12.05.2013.
மன்னார் ஆயர் தலைமையில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுற்பகல் 10மணியளவில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இது விடயமாக தமிழ்க் கட்சிகள் தமது கருத்துக்களை விரிவாக எடுத்துக் கூறியதுடன், கூட்டமைப்பைப் பதிவுசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். இதன்போது தமிழரசுக் கட்சியானது படிப்படியாக இந்நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது இதிலிருந்து கூட்டமைப்பை பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு நாட்டமில்லை என்பதை அது தெளிவாகக் காட்டியது. இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆயர் இராயப்பு ஜோசெப், தமிழ்க் கட்சிகள் இது விடயத்தில் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமென்ற கருத்தினை முன்வைத்ததுடன், தாம் சிவில் சமூகம் என்கிற ரீதியில் இவ்விடயத்தில் பெரியளவில் தலையிட்டு தீர்த்துவைக்க முடியாது என்றும் தமிழ்க் கட்சிகளே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து நேற்றுபிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ்மக்களின் குறைந்தபட்சம் அனைவரும் இனங்காணக்கூடிய நிலைப்பாட்டினை எட்டுவதற்கு மூவர்கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் இதுபற்றிய அறிக்கையினை எதிர்வரும் 08ம் திகதி சமர்ப்பிப்பது என்று தீர்மனிக்கப்பட்டதுடன், மீண்டும் இது விடயமாக 08ம் திகதி கூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு–
கொழும்பு-03, கொள்ளுபிட்டி கடற்கரை வீதியில் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த கந்தானையைச் சேர்ந்த 27வயதான அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோ என்ற ஊடகவியலாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் புலிகளையும் களமிறக்குவதற்கு அரசு நடவடிக்கை-
வடமாகாண சபைத் தேர்தல் களத்தில்; புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாக களமிறக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆரம்பக் கட்ட ஆலோசனைகள் சாதகமாக முடிவடைந்துள்ளதாகவும், இறுதிக் கட்டப் போரின்போது படையினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரே வட மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம்-
வட மாகாணத் தேர்தலை நடாத்தும் முன்னர் அந்த மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பெயர்களை வட மாகாண வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்காக தேர்தல் சட்டமூலத்துக்கு திருத்தமொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், ரிஷாத் பதியூதீனும் ஆரம்பித்துள்ளனர். இதேவேளை வட மாகாணசபைத் தேர்தல்களுக்கு முன் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
ஜேர்மன் தூதுவர் யாழ்பாணதிற்கு விஜயம்- ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜே.ரேகன் மோஹார்ட் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவை அவர் நேற்று சந்தித்து பேசியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற மீளமைப்பு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பிலும், இராணுவ பிரசன்னத்தை குறைப்பது குறித்தும் அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர் பல்வேறு பிரதேசங்களையும் நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
உலக வங்கியிடம் இலங்கை நிதியுதவி கோரல்-
உலக இலங்கை 70 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவியைக் கோரியுள்ளது. வரவு செலவு திட்ட பிரேரணைகளை அமுல்படுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 கோடி அமெரிக்க டொலர்களை பெற திறைசேரி தவறிய நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பல குறைந்த தொகையான நிதியினை, இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளிலிருந்து பெறும் முயற்சியிலேயே திறைசேரி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக ஹிருனிகா அறிவிப்பு–
அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்ளப்போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை எனவும் எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். முழு அளவில் அரசியலில் ஈடுபட போதியளவு ஆதரவு தேவைப்படுகிறது. சட்டக் கல்லூரி பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அரசியலில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்படும். இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது. குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என ஹிருனிகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை-
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடல் பிராந்தியங்களில் பிரவேசிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கமைய 1983ஆம் ஆண்டு தமிழக கடற்பிராந்திய சட்டத்தினை மீறும் மீனவர்களுக்கு எதிராக அவர்களின் இழுவைப் படகுகளின் தொழில்பாடுகளை இடைநிறுத்த முடியும் என மாவட்ட ஆட்சியாளர் கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தமது படகுகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை எடுத்துச் செல்லக் கூடாது எனவும் அவர் மேலும் அறிவுறுத்திக் கூறியுள்ளார்.
19ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு-
19வது அரசியல் சீர்த்திருத்தத்தினை முன்ன்னெடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது எதிர்ப்பை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி கருத்து தெரிவிக்கையில் இவ்விடயத்தினைக் கூறியுள்ளார். 19வது அரசியல் சீர்த்திருத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், 17வது அரசியல் சீர்த்திருத்ததில் தெரிவிக்கப்பட்டுள்ள, காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் அகற்றப்படும் எனவும், காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை அகற்றுவது நியாயமற்றது என தமது கட்சி கருதுவதாகவும் ஹசன் அலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காத்தான்குடி கைகலப்பில் மூவர் காயம்-
மட்டக்களப்பு, காத்தான்குடியில நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள காணியொன்றில் காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்றை அமைப்பதற்காக அக்காணியை அடைத்து வேலி போட்டுக்கொண்டிருந்தது. மேற்படி காணி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்கு சொந்தமான மையவாடிக் காணியென கூறி அப் பள்ளிவாயலின் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவ்விடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் காத்தான்குடி நகரசபையால் போடப்பட்ட வேலியை உடைத்ததுடன் அங்கு போடப்பட்ட தூண்களையும் பிடுங்கியுள்ளனர். இதையடுத்து இவ்விடத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் 3பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு விரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் நிலைமையை கட்டு;பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் இதுபற்றி விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.