காண்பதற்கு ஒரு பலமான அழுத்தக் குழுவாக செயற்படத்தக்க ஒரு பெரும் மக்கள் இயக்கத்திற்குள் இருந்த ஒற்றுமையைச் சிதைத்ததுடன், அதன் முதன்மை இணைத் தலைவரான நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் நற்பெயருக்கும், செல்வாக்கிற்கும் பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதுடன், எல்லோருக்கும் பொதுவான விக்கினேஸ்வரன் ஐயாவையும், தமிழ் மக்கள் பேரவை அமைப்பையும் தமது கட்சியின் முகவர்கள் போல தோற்றம் காட்ட முற்பட்டதனால் – தமிழ் மக்கள் பேரவையில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருக்கின்றதா என்பதனை தமிழ் மக்கள் பேரவை பரிசீலிக்க வேண்டும் என எமது கட்சி பரிந்துரை செய்கின்றது.
நன்றி,
த.சித்தார்த்தன் (பா.உ),
யாழ். மாவட்டம்,
தலைவர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி.
குறிப்பு : பேரவையின் உள்விவகாரங்கள் பகிரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது பக்க நியாயங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவருக்கு புளொட் தலைவர் கடிதம்-

கௌரவ. இரா.சம்பந்தன், பா.உ.,
தலைவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அன்பின் ஐயா, வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக
வடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றிற்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்திற்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிற்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில்; ஒரு ஆசனமானது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவிற்கமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன. மேலதிக ஆசனமாக கிடைத்த ஆசனம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்தாலும், பதவியைப் பெற்றுக்கொண்ட அஸ்மின் அவர்கள் தமிழரசுக் கட்சி அங்கத்தவர் போன்றே செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழரசுக் கட்சி அங்கத்தவராக செயற்படுகின்றார்.

மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்பு கூட்டமைப்பின் செயற்பாடுகளில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி; விலகிய நிலையில், கூட்டணியின் மாகாணசபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் தமிழரசுக் கட்சியை தழுவி செயற்படலாயினர். அந்தவகையில,; முதல் வாய்ப்பைப் பெற்ற மேரிகமலா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்தாலும் தமிழரசு கட்சி உறுப்பினராக செயற்பட்டதோடு, ஒன்றரை வருடகாலத்திற்கு மேலாக மாகாணசபை உறுப்பினராக இருந்தார்;. பதவிக்காலத்தின் ஒரு வருட முடிவில் தற்போது மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் அவர்களை பதவிநீக்கும் விடயத்தில் காட்டும் தீவிரத்தை மேரிகமலாவை பதவிநீக்குவதில் தமிழரசுக் கட்சி காட்டியிருக்கவில்லை. தற்போது மேரிகமலா அவர்கள் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் உப தலைவராக செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வேட்பாளரான மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்குமாறு கோரியதாகவும் அதற்கு சாதகமான பதிலை தமிழரசுக் கட்சி வழங்கியிருந்ததாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்கள். ஆயினும் ஜே.ஆரின் பாணியில் பதவிவிலகல் கடிதத்தினை ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தமிழரசுக்கட்சி, பதவியிலிருந்த மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனுக்கு தெரியாமலேயே அவரது பதவிவிலகல் கடிதத்தினை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைத்ததுடன் அவ்விடத்துக்கு அவசர அவசரமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வேட்பாளரான ஜெயசேகரம் அவர்களை நியமித்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு இரண்டாவது தடவையாகவும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்கள்.

ஏற்கனவே வட மாகாணசபையின் முல்லை மாவட்ட உறுப்பினராகவிருந்த கனகசுந்தரசுவாமி அவர்களின் மறைவையடுத்து பதவி வெற்றிடமாகியபோது, அடுத்த நிலையில் இருந்த எமது அமைப்பின் க.சிவநேசனின் பெயரை, பலமுறை நாம் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும்கூட, தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்காமல் மூன்று மாதகாலமாக தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்துவந்தது. இறுதியாக தேர்தல் ஆணையாளரே தனது பதவிக்குரிய அதிகாரவழியில் தற்துணிவுடன் சிவநேசனின் உறுப்புரிமையை அறிவித்திருந்தார். கூடவே, தமிழரசுக்கட்சியின் செயலாளரின் பொறுப்பற்றதன்மையை தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆக, தார்மீக நெறிகளைமீறி, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் தமிழரசுக்கட்சி, கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களின் நியமனங்களில் தன்னிச்சையுடன் செயற்பட்டுவருகின்றமை அப்பட்டமான உண்மை.

ஐக்கியத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கூட்டமைப்பின் சகல கட்சிகளும் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட முடிவின்படி இவ் ஆசனம் எமது அமைப்பின் உறுப்பினருக்கே வழங்கப்படல் வேண்டும். இதுவே ஒப்புரவானதும் நீதியும் பண்பும் நிறைந்த தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக இருக்குமென நான் நம்புகிறேன். இது குறித்து பல சந்தர்ப்பங்களில் தங்களிடம் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தேன்.

கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியினால் திட்டமிட்டு புறம்தள்ளப்பட்டு வருகின்ற சூழலில், ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாக கருதி தமிழரசுக்கட்சியின் அடையாளத்தையும், பெயரையும் நாம் தொடர்ச்சியாக ஏற்றுக்கொண்டு செயற்படுவதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவாகவே தற்போதைய நிலைமையை நாம் பார்க்கிறோம். ஓற்றுமைக்கான விலையான எமது விட்டுக்கொடுப்புகளை எமது பலவீனமாக கருதும் செயற்பாடுகள் கண்ணியமானவையோ, அரசியல் நாகரீகம் நிறைந்தவையோ அல்லது தமது பலம் என்று பெருமை கொள்ளக்கூடியவையோ அல்ல.

தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் இன்னும் பல உயர்ந்த பண்புகள் நிறைந்த தலைவர்களாலும் அவர்களின் தியாகத்தினாலும், அவர்களுடன் சமகாலத்தில் திருகோணமலையில் தங்களாலும், இளைஞரணி தலைவராக மாவை அண்ணராலும் கட்டிக்காத்து வழிநடாத்தப்பட்ட தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால போக்குகள் மக்களின் உணர்வுகளை மதிக்காதிருப்பதை தாங்கள் உணராமலிருக்க முடியாது. உதாரணமாக, வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்கள் தமிழரசுக்கட்சியின் பாரம்பரியத்தை அறிந்தவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும்.

தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பாதகமான விமர்சனங்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகின்றபோதிலும், தமிழ் தேசிய பிரச்சனைக்கான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் வரையிலாவது கட்டிக்காக்க வேண்டிய ஒற்றுமை குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை நேர்மையானது. உண்மையான ஐக்கியத்திற்கு முரணான நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக நாம் செயற்படவில்லை.

எவ்வாறிருப்பினும், தமிழரசுக் கட்சியின் அன்றைய தலைவர்கள் பாரம்பரியமாக வெளிப்படுத்தி வந்த தலைமைத்துவப் பண்புகளையும், தமிழ் மக்களை ஓரணியில் ஒற்றுமைப்படுத்தி முன்கொண்டு செல்லும் பக்குவத்தையும் இன்று உங்களிடம் நான் காண்கிறேன். அதேவேளை கூட்டான ஓர் அமைப்புக்குரிய அடிப்படைப் பண்புகளை தூக்கிநிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐக்கியத்தை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடு தஙகளையே சாரும் என நம்புகிறேன்.

எனவே, தமிழரசுக் கட்சியின் மிக மூத்ததலைவர் என்றவகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துவிடாது இணைத்துவைத்திருக்கும் ஆற்றல்கொண்ட தலைவர் என்றவகையிலும் தமிழரசுக்கட்சியின் மிகப் பிந்திய செயற்பாடான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு சுழற்சி முறையிலான ஆசனத்தை முறைகேடாக இரண்டாவது தடவையும் வழங்கும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு உரிமையுடனும், ஒற்றுமையின் பெயரிலும் தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

த.சித்தார்த்தன் (பா.உ)
தலைவர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
28.07.2017.

பிரதிகள்:
1. கௌரவ முதலமைச்சர், C.V. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை.
2. கௌரவ மாவை. சேனாதிராஜா, பா.உ, தலைவர், இலங்கை தமிழரசுக் கட்சி.
3. கௌரவ செல்வம் அடைக்கலநாதன், பா.உ, தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்.
4. திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளர் நாயகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
5. கௌரவ. சி.வி.கே.சிவஞானம், தவிசாளர், வடக்கு மாகாண சபை.

dplf

Leave a Reply