22.05.2013
13வது சீர்திருத்தத்தின் படியே வடக்கு தேர்தல் நடத்தப்படும்-அரசாங்கம்-
வட மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பரில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாகவே இடம்பெறும் என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தற்போது அரசியலமைப்பில் பலம்வாய்ந்த சரத்தாகும். விரிவான கலந்துரையாடல் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அதில் மாற்றம் செய்யமுடியும். மாகாண சபையின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் சிறியளவிலான சபைகளுக்கு பொறுத்தமில்லாதது என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனைச் சீர்செய்ய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினாலேயே முடியும். அவற்றின் ஊடாக கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்ட முடியும். அதனாலேயே ஜனாதிபதி அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்துள்ளார். எனினும் அதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ள மறுக்கின்றது. எவ்வாறாயினும் 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதனை மாற்ற வேண்டுமா இல்லையா என்பது குறித்த வாதம் நிலவுகின்றது. வட மாகாணசபைத் தேர்தல் செப்டெம்பரில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டால் 13ஆவது திருத்தச் சட்டத்தின்படியே இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய அமர்வுகளை இலங்கையில் நடத்தக்கூடாது-மங்கள சமரவீர-
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாதென ஐ.தே.கட்சியின் எம்.பி மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை அமர்வுகளை இங்கு நடத்தக் கூடாது எனவும் அவர் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளைப் பேணிக் காப்பது தொடர்பில் மிக முக்கிய பொறுப்புக்கள் காணப்படுகின்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 16 முக்கிய பிரகடனங்களையும் அரசு உதாசீனம் செய்து வருவதுடன், அக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருகிறது. வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துமுன் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என மங்கள சமரவீர எம்.பி மேலும் கூறியுள்ளார்.
மனித புதைகுழி தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு கேள்வி-
மாத்தளை மனித புதைகுழி பற்றிய விசாரணைகள் தொடர்பில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவ்அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விசாரணையை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்திவரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
பொது முகாமையாளர் ஆணைக்குழு தலைவர் ஆகியோர்க்கு அழைப்பாணை-
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மற்றம் நுகர்வோர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை எதிர்;வரும் 18ம் திகதி உயர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதிகளாக நுகர்வோர் பாதுகாப்பு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்வ கொஸ்தா, இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்ரமசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். மின்கட்டண அதிகரிப்பை இரத்துச் செய்யுமாறு மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணிகள் சங்கம் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகாரப் பரவலாக்கல் கொள்கையில் மாற்றம் கொண்டுவர உத்தேசம்-
அதிகாரப்பரலாக்கல் கொள்கையில் சில மாற்றங்களை கொண்டுவர உத்தேசித்துள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த திருத்தம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக வெஸ்ட்மின்ஸ்டர் முறையை அறிமுகப்படுத்தும் யோசனை உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் ஐ.தே.கட்;சி தனது அரசியல் அமைப்பு திருத்தத்தை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தேர்தல் நடத்தக் கூடாது- பொதுபல சேனா-
வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவ் அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்களின் கருத்துத் கணிப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையுடன் நீக்க வேண்டும் என்றும் அவர் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.