மடுவுக்கான ரயில் போக்குவரத்து சேவை-
மன்னார்,மடு தேவாலயத்துக்கான ரயில்சேவை எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மடு தேவாலய வருடாந்த திருவிழா ஆரம்பமாகவுள்ளதால் அங்கு செல்லவுள்ள பக்தர்களின் நன்மை கருதி மதவாச்சியிலிருந்து மடு வரையான சுமார் 106 கிலோமீற்றர் நீளமான தலைமன்னார் ரயில்பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகளில் முதற்கட்டம் தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில் அடுத்தகட்ட புனரமைப்புப் பணிகள் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. முதற்கட்ட பணிகளுக்கு மட்டும் சுமார் 81 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை புனரமைப்பு பணிகள் கடந்த 2011, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மாகாணசபை உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள்-
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்த அமைச்சரவைப் பத்திரம் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இரண்டரை வருடங்களுக்கு மேல் மாகாணசபை உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்யமுடியும். அத்துடன் நாடாளுமன் உறுப்பினர் 5 வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ்-
தமிழக அகதி முகாம்களில் பிறந்த இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இவ்வாரத்தில் மாத்திரம் 300 பிறப்பு சான்று பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 வருட காலப்பகுதியினுள், தமிழக முகாம்களில் பிறந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மதுரை, ராமேஷ்வரம், கூடலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பல நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு இலங்கை பிள்ளைகளுக்கான பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிட்னியில் பெண்களை தாக்கியதாக இலங்கையர்கள்மீது குற்றச்சாட்டு-
அவுஸ்திரேலியாவின் கிழக்கு சிட்டி நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமிமீது தாக்குதல் நடத்தியதாக இரு இலங்கையர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பரமட்டா பகுதி வர்த்தக நிலையத்தில் 31, 39 வயதுடைய இரு பெண்களும் 14 வயது சிறுமியும் நேற்று பொருட்கள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை நாடி வந்த இருவர் அவர்கள்மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் 20 மற்றும் 47 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளை கைதுசெய்துள்ளனர். இவ்விரு இலங்கையர்களும் அவுஸ்திரேலியாவின் வெஸ்ட்மீட் பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள்மீது வழக்கு தாக்கல்செய்து விசாரணை நடாத்தியபோது இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவது அவசியம்–
சரத் பொன்சேகா- கூடிய விரைவில் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கோரிக்கை முன்வைத்துள்ளார். ஏனைய மாகாணசபை தேர்தல்கள் நடாத்தப்பட்டவாறு வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள பிரிவினைவாத சரத்தை சீர்திருத்தாது வட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க ஏற்பாடு–
வடக்கிலிருந்து இடம்பெயயர்ந்து வேறு மாகாணங்களில் தங்கியுள்ள மக்கள் தமது பூர்வீக இடங்களில் வாக்களிப்பது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும், ஆவணங்களையும் கைவிட்டு, வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் தங்கியிருக்க நேரிட்டுள்ளதாக அதில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் வடமாகாணத்தில், உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த போதிலும் நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் தங்கியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிக்க இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
தயா மாஸ்ரர் வேண்டாம்;-சரத் பொன்சேகா-
புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன். ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மூதூரில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு-
திருகோணமலை, மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. மூதூர், சீதனவெளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் கிளிவெட்டி, பட்டித்திடல் முகாம்களில் உள்ளவர்களுக்கே கையளிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே 56 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டமாக 18 குடும்பங்களுக்கான வீடுகள் இன்று கையளிக்கப்பட்;டுள்ளன. மேலும் 50 வீடுகளை கட்டுவதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பல்-
சிரியாவில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளின் மத்தியில் அங்கு சிக்குண்டு இருந்த இலங்கையர்கள் இரண்டு விமானங்களில் இன்று நாடு திரும்பியுள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேச குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவியுடன் இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் ரஞ்சித் குணரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.