17.05.2013

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு

விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது. 18.05.2013 சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வெற்றிவிழாவில் இராஜதந்திரிகள், மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை 9 மணியளவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வெற்றிவிழாவில் உரையாற்றவுள்ளார். விழாவில் முப்படையினரது அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் விமான சாகசங்களும் இடம் பெறவுள்ளன. 12 ஆயிரத்து 700 படைவீரர்களும் 945 அதிகாரிகளும் விசேட அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த வெற்றிவிழா குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:- இராணுவத்தின் இந்த வெற்றிவிழாவை பார்வையிடுவதற்கு அனைத்து இன மக்களும் வரவேண்டும். அதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வெற்றிவிழாவை முன்னிட்டு கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டிருக்கும். இறுதி யுத்தத்தில் அங்கவீனமான 100 வீரர்களும் விசேட அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்.
இன்றைய விழாவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ , பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் எம்.கே. இளங்கக்கோன், உட்பட முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொள்வார்கள்.
அணிவகுப்பில் இராணுவத்தினரின் 100 தாக்குதல் வாகனங்களும், 50 போர் கப்பல்களும், 30 தாக்குதல் விமானங்களும் பங்கேற்கவுள்ளன.

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு-பொதுபல சேனா-

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. இங்கு இயங்கும் சர்வமத அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். இவ் அமைப்புக்கள் சிங்கள பௌத்தர்களை அழிக்கும் நிகழ்ச்சி நிரலையே முன்னெடுக்கின்றன என்றும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள சம்புத்தத்வ மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இலங்கை பல்லினங்களுக்குச் சொந்தமான நாடல்ல. சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான அம்மக்களின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட நாடாகும். எனவே, இங்கு வாழும் அனைவரும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு, வெளிப்படுத்தாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதற்கான எமது போராட்டம் ஆரம்பமாகும் என அவர் கூறியுள்ளார். 

லொறி கவிழ்ந்து படைவீரர் பலி, 18 படையினர் காயம்-

மன்னார் செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கோப்ரல் உயிரிழந்ததோடு 18 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்றுகாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 படையினர் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 படையினர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 6,170 பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்க்கை– கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 6ஆயிரத்து 170ற்கும் அதிகமான பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்குச் சகல துறையினரும் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் நண்பருக்கு சிறை- புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை நண்பரும், பிரபல புலி உறுப்பினருமான குணரத்னம் ஜெயசுந்தரத்திற்கு, கொழும்பு மேல்நீதிமன்றம், 15மாத கடூழிய சிறைத்தண்டயை நேற்று அறிவித்துள்ளது. 15 குற்றச்சாட்டுகள் இவர்மீது சுமத்தப்பட்டிருந்த நிலையில் அவற்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் ஒரு குற்றச்சாட்டுக்கு ஒருமாதம் என்ற அடிப்படையில் அவருக்கு 15 மாதகால சிறைத்தண்டனையை நீதவான் விதித்துள்ளார். சிறைத்தண்டனை நிறைவடைந்ததும், ஒரு வருடங்கள் புனருத்தான நடவடிக்கைகளிலும் அவரை ஈடுப்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். தான் புலிகளுக்கு தேவையான இராணுவு தளபாடங்களை வன்னிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாகவும் புலிகள் அமைப்பிற்காக கப்பல் ஒன்றை கொள்வனவு செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இறுதி யுத்தத்தில் இறந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை நினைவுக் கூர்ந்து பொது நிகழ்வுகளை நடத்துவதோ அனுஷ்டிப்பதோ தண்டனைக்குறிய குற்றமாகும்.

ஏனெனில் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் ஆகும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.    இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் மூன்று தசாப்தகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நான்காண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இந் நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவம் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் முகமாக தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விசேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது. இதற்கு ஈடு செய்யும் வகையில் வடக்கில் சில பகுதிகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களை அனுஷ்டிக்கும் நிழ்வுகள் நடத்தப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குற்றச் செயலாகும். இலங்கை உட்பட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைச் செய்துள்ளனர். ஏனெனில், இவ் இயக்க பயங்கரவாத அமைப்பு என்றப்படியால். ஆகவே இவ்வாறானதொரு தடைச் செய்யப்பட்ட இயக்க உறுப்பினர்களை நினைவுக்கூர்ந்து நிகழ்வுகளை நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் நோக்கங்களுக்காகவே இவ்வாறான விஷம முயற்சிகளுக்கு பொது மக்களை குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகள் ஊக்குவித்து வருகின்றது எனக் கூறினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள், அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும். இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும் அந்தவகையில் அம்பாறை, திருகோணமலை, வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும், பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம். அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சடலமாக மீட்பு- நுவரெலியாவில்

கடந்த 13ஆம் திகதி பெய்த கடும் மழையின் போது ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. நுவரெலியா, ஹற்றன், டிக்கோயா நகரத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பொன்றில் வெள்ளநீர் புகுந்ததில் ஆற்று வெள்ளத்தினால் இழுத்துச் செல்லப்பட்ட 40 வயதுடைய கமலேஸ்வரி என்ற பெண்ணின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கரையொதுங்கிய நிலையில் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. இப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 60 வயது வயோதிபர் பெண்ணொருவர் ஒருவரும் 7 வயது சிறுமியொருவரும் கடந்த 13ம் திகதி வெள்ளத்தில் ழுழ்கி உயிரிழந்திருந்தனர். இதேவேளை கடந்த 13ம் திகதி லிந்துலை ரட்ணகிரி தோட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 70 வயதுடைய ராமசாமி கிருஸ்ணன் என்பவரின் சடலம் இன்றுபிற்பகல் 1மணியளவில் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் தலவாக்கலை சுமண சிங்கள பாடசாலைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி நுவரெலியாவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் இந்திய வெளியுறவமைச்சர் பேச்சு-

தமிழகம், காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நவம்பர் முதல் இலங்கையில் சிறையிலுள்ள மேலும் 5 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சல்மான் குர்ஷித் கேட்டுள்ளார். மேலும் இலங்கையின் வடபகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். மற்றும் இந்திய-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐ.நா விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம்-

ஐ.நா அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐ.நா அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸே இவ்வாறு கூறியுள்ளார். ஐ.நா உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார். எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
  
அமெரிக்கத் தூதுவர் கூட்டமைப்பினர் சந்திப்பு- ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசெனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கூறியுள்ளது. அமெரிக்க தூதுவர் மிசெல் சிசென் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு பிரதிநிதிகளை கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது வடமாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரின் கருத்தினை அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
    
கூட்டமைப்பு எம்.பி ஆனந்தன் விசாரணைக்கு அழைப்பு-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பில் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 4 ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. காரணம் எதுவும் குறிப்பிடாது இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
மட்டக்களப்பில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு- மட்டக்களப்பு  பாலமீன்மடு பிரதேசத்தில் ஒரு தொகுதி வெடிபொருள்களும், மினி கன்னி வெடிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 21 கைக்குண்டுகளும், 11 மினி கன்னி வெடிகளுமே மீட்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் மட்டக்களப்பு பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் தூதுவர் திருமலைக்கு விஜயம்-

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் ஜெனரல் காசி குரேசி நேற்று திருமலைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜிட் மற்றும் அரச அதிபர் மொஹான் விஜேவிக்ரம ஆகியேர்ரைச் சந்தித்துள்ளார். பின் அவர் திருமலை துறைமுகத்தையும் திருமலையில் பாகிஸ்தானிய நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து 58 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இவ்வாறு இரு தொகுதி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்;ட்மாதம் முதல் இதுவரை 1131 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இதில் 920 பேர் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போருக்கு எவ்வித சலுகைகளும் கிடைக்காது என்பதே இவ்வாறான நாடு கடத்தல் உத்தரவுகளின் மூலம் வெளிப்படுத்தப்படும் செய்தி என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார்.