plot T.Sதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (12.05.2013)தமிழ் தந்திக்கு வழங்கிய செவ்வி

வெளிநாடு ஒன்றில் இருந்து நாங்கள் கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியா பறித்தமையே எமது இயக்கம் பலவீனப்படுவதற்கு காரணம்
‘புளொட்டினால் வெளியிடப்பட்ட ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல் இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையும் புளொட்டின் ஆயுதப்போராட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் எமது பின்னடைவிற்கு ஒரு காரணமாக காணப்படுகின்றது.’

கேள்வி:- தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழ்தேசியக்கூட்டமைப்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவை ஊடகங்களில்  கூட  வெளிவந்திருக்கின்றன. அவை  கொள்கையின்  அடிப்படையில் ஏற்பட்டிருக்கின்ற  முரண்பாடுகள்  அல்ல. அவை  நடைமுறையில்  ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளாகவே  காணப்படுகின்றன. எமது  கட்சியைப் பொறுத்தவரையில் இரண்டுவருடங்களிற்கு  முன்னதாக  கடந்த  உள்ளூராட்சி சபைத்  தேர்தலுடனேயே கூட்டமைப்புடன்   இணைந்துகொண்டோம். தமிழ்  மக்களின்  ஒற்றுமையை பிரதிபலிக்கவேண்டும் ஒரு பலமான கூட்டமைப்பைக் கட்டியெழுப்பவேண்ம் என்ற ஒரேயொரு நோக்கத்துடனேயே இணைந்துகொண்டோம். நாங்கள் தனிப்பட்ட எந்த ஒரு விடயத்தையும்  முன்வைத்திருக்கவில்லை. குறிப்பாக  தேர்தலில்  கூட  எமக்கு வேட்பாளர்கள்  இத்தனை பேர் வேண்டும். பல இடங்களில்  போட்டியிடவேண்டும் என நாம் பெரியளவில்  கோரியிருக்கவில்லை. அவர்கள்  கூட  அதனை  தரவுமில்லை. கூட்டமைப்பினுள்  ஒரு ஒற்றமை  கொண்டுவரப்பட வேண்டும்  என்பதன் காரணத்தால் அதனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுக்கவில்லை. அவ்வாறு ஒரு ஒற்றுமையை கட்டியெழுப்புவதாயின் சரியான ஒரு அமைப்பு கூட்டமைப்பிற்கு வழங்கப்படவேண்டும். இதனையே  நாம் நீண்டகாலமாக  கேட்டுக்கொண்டிருக்கின்றோம். இதனை  நாம் மத்திரமின்றி எமக்கு முன்னதாகவே கூட்டமைப்பில் காணப்படும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்   போன்ற கட்சிகளும்  வலியுறுத்தி  வருகின்றன. இது தேர்தலை அடிப்படையாக  வைத்து  கோரப்படும்  விடயமல்ல. தமிழ்  மக்களுக்காக  தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் அப்போதைய கடினமான நிலைமையில் தமிழர்விடுதலைக்கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் கூட தமது கட்சி நலனை எல்லாம் பின்தள்ளி தமிழர் கொங்கிரஸ், தமிழரசுக்கட்சி என்பவற்றை இணைத்து தமிழர்விடுதலை கூட்டணியாக முன்னிறுத்தி செயற்பட்டார்கள். அது மிகப்பலம் பொருந்திய சாத்வீக விடுதலை இயக்கமாக மக்கள் மத்தியில் உருவாக்கம் பெற்றது. ஆனால் இன்றிருக்ககூடிய நிலைமையில் ஒரு ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுடைய விடுதலையை நோக்கிநாம் முன்னேற வேண்டுமாயின் ஒரு பலம்பொருந்திய  அமைப்பு  அவசியமாகின்றது. தனித்தனிக்கட்சியாக  தம்மை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு மாத்திரம் கூட்டமைப்பு என கூறிநின்றால் நியாயமான தீர்வை   நோக்கி   செல்வதில்  பாரிய பின்னடைவு   ஏற்படும்.  ஆகவே  தான்  இன்று    இந்த  விடயத்தை   கருத்தில்  கொண்டு   பல  பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலர் இதில் தலையிட்டு பேசிக்கொண்டிருக்கின்றார்கள். முடிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

கேள்வி:- மன்னார் ஆயர் ஊடாக உங்களுடைய கட்சி உட்பட நான்கு கட்சிகளின் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைமைகள் தற்போது காணப்படுகின்றன?
பதில்:- மன்னார் ஆயரை நாம் உட்பட நான்கு கட்சிகளும் ஒன்றுசேர்ந்து சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்தி ஒரு அமைப்பொன்றைகொண்டு வரவேண்டும். அதற்கு அவரை  மத்தியஸ்தம்  வகிக்கும்படி  கேட்டிருந்தோம். அதன்  பின்னர் ஆயர் தமிழரசுக்கட்சியுடன் கலந்துரையாடியுள்ளார். அது தொடர்பான விடயங்களை அடுத்த சந்திப்பில் கூறுவார் என எதிர்பார்க்கின்றோம்.  அதேநேரம் எதிர்வரும் பதினொராம் திகதி மீண்டும் மன்னார் ஆயர் தலைமையில் கட்சிகளுக்கு ஒரு கூட்டம் நடைபெறவுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்துள்ளது. உண்மையிலேயே ஆயர் பத்திரிகைகளுக்கு  வழங்கிய அறிக்கையின் பிரகாரம் அதனை தெளிவாக கூறியுள்ளார். அதனால் நாம் எடுத்துக் கொண்ட விடயங்கள் சம்பந்தமாக பேசப்படமாட்டாது என நான் நினைக்கின்றேன். அதாவது கூட்டமைப்பை பதிவுசெய்வதைத்தாண்டி ஒரு பொதுவேலைத்திட்டத்தின் பிரகாரம் எல்லாக்கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தவேண்டும். அதற்குள் ஐந்து கட்சிகளை மாத்திரமல்ல வேறு கட்சிகளையும் அதற்காக ஆயர் அழைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. ஆகவே எதிர்வரும் சந்திப்பில் இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என கருதமுடியாது. அதேநேரம் ஆயர் வேறு ஒரு வழியில் கூட்டமைப்பை பெரிதாக அமைக்கவேண்டும் என்பதிலேயே அக்கறைசெலுத்துக்கின்றார் என கருதுகின்றேன்.

கேள்வி:- திம்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர் என்ற ரீதியில் திம்பு திட்ட வரைபுகளை தற்போதுள்ள சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என கருதுகிறீர்கள்?
பதில்:- எமது கட்சி புளொட், விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், தமிழர்விடுதலைக்கூட்டணி என ஆறுகட்சிகளின் பிரதிநிதிகளும் திம்புவிற்கு சென்றிருந்தோம். இந்த ஆறு கட்சிகளில் விடுதலைப்புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரிலே இயங்கிக்கொண்டிருந்தாகள். அந்த நேரத்தில் அரசியல் அவதானிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை நாம் அனைவரும் வித்தியாசமாக வேறுபாட்டுடனேயே பேசப்போகின்றோம் என கருதினார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்வுகூறல்களையும் எதிர்பார்ப்புக்களையும் முறியடித்து ஆறு கட்சிகளும் ஒரே குரலில் ஒற்றமையாக எமது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். குறிப்பாக ஒவ்வொரு இரவுப்பொழுதிலும் எமக்காக ஒதுக்கப்பட்ட தங்குமிடங்களில் ஒன்றுகூடி நாளை யார்பேசுவது என்னபேசுவது போன்ற விடயங்களை கலந்துரையாடி தீர்க்கமாக எடுத்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டோம். இந்த ஒற்றுமையானது தமிழினத்திற்கு எதிராக இருந்த பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அவ்வாறான ஒர் ஒற்றுமையான செயற்பாட்டை அதன் பின்னர் நான் இங்கு காணவில்லை. அப்போதைய காலத்தில் ஆயுத இயக்கங்களிடையே பரஸ்பரம் பகைமை உணர்வு கூடுதலாக இருந்த காலமாகும். அந்த நேரத்திலே மிக ஒற்றுமையாக செயற்பட்டமை மிகப்பெரிய விடமாகும்.
நாம் அந்த பேச்சு வார்த்தையின் போது தமிழர் தனித்துவத்தேசிய இனம், தனியானதாயகம், சுயநிர்ணய உரிமை, சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் என நான்கு கொள்கைகளை முன்வைத்திருந்தோம். இவை கொள்கை ரீதியிலான விடயங்கள். இந்தக்கொள்கைகள் என்றுமே செல்லுபடியாகக்கூடிய விடங்கள். அன்றைய காலத்தில் நாம் இந்த கொள்கைகளை முன்வைக்கும் போது அங்கிருந்த தமிழர்விடுதலைக்கூட்டணி உட்பட அனைத்துக்கட்சியினரும் தமிழீழக் கோரிக்கையை கைவிட தயாராக இருக்கவில்லை. அதேநேரம் அராசங்கம் 1983 கலவரங்களின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைத்த அதே பிரேரணைகளைத்தான் திம்புவிலும் மாற்றமில்லாது முன்வைத்தார்கள். இவை ஏற்கனவே தமிழர் விடுதலைக்கூட்டணியால் மிகவும் கீழ்நிலையில் இருப்பதாக கூறி மறுக்கப்பட்வை. ஆதனை பார்த்தவுடனேயே இந்தப்பேச்சுவார்த்தையில் எவ்விதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை என்ற எண்ணப்பாடு எங்கள் அனைவரிடமும் தோன்றியது. அகவே எங்களுடைய நிலையில் இறுக்கமாக நிற்கவேண்டும் என்ற மனப்பான்மை எமக்குள் உருவானது. தமிழீழக்கோரிக்கை அடிப்படையாக இருப்பினும் அதற்கு மாற்றாக ஒரு நியமான  தீர்வை  வழங்குவதற்கு  அரசு  தயாரகவில்லை  என்ற  காரணம்  தான் அப்பேச்சுவார்த்தையும் முறிவுக்குவருவதற்கு நிச்சயமான காரணமாக உள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற படுகொலைகளை வைத்து நாம் வெளியேறியிருந்தாலும் இதுதான் பின்னணியில் காணப்படுகின்றது. இதனை இந்தியாவிற்கு தெளிவாக நாம் விளங்கப்படுத்தியிருந்தோம். சில அதிகாரிகளுக்கு விளங்காது இருப்பது வேறுவிடயம்.
“அரசதரப்பு மிக கீழே இருந்து தான் ஆரம்பிப்பார்கள் அவர்கள் ஒரு படி மேலேசென்றால் நீங்கள்  கீழே  வாருங்கள்  இல்லையேல்  வராதீர்கள். அவ்வாறு அவர்கள் மேலே வரும்போது சந்திப்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றதா என பார்த்து செயற்படவேண்டும். தெளிவாக இப்பேச்சுவார்த்தையை கையாளவேண்டும்” என கலைஞர் கருணாநிதி கூட இப்பேச்சுவார்த்தைக்கு முன்னதாக என்னை சந்திக்கும் போது கூறியிருந்தார். அதேபோன்று டெல்லியில் பார்த்தசாரதி போன்றவர்களை நேரில் பார்த்து கதைத்திருந்தேன். அந்த கோட்பாடுகள் இன்றும் செல்லுபடியாகக்கூடியவை. ஆகவே அதன் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை இன்று கொண்டுவர முடியும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இருக்கமுடியாது.

கேள்வி:- நேரடியான பேச்சுவர்த்தைகளின் போது இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு காணப்பட்டது?
பதில்:- முதற்தடவையாக திம்புவில் தான் ஆயுதக்குழுக்களுடான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதற்காக இந்தியா, இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக்குழுக்களுக்கு அழுத்தங்களை வழங்கியிருந்தது. பொதுவாக இந்தப்பேச்சுவார்த்தையை எவ்வாறு எடுத்துச்செல்வது முறிவடையும் நிலை வரும்போது இருதரப்பிடமும் தொடர்ந்து பேசுமாறு கோரிக்கைவிடுதல் போன்ற விடயங்களில் மட்டுமே தலையிட்டார்கள். ஆறுகட்சிகளும் கலந்துரையாடி நான்கு வரைபுகளை முன்வைத்தோம். இலங்கை அரசாங்கத்தினால் பேச்சுவார்த்தை முறிவுக்கு வர அதன் தொடர்ச்சியாக இந்திய இலங்கை ஒப்பந்தம் பிற்காலத்தில் வந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு எங்கள் மீதும் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தே கைச்சாத்திடப்பட்டது. ஓப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னைய நாளில் தான் அந்த வரைபு எமக்களிக்கப்பட்டு அதனை பார்வையிடலாம் மாற்றங்களை செய்யமுடியாது என இந்தியாவால் அழுத்தமாக கூறப்பட்டது. உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் அது தொடர்பிலான விடயங்களை பின்னர் பார்க்கலாம் என ராஜீவ் அரசு கூறியது. அதன் பின்னர் அழுத்தங்களின் மத்தியிலேயே தான் கைச்சாத்திடப்பட்டது.
தற்போது விடுதலைப்புலிகளின் யுத்த தோல்விக்கு பின்னர் நாம் எல்லாவிதத்திலும் பின்னடைந்திருக்கின்றோம் பலவீனமாக இருக்கின்றோம். ஆகவே இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்வதற்கு முதற்படியாக நாம் ஏதாவது செய்துகொள்ளவேண்டும். கிழக்கில் பெரும்பாலும் குடிப்பரம்பல் பாரியமாற்றம் ஏற்பட்டுவிட்டுது. அதே நிலை வடக்கிலும் தற்போது சிறுகச்சிறுக நடைபெற ஆரம்பித்திருக்கின்றது. நாம் 65வருடங்களுக்கு மேலாக பேசிவிட்டோம். ஆனால் எந்தவொரு நியாயமான தீர்வையும் பெறமுடியவில்லை. 1987ஆம் ஆண்டு நியாயமாக இல்லா விட்டாலும் இந்திய இலங்கை ஒப்பந்த தீர்வொன்றே  எமது  கைகளுக்கு  கிடைத்தது. அதன் பிரகாரம் தான் 13ஆவது திருத்தச்சட்டம்  கொண்டுவரப்பட்டது. அது  கூட  தற்போது  படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் நிறுத்தப்பட்டு மீண்டும் 13பிளஸ் கொண்டுவரப்படவேண்டும். இவைகள் நிறுத்தப்படாவிட்டால் இன்னும் 5-10வருடங்களில் பேசுவதற்கு ஒன்மே இருக்காது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். இதனைக் கூறுவதால் என்னை நம்பிக்கை இழந்தவன் என்று கூட சிலர் நினைப்பார்கள். யதார்த்த ரீதியில் பார்க்கையில் இன்றைய அரசு அவ்வாறான நிகழ்ச்சித்திட்த்திற்கேற்பட வேலைசெய்துகொண்டிருக்கும் உண்மையை பலர் அறிந்திருந்தும்  அதனை  அறியாதவர்கள்  போல நடிக்கப்பார்க்கிறார்கள். இந்த நிலைமையயை இவ்வாறாவது காப்பாற்றுவதற்கு எதாவது உடனே செய்தேயாகவேண்டும்.

கேள்வி:- சட்டத்தரணி சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் ஆகியோரை இந்திய அரசாங்கம் கடத்தியதன் பின்னணி என்னவாக உள்ளது?
பதில்:- உண்மையிலேயே ரெலோஅணிக்காக சத்தியேந்திரா பேச்சுவார்த்தை மேடைக்கு வர காரணமாக இருந்தவர் சந்திரகாசன் செல்வநாயம் என்ற நிலைமை அன்றிருந்தது. அதேநேரம் விடுதலைப்புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம் வருகைதந்திருந்தார். இவர்கள் ஆயுதக்குழுக்கள் மூலம் கடுமையாக செயற்படக்கூடியவர்கள் என அவர்களிடம்(இந்தியஅரசிடம்) அடிப்படை அபிப்பிராயம் காணப்பட்டதன் காரணத்தாலேயே அவர்கள் கடத்தப்பட்டார்கள். திம்பு பேச்சுவார்த்தையில் நாம் உறுதியாக எமது கொள்கைளில் இருப்பதற்கும் அதேநேரம் இறுதியில் பேச்சுவார்த்தையில் இருந்து நாம் வெளியேறுவதற்கும்  சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயம்  ஆகியோரின் அழுத்தங்கள் காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் இந்திய அரசாங்கம் கருதினார்கள். அதிகாரிகளுடன் பேசும் போதும் அதையே தான் கூறினார்கள். சத்தியேந்திரா நடேசன், அன்ரன் பாலசிங்கம், சந்திரகாசன் செல்வநாயகம் போன்றவர்கள் கடுமையாக செயற்படபோகின்றார்கள் என கருதியதில் ஒரு உண்மையில்லை. பாலசிங்கத்தை பொறுத்தவரையில் 1977இல் இருந்தே விடுதலைப்புலிகளுடன் மிக நெருக்கமாகபணியாற்றி ஆலோசகராகவே செயற்பட்டுவந்தவர்.

ploteகேள்வி:- புளொட் அமைப்பைபொறுத்தவரையில் ஆரம்பத்திலே லெபனானில் பயிற்சிபெற்று பலம்பொருந்திய அமைப்பாக காணப்பட்டது. பின்னர் அது பலவீமடைந்து சென்றமைமக்கான காரணம் என்னவாக இருக்கின்றது?
பதில்:- முதலாவது காரணமாக காணப்படுவது எங்களுக்கு ஆயுதம் கிடைக்காது விட்டமையே. வெளிநாடு ஒன்றிலிருந்து நாங்களாக முயற்சித்துக்கொண்டு வந்த ஆயுதத்தை இந்தியாவின் சென்னை நகரிலிருந்து வெளிக்கொண்டு வர இயலாது போனது. அதனை இந்திய அரசாங்கம் கைப்பற்றியது. இரண்டு அதிபார ஊர்திகளில் நிரப்பபட்ட ஆயுதங்களே அவ்வாறு கைப்பற்றப்பட்டன. அவை எமது கைகளுக்கு கிடைத்திருந்தால் அந்தநேரத்தில் பெரியதொரு ஆரம்பமாக இருந்திருக்கும். புளொட் ஒரு சுதந்திரமாக இயங்கும் இயக்கமாக இருக்குமே தவிர மற்றைய எவரின் சொல்லையும் கேட்டு நடக்காது என  அப்போது எங்களுடன் தொடர்பாடலில் இருந்த இந்திய அதிகாரிகள் எம்மீது வைத்த அவநம்பிக்கையும் ஒரு காரணமாகும். அதன் காரணத்தாலேயே பல உதவிகளை மறுத்திருக்கின்றார்கள்.
அடிப்படையாக ஆயுதக்குழுவொன்றுக்கு ஆயுதம் இல்லாது செயற்படுவது என்பது மிக கடினமான விடயம். அதன் காரணமாக  வடகிழக்கில் விடுதலைப்புலிகள் எம்மை தடைசெய்யும் போதும் அவர்கள் மற்றைய இயக்கங்களை தாக்கியது போல் எம்மையும் தாக்க முற்படுகின்றபோதும் நாங்கள் எம்மை தற்காத்துக்கொள்ள முடியாத நிலை உருவானது.  இதுவே எமது இயக்கம் பலவீனமடைவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்தியாவின் தலையீட்டினால் வங்களாதேசத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக கொமாண்டர் பதவியிலிருந்த லோரன்ஸ் லிப்சூல் (Lorenz Lifzultz) என்பவர் எழுதிய நூலின் தமிழாக்கமாகவே ‘வங்கம் தந்த பாடம்’ என்ற நூல்; 1985இல் புளொட்டினால் வெளியிடப்பட்டது. இந்தப்புத்தகத்தின் வெளியீடு இந்தியாவின் சொல்லை புளொட் கேட்டு நடக்காது என்பதையயும் புளொட்டின் ஆயுதப்புரோட்டம் தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக அமையுமே தவிர இந்தியாவின் நலன்களுக்காக அமையாது என்பதனை காட்டியிருந்தமையும் ஒரு காரணமாக காணப்படுகின்றது. உதவிகளை செய்ய மறுத்தது. ஆகவே இதுவும் எமது கட்சி பலவீனமடைவதற்கு ஒரு காரணமாக உள்ளதென கூறமுடியும்.

கேள்வி:- செப்ரம்பரில் நடைபெறவிருக்கும் வடக்கு மாகாணசபைத்தேர்தல் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- இன்றுவரை ஒருசரியான நிலைப்பாட்டிற்கு எமது கட்சி வரவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தேர்தல் தொடர்பில் இருக்ககூடிய சில கருத்துவேறுபாடுகள் அல்லது கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் இந்த நான்கு கட்சிகளுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையில் வேட்பாளர்களை நியமிப்பதில் இருந்த மிகப்பாரிய பிரச்சினைகள் இவற்றினை கருத்தில் கொண்டு இதே நிலைமைதான் வடக்கிலே வந்துவிடுமோ என்ற மனகிலேசம் ஒன்று நான்கு கட்சிகளிடையே இருந்துகொண்டிருக்கின்றது. இதன் காரணத்தால் நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் மிக விரைவில் அதற்கொரு முடிவெடுக்கவுள்ளோம். இன்று அரசு வடமாகாணசபைத்தேர்தலுக்கான பணிகளை ஆரம்பித்துவிட்டது. மிகத்தீவிரமாக அந்த நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு எந்தவிதமான ஒரு தேர்தல் வேலைகளையும் செய்யவில்லை. அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அபேட்சகர்களை தெரிவுசெய்யவேண்டும். அவர்களை இப்போது முதல் செயற்பட சென்றால் தான் வாக்குகளை சேகரிக்க முடியும். கட்சிகளுக்கிடையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடப்போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படவேண்டும். ஆனால் அவற்றை கூட தீர்மானிக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு மிகவும் இழுபறியான நிலையில் இருக்கின்றது. இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படும் என நினைக்கின்றேன்.

கேள்வி:- வடக்கில் தற்போது நடைபெறும் குடியேற்றங்களில் உள்ள சர்ச்சைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- இன்று முக்கியமாக இருக்கும் முறைப்பாடாக இதுவே காணப்படுகின்றது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அல்லது வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் வந்து குடியேறுவதை எவரும் தடுக்கவும் முடியாது அதனை பிழை என கூறவும்முடியாது அதனை வரவேற்கவேண்டும். அந்த போர்வையில் வெளியில் இருக்க கூடிய அல்லது சம்பந்தமில்லாதவர்ள் குடியேறுவதை நாம் அனுமதிக்கமுடியாது. முஸ்லீம்களை காட்டிலும் சிங்கள மக்கள் முல்லைத்தீவில் அதிகமாக குடியேறுவது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதே நிலைமை முல்லைத்தீவில் நீடித்துக்கொண்ட செல்லுமாகவிருந்தால் 2020,2021 தேர்தல்களில் தமிழ்மக்கள் சிறுபான்மையாக மாறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. அதேநேரம் வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தை அரச சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரித்து அப்பகுதி மக்களுக்கு நட்ட ஈட்டுக்களை வழங்கி அவர்கள் அதனை மறந்து ஓரிரு ஆண்டுகள் கடந்த பின்னர் அங்கு என்ன நடக்கும் யார் குடியேறுவார்கள் என கூறமுடியாத ஆபத்தான நிலை காணப்படுகின்றது. வடக்கில் உறுதிகாணிகளாக காணப்படுவதால் குடியேற்றங்களை செய்யமுடியாது அதனால் தான் அவர்கள் சுவீகரிப்பு நடவடிக்கைமூலம் திட்டமிட்டு கையகப்படுத்த முயற்சிசெய்கிறார்கள். 

கேள்வி:- இனப்பிரச்சினை தீர்வு நோக்கிய பயணத்தில் இந்தியா எவ்வாறன நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் என கருதுகின்றீhகள்?
பதில்:- தற்போது 70,80 கள் அல்ல. நிலைமைகள் முற்றாக மாறியுள்ளன. ஆகவே ஒரு எல்லைக்கு மேல் தங்களால் அழுத்தங்களை வழங்க முடியாது என அவர்களுடன் பேசும்போது கூறுகின்றார்கள். இருப்பினும் நாங்கள் அழுத்தத்தை வழங்குவோம் நீங்கள் அரசுடன் பேசித்தீர்வைக்காணுமாறு பகீரங்கமாக கூறுகின்றார்கள். இந்தியாவின் அழுத்தங்கள் உதவிகள் முக்கியமாக தமிழ் நாட்டு மக்களின் அழுத்தங்கள் ஒன்று இல்லாது இங்கு தீர்வு ஒன்று வரமுடியாத நிலைமையை இலங்கை அரசாங்கமே உருவாக்கியுள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் மிக இலகுவாக பேசித்தீர்த்துவைக்ககூடிய பிரச்சினையை இன்று சர்வதேசமயமாவதற்கு அரசாங்கமே காணரமாக இருக்கின்றது. இதற்கு நாங்கள் காரணமல்ல. கடந்தகாலங்களில் தொடர்ந்து வந்து பெரும்பான்மை அரசாங்கங்கள் தாங்கள் ஒரு நியாயமான தீர்வை வைப்போம் அதனை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை அதனால் முன்வைக்க முடியாதுள்ளது என தொடர்ச்சியாக கூறிவந்தன. இதனை இந்திய உட்பட வெளிநாட்டவர்கள் நம்பி யுத்தம் முடிந்தவுடன் தீர்வு வந்துவிடும் என கருதினார்கள். ஆனால் தீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை என்பதை இந்தியா உட்பட பல வெளிநாட்டவர்கள் உணரத்தொடங்கியுள்ளார்கள். ஆகவே தான் அவர்கள் அமெரிக்க பிரேரணைகள் ஐ.நா தீர்மானங்கள் போன்ற அழுத்தங்கள் மூலமே அதனை செய்யமுடியும் என கருதுகின்றார்கள். அதனைத்தான் நாங்களும் நம்பியிருக்கின்றோம். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  பாராளுமன்றத்திலும் , வெளியிலும்  இந்தியாவும் அமெரிக்காவும் தான் எமக்கு ஒரு தீர்வைத்தரவேண்டும் நாங்கள் வெளிநாட்டைத்தான் நம்பியிருக்கின்றோம் என கூறியுள்ளார்கள். ஆகவே அவ்வாறான அழுத்தங்கள் தான் எதாவது ஒரு தீர்வைபெற்றுக்கொடுக்க முடியும். (12.05.2013)

News13.05.2013.
மதவாச்சி மடு ரயில்சேவை நாளை ஆரம்பம்-

மதவாச்சியிலிருந்து மன்னாரின் மடுவிற்கான ரயில் சேவையானது 27 வருடங்களின் பின்னர் நாளையதினம் முதல் ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 43 கிலோ மீற்றர்களைக் கொண்ட இந்த ரயில் பாதை இந்திய அரசிடமிருந்து கடனாகப் பெற்ற நிதிமூலம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதவாச்சியிலிருந்து மடு வரையிலான ரயில்பஸ் சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இச்சேவைக்கு பொறுப்பான அதிகாரி பீ.ஏ. ஆரியரத்ன தெரிவித்துள்ளார். காலை, பகல் மற்றும் பிற்பகல் ஆகிய மூன்று வேளைகளில் இந்த ரயில்பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. மதவாச்சி – மடு ரயில்சேவை இறுதியாக 1986ம் ஆண்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் ஒருவர் கைது

கடத்தப்பட்டதாக கூறப்படும் காரொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன நுழைவாயிலுக்கு அருகில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பிற்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடத்தப்பட்ட கார் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைக்காக பயாகல பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழில் புயல்; மின்சாரம் தடை, உடைமைகள் சேதம்-

யாழில் இன்றுகாலை 6.35 மணியளவில் வீசிய புயல் காற்றினால் மல்லாகம் கோணக்குளம் இடம்பெயர் முகாமிலுள்ள தற்காலிக குடிசைகள்மீது சுமார் 25 பனைமரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இடி, மின்னலுடன் கூடிய மழையோடு வீசிய மினி புயல் காற்றினால் மக்கள் பெரும் அவலங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்த கோணக்குளம் முகாமைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (42) மற்றும் அவரது மகன் சுமந்தன் (13) ஆகியோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாவை கலட்டியில் வீடுமீது பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் சதீஸ்வரன் (43) என்பவர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலி, மாத்தறை படகுகள் ஒலுவிலில் கரையொதுங்கின-

தெற்கிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற படகுகள் கிழக்கில் கரையொதுங்கியுள்ளன. காலி மற்றும் மாத்தறை பகுதிகளிலிருந்து கடலுக்கு சென்ற 25-30 படகுகளே ஒலுவில் பகுதியில் கரையொதுங்கியுள்ளன என அட்டாளைச்சேனை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை வீசிய மினி சூறாவளியினால் படகுகள் கரையொதுங்கியுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு கிராமத்தில் இன்றுகாலை சுமார் 3நிமிடங்கள் வீசிய சுழல்காற்று காரணமாக 10 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு போயுள்ளன. இக்கிராமத்திலுள்ள மின்கம்பங்களும் உடைந்து வீழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது, தேர்தல் நடத்த வேண்டும்

விக்ரமபாகு- காணி மற்றும் பொலீஜ் அதிகாரங்களை இரத்துச் செய்யாது, வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் இலங்கையில் பெரும்பான்மை இனம் என்பதால், அவர்களுக்கு பிரச்சினைகள் இல்லை எனவும், தமிழ் மக்களுக்கு பெரும் பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கிற்கு காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். காணி, பொலீஸ் அதிகாரங்கள் இரத்துச் செய்யப்படுவதை நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம். இதற்கு இடமளிக்க முடியாது. அத்துடன் இந்த அதிகாரப்பரவலாக்கம் போதுமானதல்ல. எனினும் நாட்டின் சட்டத்தில் உள்ள அதிகாரங்களையாவது பாதுகாக்க வேண்டும். அதிகாரத்தை பரவலாக்குவதே பிரச்சினைக்காக சிறந்த தீர்வு என அவர் மேலும் கூறியுள்ளார்.

அரச கரும மொழி கொள்கை தொடர்பான செயற்றிட்டம்-

அரச கரும மொழி கொள்கைகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளின்போது நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அரச கரும மொழிகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் குறித்த விசேட செயற்றிட்டமொன்று எதிர்வரும் 16ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மொழி ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்கள், நிபுணர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் பங்கேற்பரென்றும் அவர் கூறியுள்ளார். விசேடமாக, கனடாவின் அரச மொழிகள் ஆணையாளர் இந்த செயற்திட்டத்தில் பங்கேற்பாரென ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கைதடி விபத்தில் 31பேர் காயம்-

யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 31பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்றுமுற்பகல் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலீசார் தெரிவித்துள்ளனர். கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி இந்த விபத்து இட்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தைத் தொடர்ந்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைக்க விசேட தொலைபேசி இலக்கம்

கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 07 10 10 10 10 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்த முடியும் என நாரா நிறுவனத்தின் தலைவர் சயூர சமரசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இதன்மூலம் கடற்றொழில் துறைசார் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் கடற்றொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் இத்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தும் இதனூடாக அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.