16.05.2013
 
யாழில் காணிகளை இழந்த 1474பேர் மனுத்தாக்கல்-

Nilam_CIயாழ்ப்பாணத்தில் தமது காணிகளை இழந்துள்ள 1474 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் காணி அதிகாரம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமது சொந்த காணி தனிப்பட்ட தேவைகளுக்காகவும், சட்டவிரோதமாகவும் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு 6381 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டமை மற்றும் பலாலி, காங்கிரேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்திற்கு காணி கையகப்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் காணி உரிமையுள்ள மக்களே இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தாங்கள் தமது காணிகளை விட்டுச் சென்றதாகவும் யுத்தம் முடிந்து மீண்டும் அங்கு சென்றபோது காணிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 
இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்-நிக் க்ளெக்

சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாத பட்சத்தில் பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானிய பிரதி பிரதமர் நிக் க்ளெக் தெரிவித்துள்ளார். அந்நாட்டு பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ள போதிலும் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அகதிகளின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் அதற்கான பிரதிபலன்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளராக பவானி நியமனம்-

Jaffna hospitalயாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் திருமதி பவானி பசுபதிராஜா சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்றுமுதல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கடந்த 8 மாதங்களாக சுகாதார அமைச்சின் அலுவலகதத்pல் கடமையாற்றிய பின்னர் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்மீது யாழ். வைத்திய சங்கத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என விசாரணைகள் மூலம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாகவும் வைத்தியசாலை கட்டிட திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்ட பொருட்களை வெளிச்சந்தைகளில் விற்றதாகவும் திருமதி பவானி பசுபதிராஜாமீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்-

நலன்புரி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமென தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. பல்வேறு கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில் 850 ரூபாவிலிருந்து 4,700 ரூபாவரை அதிகரித்தமை உட்பட  இலங்கை அகதிகளுக்கான பல நலன்புரித் திட்டங்களை விரிவாக்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நலன்புரி நிலையங்களிலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தகுதியுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 112 அகதி முகாம்களில் 66,000 இலங்கை அகதிகள் உள்ளதுடன், வேறு மாநிலங்களில் 34,826 அகதிகள் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
 
சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளிப்பு-

sarathஇராணுவத் தலைமையகத்தில் வைத்து 2006ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோட்டை, மத்தியம்பலத்திலுள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால் 2006ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இராணுவத் தலைமையகத்திற்குள் வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11பேர் கொல்லப்பட்டதுடன் 27பேர் காயமடைந்திருந்தனர். 
 
அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் வீசா இரத்து-

australienஅவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளரின் வீசாவே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தற்காலிக வீசா வழங்கப்பட்டிருந்தது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்

Humanஇலங்கையின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இம்மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், இலங்கை அரசு மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு, புதுமண்டபத்தடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெல் சேமிப்பு நிலையம் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட விவசாய சேவை நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். இந்த கட்டிடங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒக்ஸ்பாம் ஜீ.பி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 
சொத்து விபரம் சமர்ப்பிக்காத கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை-

தேர்தல்கள் ஆணையாளர்- சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இதுவரை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெறத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுவரை சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத கட்சிகளுக்கான அழைப்பு கடிதங்களை இன்று விநியோகிக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இதற்கமைய அரசியல் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் விசாரிப்பதற்கு  தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. பதிவுசெய்யப்பட்டுள்ள 64 அரசியல் கட்சிகளிடையே, 32 கட்சிகள் மாத்திரமே சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை இதுவரை சமர்ப்பித்துள்ளன. சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காமை சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.