14.05.2013.

எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து உள்ளன-கபே-

இலங்கையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமடைந்த நிலையில் இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. தேர்தல்களில் போட்டியிடுவது மாத்திரமே எதிர்க்கட்சிகளின் கடமையாகாது என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் நிலவும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான மக்களின் எதிர்ப்பைக்கூட சரியான முறையில் எதிர்க்கட்சிகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கங்களுக்காகவே செயற்படுகின்றன. இந்நிலையில் சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புக்களின் ஊடாக போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என கீர்த்தி தென்னக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீருக்காக அலையும் ஒட்டுசுட்டான் பேராறு மக்கள்-

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள பேராறு கிராமத்தில் குடிதண்ணீர் தேடி மக்கள் அலைந்து திரிவதாக தெரியவருகின்றது. பேராறு கிராமத்தில் வசிக்கும் அநேகமானோர் விவசாயத் தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இவர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் காணிகளுக்கும் உரிய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இங்கு ஏற்கனவே உள்ள குழாய்க்கிணறுகள் பழுதடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீரைத் தேடி நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய அவலநிலை இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர்ப் பிரச்சினையை சீர்செய்ய வேண்டுமென்று இம்மக்கள் கேட்கின்றனர். 

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் 2000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் சரத் லால்குமார தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 704 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்;டுள்ளனர். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் இருவர் காணாமற்போயுள்ளனர். 18 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சுமார் 500வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 239 குடும்பங்களைச் சேர்ந்த 970பேர் நான்கு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என அவர் மேலும் கூறியுள்ளார்.

மின் கண்டன உயர்வுக்கு எதிராக நடைபயணம்-

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வர்த்தக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து நாளை நடைபயணம் ஒன்றில் ஈடுபடவுள்ளன. இந்த நடைபயணத்தில் வர்த்தக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல கலந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீர்ப்பாசன நீர்வள மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, மின் கட்டணத்தை குறைக்கும் பட்சத்தில் மின்சார சபையை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்

வெளிநாட்டு மாணவர்களுக்கு 1292 வெற்றிடங்கள்-

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1,292 வெற்றிடங்கள் நிலவுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 5 வீதமான இடம் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் மருத்துவ, விஞ்ஞான கற்கைநெறியை விடுத்து ஏனைய கற்கைநெறிகளுக்கு வெளிநாட்டுத் தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கையர்களோ அல்லது வெளிநாட்டு மாணவர்களோ விண்ணப்பித்துக் கொள்ளாமையே வெற்றிடம் ஏற்படுவதற்குக் காரணமாகியுள்ளது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்; உத்தியோகத்தர்கள் 14பேருக்கு இடமாற்றம்-

கொழும்பை அண்மித்துள்ள பாதுக்க பொலிஸ் நிலையத்தின் 14 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது மக்கள் சேவையில் செயற்திறனற்று இருந்தமையைக் கருத்திற்கொண்டே இந்த உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். இடமாற்றம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களுள் பாதுக்க விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும், மூன்று மகளிர் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக மேற்படி பொலீஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உகண்டாவில் தூதுவராலயம்; திறந்துவைப்பு-

உகண்டாவிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறந்துவைத்துள்ளார் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இந்த உயர்ஸ்தானிகராலயம் நேற்றையதினம் முதல் செயல்படுவதாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக இணைப்பாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார் உகண்டா மற்றும் இலங்கைக்கு இடையேயான ராஜதந்திர நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக இது அமைந்ததென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உகண்டாவின் யோவேரி கக்குட்டா முசவேனியும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.