01.05.2013.

மேதினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்வலங்கள்- மேதினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு, மலையகம் உட்பட நாடுதழுவிய ரீதியில் ஊர்வலங்களும் கூட்டங்களும் நடைபெறுகின்றன. பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பிலும், ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு, குருணாகல் மற்றும் பதுளையிலும், ஜே.வி.பி. கொழும்பிலும் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் மேதினக் கூட்டத்தை நடத்துகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடமராட்சியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.யின் மேதினக் கூட்டம் கிளிநொச்சயில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்களும் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்– அண்மைக் காலமாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது. இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புகள் விடயங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என அமெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார். கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதலையும் அமெரிக்கா கண்டித்துள்ளது. உதயன் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, பத்திரிகை விநியோகத்தர்கள் தாக்கப்பட்டு பத்திரிகைகள் எரிக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பெறப்படும் காணிகளுக்கு உரிய தொகை வழங்கப்படும்-யாழ் கட்டளைத் தளபதி- வடக்கில் பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்குரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவோம் எனவும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அப்பகுதியில் 2ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம் எனவும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் அரசியல் கட்சிகளின்; போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. பலாலி விமான நிலையத்தை சர்வதேச ரீதியில் தரம் உயர்த்துவது மற்றும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன. இவற்றுக்கு போதிய காணிகள் தேவைப்படும்போது அவற்றை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களை நாம் நாடுவோம். தென் அதிவேக வீதி, மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில், அப்பிரதேச மக்களின் காணிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால், வடக்கில் அரசியல் கட்சிகள் போலியான பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு பொமக்களை ஏமாற்றி வருகின்றன என யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேலும் கூறியுள்ளார்.

புதிய இந்திய தூதுவரை நியமிக்க நடவடிக்கை– இலங்கைக்கான புதிய இந்தியத் தூதராக இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான வை.கே.சிங்ஹா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த இராஜதந்திரி வை.கே. சிங்ஹா தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சில் பாகிஸ்தான், ஈரான் விவகாரங்களைக் கையாளும் பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். தற்போது சீனாவுக்கான இரகசியத் தூதுவர் பதவியில் இருக்கும் ஜெய்சங்கர் இலங்கைக்கு மாற்றப்படலாமென முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால், இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக அவர் நியமிக்கப்படும் வாய்ப்பிருப்பதால் அது சாத்தியப்படவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்க நிதியுதவி மீளப் பெறப்பட்டது– இலங்கையின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்நிதியை அமெரிக்கா மீளப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது. எனினும் இலங்கை அரச அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத நிலையிலேயே அமெரிக்கா நிதியுதவியை திரும்பப் பெற்றுள்ளது. நன்கொடை திரும்பப் பெறப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் ஞாபகார்த்த தினம்– காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவின் 20வது ஞாபகார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகளும் சமய அனுஸ்டானங்களும் இடம்பெறுகின்றன. பிரதான ஞாபகார்த்த நிகழ்வு கொழும்பு புதுக்கடை பிறேமதாச உருவச்சிலைக்கு அருகாமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மௌன அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிறேமதாசவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் பிறேமதாச குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாச 1993ம் ஆண்டு கொழும்பு, ஆமர்வீதியில் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தபோது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.