மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டம்– இலங்கையில் விசேட மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலர் கமலேஷ் ஷர்மாவுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை இலக்காகக் கொண்டு உத்தேச மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். ஆறுமாத காலத்திற்கு இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ள- தாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 
வாக்காளர் இடாப்பு திருத்தம் இம்மாதம் ஆரம்பம்– 2013ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நடைபெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு நிரப்பப்பட்ட படிவங்கள் ஜூன் முதலாம் திகதிமுதல் சேகரிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 
 
நீர்கொழும்பில் மழையினால் பெரும் பாதிப்பு– நீர்கொழும்பு நகரில் இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உட்ப பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தின் பல்லன்சேனை வீதி, கட்டவ பிரதேசம், நகரமத்தியில் தம்மிட்ட வீதி மற்றும் போலவலான பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளநீரினால் பாதிக்கப்பட்டுள்ளன சட்டவிரோத கட்டிடங்கள் காரணமாகவும், பிரதான வடிகான் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக வடிகானில் நீர் நிறைந்து இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுபோன்று அடிக்கடி ஏற்படுவதாகவும் தளுபத்ததை பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை பெரும்பாலான மாணவர்களுக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
லயன் எயார் விமான எச்சங்கள் மீட்பு– புலிகளால் 1998ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் என்டனொட் 24 லயன் எயார் விமானத்தின் சில பகுதிகளும் மற்றும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மனித எலும்புக்கூட்டின் சில பாகங்கள், மனிதர்கள் பாவிக்கும் தங்கப்பல் மற்றும் விமானத்தில் உபயோகிக்கப்படும் பல இயந்திர உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளன. 1998ம் ஆண்டு பலாலி விமானத் தளத்திலிருந்து கொழும்பு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இரணைதீவு பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.. சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த விமானம் வீழ்ந்த இடம் கண்டறியப்பட்டு, மீட்புப் பணிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
காணி பொலீஸ் அதிகாரங்களை நீக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை-அமைச்சர் தினேஷ் குணவர்த்தன- வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிடவேண்டும் என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். எது எவ்வாறெனினும் தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு அமைவாக செயற்படவேண்டியது தேர்தல் செயலகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கில் வாழ்ந்த தற்போது வெளி மாகாணங்களில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்குத் தேர்லில் வாக்களிக்க முடியுமான வகையில் தேர்தல்கள் ஆணையாளர் ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். 
 
இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி– இந்தியாவின் வட பிராந்தியத்திற்கு செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பௌத்த வெளிநாட்டு பயணிகள் செயல்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கையிலிருந்து புத்தகாயா வரணாசி போன்ற மத வழிபாட்டு பிரதேசங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இதேவேளை, இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பௌத்த யாத்திரீகர்கள் தற்போது கொழும்பிலிருந்து நேரடியாக புதுடெல்லிக்கு விமானம்மூலமே செல்வதாக கூறப்படுவதுடன், 37ஆயிரம் இலங்கை ரூபாவினை இதற்கென அவர்கள் செலவிடுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. தென் இந்தியாவில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை காரணமாகவே நேரடியாக விமான்மூலம் அவர்கள் செல்கின்றனர். 
 
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 65பேர் கைது– இந்தியாவிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற 65 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று அதிகாலை காலி, ஹிக்கடுவ கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கைதானவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.