ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு-(படங்கள் இணைப்பு)
Video – plote vavuniya
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு நேற்று (22.05.2016) ஞாயிற்றுக்கிழமை வவுனியா உமாமகேஸ்வரன் வீதிச் சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் முற்பகல் 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மகாநாட்டு மண்டபத்தில் சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. கட்சியின் தலைவர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வெளிநாட்டுக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சுடரேற்றிவைத்து மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், மகாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவரது உரையினைத் தொடர்ந்து கட்சியின் லண்டன் கிளை சார்பில் கலந்து கொண்டிருந்த லண்டன் ஈஸ்ட்ஹாம் உபநகரபிதா போல் சத்தியநேசன், கட்சியின் பிரான்ஸ் கிளை சார்பில் கலந்துகொண்டிருந்த ஜென்னி ஜெயச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் க.சிவநேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். தொடர்ந்து கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் அவர்களால் கட்சியின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து மூத்தோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. காந்தீய அமைப்பினது காலத்திலும், 1990ம் ஆண்டுக்கு பிந்திய காலத்திலும் அமைப்பின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்று முதுமை காரணமாக செயற்பாடுகளை நிறுத்தியுள்ள மூத்தவர்கள் மகாநாட்டுப் பேராளர்கள் முன்பு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் உரைநிகழ்த்தினார். அவரது உரையினைத் தொடர்ந்து கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் அவர்கள் நன்றியுரையாற்றினார். மேற்படி மகாநாட்டிற்கு 12 நாடுகளிலிருந்து 18 பிரதிநிதிகளும், வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மாலை 7மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.