04.05.2013.

வடக்கில் பொலீஸ் நிலையங்களுக்கு காணி சுவீகரிப்பு-

யாழ். மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன. அவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு உரித்துடையவர்கள் அது தொடர்பில் தத்தமது பிரதேச செயலகத்திலோ அல்லது யாழ். மாவட்ட செயலகத்திலோ முறைப்பாடு செய்யலாம் என யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். ஜெப்றி தெரிவித்துள்ளார். யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 8 பொலிஸ் நிலையங்களும், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 9 பொலிஸ் நிலையங்களும் உள்ளன. யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு மாத்திரமே தற்போது காணி ஒன்று சொந்தமாகவுள்ளது. ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு காணிகள் இல்லை. எனவே இங்குள்ள காணிகளைச் சுவீகரிக்க வேண்டியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிராம சேவையாளர்களை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை

புதிய கிராம சேவையாளர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இன்றையதினம் நாடெங்கிலும் இதற்கென அமைக்கப்பட்டிருந்த 261 மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளின் பின்னர் புதிதாக கிராம சேவையாளர் பதவிக்கு ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இம்முறை 4ஆயிரம் பேர் இப்பதவிக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் ஆலய விக்கிரகங்கள் கொள்ளை-

கிளிநொச்சி தொண்டமான் நகர் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த விக்கிரகங்கள் மற்றும் ஆலயப் பொருள்கள் களவாடப்பட்டுள்ளன. இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. விக்கிரகங்களுடன் ஐம்பொன் தகடுகள், பெறுமதியான பொருள்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த களவுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான காணி அதிகாரிகளின் அனுமதியுடன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு வழங்கப்பட்டு கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் திட்டமிடப்பட்டே கொள்ளை இடம்பெற்றிருக்கலாமென கூறப்படுகிறது.

இளவாலையில் மனித எலும்புக்கூடு மீட்பு-

யாழ்ப்பாணம், இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அசாத் சாலியை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை-

கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு விடுதலை செய்யப்படாத பட்சத்தில் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை அரசை விமர்சிப்பதால் ஏற்படும் நிலைமையை அசாத் சாலியின் கைது உணர்த்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலயத்திற்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் திட்டத்தின் புதிய இரைதான் அசாத் சாலி எனவும் பொலி ட்ரஸ்கொட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் கெமருன் பங்கேற்க வாய்ப்பு-

இலங்கையில் இவ்வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பங்கேற்பாரென தெரிவிக்கப்படுகிறது. லண்டனைத் தளமாக கொண்டியங்கும் த டெய்லி டெலிகிராப் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரங்களை காரணம் காட்டி, இம்மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்படுகிறது. எனினும் இந்த வலியுறுத்தல்களையும் மீறி, பிரித்தானிய பிரதமர் இம்மாநாட்டில் பங்கேற்பாரென பிரித்தானிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதற்கு கனடா தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொகுதி தமிழர்களை நாடு கடத்த பிரிட்டன் நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் மாதங்களில் மேலும் சில இலங்கைத் தமிழர்கள் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின், கடந்த 2009ம் ஆண்டு 504 பேரும், 2010ம் ஆண்டு 608 பேரும் 2011ம் ஆண்டில் 865 பேரும் கடந்த 2012 ஆண்டு 717 பேரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். எனினும் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஊடக அடக்குமுறை பட்டியலில் இலங்கைக்கு நான்காமிடம்-

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நாடுகளின் பட்டியிலில் இலங்கை இரண்டாவது தடவையாகவும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலே இலங்கையில் ஊடகவியலாளர்களின் நிலையை இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது. பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடங்குகின்றன. ஈராக், இலங்கை, மெக்ஸிக்கோ, கொலம்பியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்படும் சம்பவங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.