02.05.2013.

imagesCAAFRW6N72ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரட்டைப் பதிவுகள் நீக்கம்- 2012ஆம்; ஆண்டுக்கான வாக்காளர் பதிவு பட்டியலிலிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. 72,319 பதிவுகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலிருந்து 11,359 பதிவுகளும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 9,023 பதிவுகளும், வன்னி மாவட்டத்திலிருந்து 5410 பதிவுகளும், யாழ் மாவட்டத்திலிருந்து 4067 பதிவுகளும், கண்டி மாவட்டத்திலிருந்து 4040 பதிவுகளும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 3951 பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பு பட்டியலில் இரண்டுக்கு மேற்பட்ட பதிவுகளை மேற்கொண்டிருந்தமையால் 2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து 176,534 பதிவுகள் நீக்கப்பட்டிருந்தன.

தேசிய அடையாள அட்டை விடயமாக சட்டமா அதிபரின் அறிவிப்பு-தேசிய அடையாள அட்டையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல் உள்ளடக்கப்பட வேண்டிய வாய்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினாலேயே இம்மனு தாக்கல் செய்யப்படடிருந்தது.

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி முதல்வர் கைது- தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான அசாத் சாலீ இன்றுகாலை குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கொலன்னாவை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்றுகாலை 6.45 மணியளவில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அசாத் சாலி அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது வெளியிட்ட கருத்துகள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் அவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் அரசுடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா ஆலோசனைக் குழுவின் தலைமைப் பொறுப்பில் சமித்ரி ரம்புக்வெல– ஐ.நா சபையின் மாநாடுகளை ஏற்பாடு செய்வது தொடர்பிலான ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான சமித்ரி ரம்புக்வெலவிற்கே தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2013-2014ஆகிய ஆண்டு காலப்பகுதியில் குழுக்களின் தலைமையை இவர் வகிக்கவுள்ளார். சமித்ரி ரம்புக்வெல்ல ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் புதல்வியாவார். இந் நியமனத்திற்காக ஆசிய பசுவிக் அரச குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த குழுவிற்கான உறுப்புரிமை இவ்வருடமே இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்த குழு நியமிக்கப்பட்ட பின்னர் மிகக் குறைந்த வயதில் தலைமைப் பொறுப்பை சமித்ரி ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும்படி பிரிட்டன்மீது அழுத்தம்– சர்வதேச மன்னிப்பு சபை இலங்கை அரசு தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாமீது மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. லண்டனை தளமாக கொண்டியங்கும் த இன்டிபென்டன் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள், அரசுக்கு எதிரான தரப்பினருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் போன்ற விடயங்கள் சர்வதேச மன்னிப்பு சபையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் நவம்பரில் பொதுநலவாய தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பிரித்தானிய புறக்கணிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள், இந்த அறிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

ஜப்பான் துணைப் பிரதமர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு– ஜப்பானின் துணைப் பிரதமர் டாரோ அசோ உள்ளிட்ட ஜப்பான் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஸவை சந்தித்துள்ளனர். ஜப்பான் துணைப் பிரதமர் அவரது பாரியார் சிக்காக்கோ அசோ உள்ளிட்ட ஜப்பான் பாரளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதியும் ஜப்பான் துனை பிரதமரும் இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜப்பான், இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி தொடர்பில் இதன்போது ஜப்பான் துணைப் பிரதமர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் மரணம்- அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசியல் புகலிடம் கோருவதற்காக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தபோது கைதுசெய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆஸி, போஸ்பேட் ஹில் பகுதியிலுள்ள மத்திய நிலையமொன்றிலிருந்து குறித்த இலங்கையர் நேற்று கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டிருந்தார். மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸியிலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் திருப்பி அனுப்பிவைப்பு சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு அகதி அந்தஸ்துகோரிச் சென்ற 42 இலங்கையர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் 39 தமிழர்களும், 3 சிங்களவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 1000அகதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா வருபவர்களை தடுக்க இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கார்னர் அறிவித்துள்ளார்.

ஆஸி குடிவரவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்- அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் இன்று அதிகாலை 1.55 மணியளவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையின்; சிரேஸ்ட அமைச்சர்களுடன் அமைச்சர் கோர்னர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.