08.05.2013.
 
புலனாய்வுத் தகவல்களை பரிமாற வேண்டியது அவசியமாகும்-பாதுகாப்பு செயலர்

நாடுகளுக்கு இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புலனாய்வுத் தகவல்களை வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு இடையில் அவை பகிரப்பட வேண்டுமெனவும், நிதிப் புலனாய்வுப் பிரிவுகள், புலனாய்வு முகவர் நிறுவனங்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் ஆகிய தரப்பினருக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய வலய மாநாடொன்றில் பங்கேற்றிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது. பயங்கரவாதம், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல், போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிராந்திய வலயங்களுக்கு இடையில் புலானய்வுத் தகவல்கள் காத்திரமான முறையில் பகிரப்பட வேண்டும். புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு வழிகளில் அவர்கள் இயங்கி வருவதடன், நிதி திரட்டி இலங்கைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அண்மையில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் ஆயுதப்பயிற்சி வழங்கவும் முயற்சி எடுத்திருந்தனர். நாடுகளுக்கு இடையில் வலுவான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் காரணமாகவே இந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடிக்க முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார். 
 
பயங்கரவாதச் சட்டம் நீக்கப்பட மாட்டாது- பிரதமர் டீ.எம்.ஜயரத்ன-

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம் என்றும் அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை எனவும் பிரதமர் டீ.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர்.  இதனையிட்டு கவலையடைகின்றேன். எதிர்க்கட்சித் தலைவரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இது குறித்துப் பேசுகிறார் என நினைக்கிறேன். 
அசாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்களில் இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இலத்திரனியல், அச்சு ஊடகங்களினூடாக கருத்துகளை வெளியிட்டுவந்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாகவும் இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திலிருந்து விலகப்போவதில்லை-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகாது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தன்னுடைய கட்சி அரசுடன் கருத்து வேறுபாடுகளை கொண்டுள்ளபோது, அவ்வாறான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் டிலான் பெரேரா மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆலய காணியில் கட்டிடம் நிர்மாணிக்கத் தடை

கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்திற்கு உரித்தான காணியில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் காணியை அத்துமீறி அபகரித்தமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக உதிரவேங்கை ஞானவைரவர் ஆலயத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த குறித்த காணியில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வர்த்தகர் ஒருவரால் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. வர்த்தகரின் இந்த செயற்பாட்டை ஆலய நிர்வாகம் மற்றும் பிரதேசத்தின் பொது அமைப்புகள் எதிர்த்தன. எனினும் அவை எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் அவர் கட்டுமாணப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், மேற்படி காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆலய நிர்வாகம் கடந்த 06ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்தது. வழக்கை விசாரணை செய்த நீதவான் எம்.ஜ.வஹாப்தீன் குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், பிரதிவாதியான வர்த்தகரை காணி குறித்த ஆவணங்களுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்கு கடிதம் கிடைப்பதில் தாமதம்-

வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் உரிய வகையில் பொதுமக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வவுனியா பிரதம தபாலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் கடிதங்கள் குறைந்தது ஒருநாளுக்குள் குறிப்பிட்ட முகவரி உடைய நபருக்கு கிடைத்துவிட வேண்டும். மாறாக மூன்று, நான்கு நாட்களின் பின்னர் கிடைப்பதாகவும் சில கடிதங்கள் தமக்கு வந்து சேராது இருப்பதாகவும் வேப்பங்குளம், குட்செட்வீதி, வெளிக்குளம், முருகனூர், நெளுக்குளம் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு தமக்கு கிடைக்காத கடிதங்களுக்குள் பல்வேறு முக்கியமான கூட்டக் கடிதங்கள் உட்படுவதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறுகின்றனர். எனினும் கடிதம் காலதாமதமாகக் கிடைப்பது குறித்து பொதுமக்களின் முறைப்பாடுகள் நேரடியாக தமக்கு கிடைக்கவில்லை எனவும். உரிய வகையில் முறைப்பாடுகள் தலைமை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் பட்சத்தில் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வவுனியா தபாலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான சகல பணிகளையும் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால் நிர்க்கதிக்குள்ளான மக்களுக்குத் தேவையான சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான வகையில் வடிகான்களை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.