காணி, பொலீஸ் அதிகாரங்களை தமிழ்க் கட்சிகள் கோரும் என அச்சம்
வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர், தமிழ்க் கட்சிகள் காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை கோரிநிற்கும் என்ற அச்சம் காணப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். வடக்கில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் அதற்காக நாட்டின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. இதேவேளை தேர்தலின் பின்னர் வடமாகாணத்திற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை கோரி தமிழ் கட்சிகள் செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்ற அச்சம் காணப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரபலங்கள் மற்றும் தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் பலரும் இந்த புதிய அரசியல் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும், முன்னாள் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் தமிழ் இளைஞரைக் காணவில்லையென முறைப்பாடு
கொழும்பு, மருதானை, டீன்ஸ் வீதியைச் சேர்ந்த 18வயதான களியபெருமாள் ரவீந்திரன் என்கிற தமது மகனை கடந்த 01ஆம் திகதியிலிருந்து காணவில்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் கடந்த முதலாம் திகதி காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து சென்றதாகவும், அவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையெனவும் பெற்றோர் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்துடன் தனது மகன் பற்றிய தகவலை அறிந்தவர்கள் 072 3866457 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு காணாமற்போன இளைஞனின் தாயாரான இந்திராணி கேட்டுக் கொண்டுள்ளார்

உள்ளுராட்சி மன்ற எல்லை மீளமைப்பு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் மேலும் ஆறு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க ஊகடத்திற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகள் இம்மாதம் 31ம் திகதியுடன் நிறைவு செய்யப்படவிருந்தது. எனினும் இந்நடவடிக்கைகளை உரிய தரத்துடன் மேற்கொள்வதற்காக மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் இந்த தாமதம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலர் வீடுமீது தாக்குதல்
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிபின் பிரத்தியேக செயலர் ஏ.எல்.எம்.இன்சாதின் வீட்டின்மீது நேற்றிரவு 9.45 மணியளவில கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாய்ந்தமருது-11 ஹாஜா வீதியிலுள்ள குறித்த வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன. அவரும் அவரது மனைவி பிள்ளைகளும் சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் இருந்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு விரைந்த கல்முனைப் பொலிஸார், ஏ.எல்.எம்.இன்சாதிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை உயர்வு
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 2009ம் ஆண்டு 504 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனைவிட 2010ஆம் ஆண்டு 608 பேரும், 2011ஆம் ஆண்டு 865 பேரும், 2012ஆம் ஆண்டு 717 பேரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாகவும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, இவ்வருடத்தில் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டேவிட் டலி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக கடமை பொறுப்பேற்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக டேவிட் டலி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான பேர்னாட் சவேஜ் ஜின் இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது டேவிட் டலி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக கன்பராவிலிருந்துகொண்டு செயற்பட்டு வருகிறார். பதவி விலகிச் செல்லவுள்ள பேர்னாட் சாவேஜ் 2009ஆம் ஆண்டின் இறுதிப் போர் இடம்பெற்ற வேளையில் இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிடப் பிரதிநிதியாக சிரமமானதொரு வேளையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

பிரித்தானிய பிரதமர் மாநாட்டில் பங்கேற்பதற்கு கண்டனம்
இலங்கையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக பிரித்தானிய பிரதமர் அறிவித்துள்ளமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களை காரணம் காட்டி, இங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதனை மீறி இம்மாநாட்டில் தாம் பங்கேற்கவிருப்பதாக, டேவிட் கெமரூன் அறிவித்திருந்தார். இதனைக் கண்டித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் ஊடாக, இலங்கை அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நீர்த்துப் போவதை சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பதாக அமையும் என்றும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது

தமிழக முதல்வரின் கருத்துக்கு கருணாநிதி மறுப்பு
கச்சத்தீவின் உரிமத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியமைக்கு தாம் உதவி செய்யவில்லை என முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிடம் இருந்து கச்சத்தீவின் உரிமத்தை இந்தியா மீளப்பெற வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கைக்கு கையளிக்க கருணாநிதி மத்திய அரசுடன் ஒத்துழைத்தார் என தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுத்துள்ள கருணாநிதி, 40 வருடங்களுக்கு முன்னர் கச்சத்தீவின் அதிகாரத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மறுநாள், தாம் இவ்விடயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்களில் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளார்.