27.04.2013
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்துவைப்பு– யாழ்ப்பாணம் உடுவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் திரு.வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரான வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் அவர்களால் யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியை நிறுவுவதற்காக தமிழ் கல்விச் சமூகத்திற்கு கோப்பாயில் நிலப்பரப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை நினைவுகூர்ந்து நிறுவப்பட்ட அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறந்துவைக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. மதகுருமார்களின் பூஜை வழிபாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து கல்லூரியின் பீடாதிபதி திரு. எஸ்.கே.யோகநாதன் அவர்களால் இன்றுகாலை 9.40மணியளவில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும், நண்பர்களும், பொதுமக்களும் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
27.04.2013.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கமலேஷ் சர்மா சந்திப்பு- வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின்போது, எதிர்வரும் நவம்பர் மாதம் அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாடு தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒத்ததாக இடம்பெறவுள்ள வர்த்தக பிரதிநிதிகள் சந்திப்பு, இளைஞர் சந்திப்பு மற்றும் தம்புள்ளயில் நடைபெறவுள்ள பொதுமக்கள் சந்திப்பு ஆகியன தொடர்பாகவும் இங்கு விரிவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்– சோமாலியா நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் இரண்டு யுத்தக் கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. சோமாலிய கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த இரு கப்பல்களும் வந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூர்ய குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பயணத்தை மீண்டும் நேற்றுபிற்பகல் ஆரம்பித்துள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை-கமலேஷ் ஷர்மா- பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2013ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதியில்லை-பொலீஸ் பொறுப்பதிகாரி- சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் அனுமதி வழங்க மாட்டோம் என யாழ். காங்கேசன்துறைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 29ம் திகதி வலி.வடக்கு மக்கள் தெல்லிப்பழை பிரதேசசெயலக முன்றலில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவுள்ளனர். நடக்கவிருக்கும் போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவீர்களா என பொறுப்பதிகாரி ஏக்கநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 29ஆம் திகதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் எதுவும் என்னிடம் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கினாலும் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. சட்டரீதியான ஆர்ப்பாட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர்-அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சு- அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்துக்கான தகைமைகள் இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதிகளாக அவுஸ்திரேலியா வருவோர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்படும்போது அகதிகளுக்கான விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுடையவர்கள் இல்லையெனின் திருப்பி அனுப்பப்படுவர் என அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார். 25 இலங்கை அகதிகள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அகதி விதிமுறைகளுக்கமைய புகலிடம் கோரும் தகுதி இருக்கவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்– ஜப்பானின் பிரதிப் பிரதமர் டரோ அசோ மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட உப நிதி அமைச்சர் யுக்கோ ஒபுச்சி ஆகியோர் மே முதலாம் திகதி இலங்கை வரவுள்ளனர். இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவரும் இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். கொழும்பு டொக்யார்ட்டின் 20வது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இலங்கை வரவுள்ளனர். ஜப்பான் அரசாங்கம் கொழும்பு டொக்யார்ட்டின் விஸ்தரிப்பு மற்றும் அதனை மேம்படுத்தும் திட்டத்துக்காக 80 பில்லியன் யென்களை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடமாகாணசபைத் தேர்தல்; ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்– எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்திற்கு 19 பேரும், மன்னார் மாவட்டத்துக்கு 8பேரும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8பேரும், வவுனியா மாவட்டத்துக்கு 9பேரும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7பேருமாக மொத்தம் 51பேர் கட்சியால் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக வட மாகாணசபை நிறுவப்படவுள்ளது. முன்னர் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை இயங்கிய நிலையில் அது நீதிமன்ற உத்தரவின்பேரில் பிரிக்கப்பட்டது. மொத்தமாக நியமன உறுப்பினர்கள் உட்பட 38 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.