19.05.2013;
 
பொதுநலவாய அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டும்-மாலைதீவு-

maledivenபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வு இலங்கையிலேயே நடத்தப்பட வேண்டுமென  மாலைதீவு கோரியுள்ளது. பொதுநலவாய  நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை வேறு நாட்டுக்கு மாற்றவேண்டிய தேவையில்லை என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சமாட் அப்துல்லா தெரிவித்துள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் காரணமாக இலங்கை மக்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்கி வந்தனர். இவ்வாறான  ஓரு பின்னணியில்  இலங்கைக்கு  எதிராக தண்டனை விதிக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாலைதீவு  ஏற்றுக்கொள்ளாது. பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அப்துல் சமாட் அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் சீன விஜயம்-

sri chinaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை அன்று சீனாவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு  இரு நாட்கள்  தங்கியிருப்பார்  என ஜனாதிபதியின்  பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் பதவியேற்றதன் பின்னர் ஆறாவது தடவையாக சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது..
 
இலங்கை அரசுமீது வலுவான அழுத்தங்கள் அவசியம்-எரிக் சொல்ஹெய்ம்-

solhaimயுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கைமீது மேலும் வலுவாக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் 4ஆவது ஆண்டை மிகவும் விமரிசையாக கொண்டாடியது. தேசிய யுத்த வெற்றி விழா என நாடளாவிய ரீதியிலும் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு காரணமாகவிருந்த தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே, வலுவான அழுத்தங்கள் தொடர்ந்தும் தேவை என எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இந்திய மீனவர்கள் இன்று விடுதலை-

india fischerஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 26 பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் காரைக்கால் மீனவர்கள் 26 பேரே விடுதலை செய்யப்படவுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. அவர்களை மீட்குமாறு பிரதமர், வெளியுறவமைச்சர், இலங்கை தமிழ் அமைச்சர்கள், தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில், இலங்கை கடற்படை கைதுசெய்த காரைக்கால் மீனவர்கள் 26பேரும் இன்று விடுவிக்கப்படவுள்ளனர். என நாராயணசாமி மேலும் கூறியுள்ளார். 
 
தாண்டிக்குளத்தில் இறந்த மூன்று பிள்ளைகளின் தந்தைமீது தாக்குதல்-

welவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17ம் திகதி பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலைசெய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தைமீது இளைஞர்குழு நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்படி பிள்ளைகளின்; தாயார் வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மூன்று பிள்ளைகளின் இறுத்திச்சடங்கு தாண்டிக்குளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இடம்பெற்றது. இந்நிலையில் இப் பிள்ளைகள் இறப்பதற்கு வறுமையும் தந்தை வேறு ஓர் பெண்ணை திருமணம் செய்து சென்று இக் குடும்பத்தை ஆதரிக்காமையுமே காரணமென இக்கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த மூன்று பிள்ளைகளின் இறுதிச்சடங்குகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயாத்தில் இடம்பெற்ற பின்னர் இளைஞர்கள் பிள்ளைகளின் இறப்புக்கு தந்தையின் நடத்தையே காரணமென தெரிவித்து தந்தையான விஜயகுமார்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரஸ்யா இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை நன்கொடை-

heliஎட்டு பெரிய ஹெலிகொப்டர்களை முழு அளவிலான நன்கொடையாக ரஸ்யா இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஸ்ய மத்திய முகவர் நிறுவனத் தலைவர் கொன்ஸ்டாடின் கொச்சேவ் இதனை அறிவித்துள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ்போ 2020 கண்காட்சியை ரஸ்யாவில் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கொச்சேவ் தெரிவித்துள்ளார். இக் கண்காட்சியின் ஒழுங்கமைப்பு உரிமையை பெற்றுக் கொள்வதற்கு 162 நாடுகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கண்கட்சியை ரஸ்யாவில் நடத்துவதன் மூலம் இலங்கைக்கும் பல்வேறு பொருளாதார நன்மைகள் கிட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கனடாவின் நகர்வுகள் தொடர்பில் அரசாங்கம் கண்காணிப்பு-

chogmகனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம்  அறிவித்துள்ளது. பொதுநலவாய  நாடுகளின்  தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள்  கிடைக்கப்  பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் துப்பாக்கிகள் மீட்பு-

waffenஅம்பாறை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

வாகரை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுறண்டும் மீனவர்கள்-

fisch boatமட்டக்களப்பு, வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடல் அட்டைகளை பிடிப்பதால் தங்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் மீனவர்கள்  கவலை  வெளியிட்டுள்ளனர். கடல்  அட்டைகளை  பிடிப்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமது பிரதேச மீனவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். புத்தளம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே இது தொடர்பான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாயுச் சிலிண்டர்கள், சக்திவாயந்த டோர்ஜ் லைட் வெளிச்சம் போன்றவற்றை பயன்படுத்தி இத்தொழிலில் அவர்கள் ஈடுபடுவதால் கரையோரத்தை நாடும் மீனினங்கள் கலைந்து விடுகின்றன. அதனால் கரையோர மீன்பிடித் தொழிலே அநேகமாகப் பாதிக்கப்படுகின்றது என அப்பகுதி மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். 
 
பங்களாதேஷ் பிரஜைகள் நாடு திரும்பல்-

banglaநாட்டின் கிழக்குக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து காப்பாற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் 61 பேர் நேற்று நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இக் குழுவினரில் 60 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்தின்  குடிவரவு, குடியகல்வு  பிரிவின்  உயரதிகாரி  ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த  பெப்ரவரி  மாதம்  ஒலுவில்  மீன்பிடி  துறைமுகத்துக்கு அருகிலிருந்து இக் குழுவினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதின் பின்னர் அவர்கள் பூசா மற்றும் மிரிஹான தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். மலேசியா அல்லது வேறொரு நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள் கணக்கெடுப்பு-

picture-165மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்த தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார். இக் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை 6மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலில் ஏற்பட்ட மரணங்கள்,  இடம்பெயர்வுகள், காணாமற்போதல் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. நடவடிக்கை குழுவொன்றின் ஊடாக வினா கோப்பை தயாரித்து அடுத்த மாதம் கணக்கெடுப்பை ஆரம்பிக்கவுள்ளதாக டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கு தோறும் சென்று தகவல்களை திரட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிராம உத்தியோகத்தர்களை கணக்கெடுப்பு அதிகாரிகளாக பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என திணைக்களம் கூறியுள்ளது.