19.05.2013
அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தை கூடாது-மல்வத்தைபீட மகாநாயக்க தேரர்-
வட மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடாது என மல்வத்தைபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்கேடிஎஸ் குணவர்தன, மகாநாக்க தேரரை சந்தித்தபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை, 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக லங்கா சமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும், 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வருவதாயின் அது தொடர்பில் சகல கட்சி தலைவர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ வித்தாரன சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக மகா யுத்த நூறாம் ஆண்டு நிகழ்வில் இலங்கைக்கு அழைப்பில்லை-
பிரித்தானியா கிளாஸ்கோவில் அடுத்த வருடம் உலக மகா யுத்தத்தின் நூறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைப் பிரதிநிதிகளை பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என ஸ்கொட்லாந்து சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் இடம்பெறுவதாக தெரிவித்தே அந்த அமைப்புகள் இந்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
வடக்கு மாகாண தேர்தல் குறித்து ஹெல உறுமையவின் எச்சரிக்கை-
வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால் வீதியில் இறங்கி போராடப்போவதாக தேசிய சுதந்திர முன்னணி எச்சிரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் அதுரலிய ரத்ண தேரர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து வடக்கில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மாணவனின் கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவில் பரிசு-
அமெரிக்காவின் அரிசோனாவில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் மின்சார மற்றும் இயந்திர சாதன உற்பத்தியில் புதிய உற்பத்திக்கான பரிசினை அநுராதபுரம் மிஹிந்தலை மகா வித்தியாலய மாணவன் புபுது கபுகே சுவீகரித்துள்ளார். வயல் வரப்புகளை அமைப்பதற்கான இயந்திரத்தை தயாரித்தமைக்காகவே இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிசு வழங்கும் நிகழ்வில் இந்த இயந்திரத்தை தயாரித்தமைக்காக அவருக்கு 3ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு விருது வழங்கும் விழாவிலும் கபுகேவின் இந்த படைப்பிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பேர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்வராஜா கஜேந்திரன் பிணையில் விடுதலை-
மன்னாரில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலர் செல்வராஜா கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார். மன்னார் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட 9 பேர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையொன்று தொடர்பில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணையின் பின்னர் ; விடுவிக்கப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப்Nபுச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்-கபே-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின்போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடி கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடாவை அண்டிய காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது. குறித்த பாழ்வத்தோடையில்; சிறிய ரக மீன்கள் ,றந்து மிதப்பதற்கான காரணம் கடலின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதுதான் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடற்கரை ஓரங்களில் பெரிய, சிறிய மீன்கள் இறந்து ஒதுங்கியுள்ளன.
யுத்த வெற்றி விழாவில் காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு-
கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற யுத்த வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் காணாமல்போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து சடலம் மீட்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போனதுடன் படகில் இருந்த இரு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். படகு விபத்தில் உயிர்தப்பிய இரு கடற்படை வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
பொதுபல சேனாவின் கருத்துக்கு கண்டனம்-
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அத்துடன், இவ்வாறான அறிவிப்பு இலங்கை அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன் எமது சட்டங்களை மீறும் நடவடிக்கையுமாகும். எனவே இவ்வாறான பிரசாரங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. மன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் விடுத்துள்ள செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களம் மட்டும் என்ற கோஷம் எழுப்பப்பட்டதால் தான் கடந்த சில தசாப்த காலமாக நாடு அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டது. இத்துடன் பௌத்தம் மட்டும் என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டால் நாட்டின் நிலை மேலும் மோசமடையும் என்பது உறுதி. இதை உணர்ந்து ஜனாதிபதி, பிரதம எதிர்க்கட்சித் தலைவர் உட்பட சகலரும் இவ்வாறான அபாயகரமான பிரசாரங்களுக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர். இவ் இரு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. யாழ். சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவேளை தெல்லிப்பழைப் பகுதியில் மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விஜியராசா சோபிதா (வயது 33) என்ற பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிப்பு-
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வைபவங்கள் வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தின் பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் இன்றுமாலை 5.00 மணிக்கு நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்காக தீபங்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் மதப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு தீபங்கள் ஏற்றி வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வுகளில் 100 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.