30.04.2013
Nilam_CI.காணி சுவீகரிப்பை எதிர்த்து வழக்குத் தாக்கல்- வலி வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவிகரிப்புக்கு எதிராக தெல்லிப்பளை பிரதேச செயலகம் முன்பாக நேற்றுக்காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறீதரன், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் எஸ். கஜேந்திரன், வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். ஆர்ப்பாட்டத்தினையடுத்து மக்கள் தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட சென்றபோது பொலீசாரினால் தடுக்கப்பட்டனர். இதனையடுத்து பிரதேச செயலகம் முன்பாக கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது பலாலி விமான நிலையம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சூழவுள்ள தமிழர்களின் 6ஆயிரம் ஏக்கர் காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து 5,000 வழக்குகள் மே 2ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.

வீதி புனரமைக்கப்படாமையால் மக்கள் சிரமம்– வவுனியா தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட 60க்கு மேற்பட்ட உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாதுள்ளன. இதனால் இவ் வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். நெளுக்குளம் சிறுவர் பாடசாலை வீதி, முள்ளிபுலவு வீதி, தொழிநுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள இரு வீதிகள், நேரியகுளம் பிரதான வீதியிலிருந்து பிரியும் 8 கிளை வீதிகள், மன்னார் வீதியில் குறுக்காகச் செல்லும் 12 வீதிகள், ஏ9 வீதியில் குறுக்காகச் செல்லும் 14 வீதிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட வீதிகளே மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்த வீதிகளைப் பயன்படுத்தும் நோயாளிகள், ஓமந்தை வைத்தியசாலை, பூவரசங்குளம் வைத்தியசாலை, பம்பைமடு வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு தாம் சென்று திரும்ப முடியாதுள்ளது என்று தெரிவிக்கின்றனர். இந்த வீதிகளில் மழை காலங்களில் சிறியரக வாகனங்கள் கூட செல்ல முடியாதுள்ளது. இதனால் தூர இடங்களுக்கு சென்று பயணத்தை தொடர வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடக் கூடாது-அமைச்சர் பீரிஸ்- இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் நாம் எந்தக் கருத்துகளையும் கூறுவதில்லை. நாம் அந்த நாடுகளின் இறையாண்மையை மதிக்கிறோம். அதுபோலவே எமது உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடத் தேவையில்லை என்றே இலங்கையும் எதிர்பார்க்கிறது. ஆனால் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்ற போர்வையில், இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுகின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்– அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. எனினும் போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்தல் விடுத்துள்ளது.

அரசியல்வாதியை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது– மலேசியாவின் பெராக் பகுதி பிதோர் நகரில் மலேசிய அரசியல்வாதி ஒருவர்மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒரு இந்தியரும், இரு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 5ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் விவகாரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மலேசிய செய்திகள் கூறுகின்றன. நேற்று பிதோர் நகருக்கு சென்று கொண்டிருந்த 32 வயதுடைய அரசியல்வாதி ஒருவரின் காரை வழிமறித்த இரு கார்களில் வந்தவர்கள் இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக பெரக் பொலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தாக்கப்பட்ட அரசியல்வாதி டபா பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மேற்குறித்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என டபா பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகளை விற்கும் நாடு இலங்கை-மனித உரிமை ஆணைக்குழு மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடற்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் தங்காலை கரையின் ஊடாக ட்ரோலர் படகைப் பயன்படுத்தி 35 நாள்களில் ஆஸ்திரேலியாவுக்கு ஆள்களைக் கடத்துகின்றனர். மனித உயிருக்கான மரியாதை அற்றுப் போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். பொலிஸ் நிலையங்களில் ஒரு முறைப்பாட்டை சரியான முறையில் பதிவு செய்யக் கூடிய அதிகாரிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவிற்கு பணியாளர்கள் அனுப்ப நடவடிக்கை– தென் கொரியாவில் வேலைவாய்ப்பினைப் பெற்ற மேலும் ஒரு குழுவினர் தென் கொரியா பயணமாகியுள்ளனர். சுமார் 100 பேரைக் கொண்ட குழுவினர் இன்று தென்கொரியா பயணமானதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கொரிய மொழியில் தேர்ச்சி பெற்ற இவர்கள் தென் கொரிய தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர். வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே யுத்த சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து செல்லும் முதல் தொகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி எம்.பிக்களை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தல்– இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாது தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு புறக்கணித்து வருவது வருத்தமளிக்கிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி போல செயற்படுங்கள்-கருணாநிதி– இலங்கை கடற்படையினரின், தமிழக மீனவர்கள்மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயத்தில் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பின்பற்றிய வழிமுறைகளை கைக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இராமேஸ்வர மீனவர்கள் 30 பேரினதும் விடுதலையை ஏப்ரல் 6ம் திகதிவரை அநுராதபுரம் நீதிமன்றம் நீடித்துள்ளமையையும், காரைக்கால் மீனவர்களது தடுப்பு காவல் நீடிக்கப்படமையையும் கருணாநிதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா விபத்தில் ஐவர் காயம்- வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நான்கு படைவீரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ ட்ரக் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. ஏ9 பாதையின் 164வது மைல்கல் பகுதியில் இச்சம்வம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த டிப்பர் சாரதியும், படைவீரர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விமர்சகர்களை அரசு துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு– விமர்சகர்களையும் அதிருப்தியாளர்களையும் இலங்கை அரசு துன்புறுத்துவதாகவும், சிறையில் அடைப்பதாகவும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை (அம்னஸ்டி இன்டர்நேஷனல்) குற்றஞ்சாட்டி அறிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலவரம் மேம்படாத வரையில் காமன்வெல்த் அமைப்பு நாடுகளுடைய உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தற்போதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த புதிய அறிக்கையை அம்னஸ்டி இன்டர்நேஷனல் இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இலங்கையில் அரசுக்கு எதிராக கருத்து சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் போன்றோர் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளை கொல்லப்பட்டும் உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

மலேசியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமனம்– மலேசியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட இப்ராகிம் அன்சார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக்கடிதத்தை அலரிமாளிகையில் வைத்து நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.