23.05.2013
இலங்கையில் 20ற்கும் அதிகமானோர் காணாமற்போனதாக அறிக்கை-
கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 20ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயிருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. காணாமல் போனவர்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர்களும் அடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த அறிக்கை, கடந்த 2012ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளதும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்றம்-
இந்தியாவிலும், இலங்கையிலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இரண்டு நாடுகளுக்குமிடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கைதுசெய்யப்பட்ட 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், இந்திய கடலோர பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட 9 இலங்கை மீனவர்களும் அவர்களின் உடமைகளும், இந்திய கடலோர காவல்படையினரால், இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். படை முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்-இராணுவத் தளபதி-
யாழிலுள்ள படைமுகாம்களின் தொகையினை குறைக்கவுள்ளதுடன், காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். தற்போது யாழிலுள்ள 17 படை முகாம்களை 3ஆக குறைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலுமிருந்து அகற்றப்படும் 14 முகாம்களும் பலாலி இராணுவ குடியிருப்பில் உள்வாங்கப்படும். முகாம்கள் இருந்த காணிகள் உரிமையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு கருதி திருப்பிக் கொடுக்க முடியாத காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இயல்பு நிலையை ஏற்படுத்த இந்தியா பங்களிப்பு-
வடக்குக் கிழக்கில் இயல்பு நிலையினை ஏற்படுத்தவும், வடக்குக் கிழக்கின் தேவைகளை உணர்ந்தும் இந்தியா பாரிய பங்களிப்பினை செய்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்திய நிதியுதவியில் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்ட ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். செங்கலடி பகுதியின் மங்களாகம, பெரிய புல்லுமலை, உறுகாமம் கிராமங்களில் இது சம்பந்தமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான பணிகளை உத்தியோகபூர்வமான ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அமெரிக்க நிலைய அதிகாரி திருமலைக்கு விஜயம்-
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடகத்துறை மற்றும் கல்வி விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் கிறிஸ்தோபர் தீல் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று பிற்பகல் 2.30அளவில் விகாரை வீதியில் உள்ள திருமலை ஊடக இல்லத்திற்கும் விஜயம் செய்த அவர், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினரைச்; சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார். நாடு முழுவதிலும் 1000 ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்ட உள்ளார்கள். ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள் மாநாடுகள் என்பன நடத்தப்பட்டு அவர்களின் ஆற்றல்களை வெளிக் கொணர்வதற்கு அமெரிக்க நிலையம் தயாராக உள்ளது என அவர் இதன்போது கூறியுள்ளார். திருமலை நகரசபைத் தலைவருடன் பொதுநூலக கேட்போர் கூடத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் அமெரிக்க பணிப்பாளர் கைச்சாத்திட்டுள்ளார்.
துண்டுப் பிரசுரம் விநியோகித்த இருவர் கைது-
மட்டக்களப்பு, உறுகாமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வின்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இருவரை கரடியனாறு பொலீசார் கைதுசெய்துள்ளனர். உறுகாமத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறுகாமம் கிராமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா? இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? என்ற தலைப்பிடப்பட்டு உறுகாமம் வாழ் தமிழ்மக்கள் என குறிப்பிடப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்பெண் ஆஸியில் சமூகத்துடன் இணைப்பு-
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும், அவரின் மகனும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். விலாவுட் தடுப்பு முகாமையில் 41வயதான மனோகலா ஜெனதர்ஸன் என்ற பெண்ணும், அவரது 06வயது மகனும் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆஸியின் அண்மைய தீர்மானத்திற்கு அமைய இவர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரான பெண்ணும் மகனும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். தேவையேற்படின் இவர்கள் குறித்து மீண்டும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
வைத்தியர் பற்றாக்குறையால் தலைமன்னாரில் நோயாளர்கள் அவதி-
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதால் தாம் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அவர் விடுமுறையில் சென்றுள்ளார். அவருக்கு பதிலாக பேசாலை வைத்திய அதிகாரி பதில் கடமையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் அவர் சில நேரங்களில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகம் தராதிருப்பார். இதனால் காலையில் இருந்து மாலைவரை வைத்தியரின் வருகைக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தலைமன்னார் வைத்தியசாலைக்கு மேலும் ஒரு வைத்தியரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத பொருள் இறக்குமதி முறியடிப்பு-
முதலீட்டு சபையின் ஆவணங்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்து சுங்கத்தினர் அண்மையில் தகவல்களை பெற்றிருந்தனர். சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இந்த சட்டவிரோத இறக்குமதி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி போலி ஆவணங்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 40 லட்சம் ரூபாய் என சுங்க திணைக்கள பணிப்பாளர் மாலி பியசேன அறிவித்துள்ளார்.
எரிபொருள் கப்பல் நாளை இலங்கையை அடையுமென அறிவிப்பு–
இறக்குமதி செய்யப்பட்டுள்ள எரிபொருளைத் தாங்கிய கப்பல் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்பின், எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் நாளை மாலைமுதல் ஆரம்பமாகவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையின் கீழ் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் எண்ணெயை சுத்திகரிக்க எண்ணியுள்ளோம். எரிபொருள் இன்மையினால் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அக்காலப் பகுதியை அத்தியாவசிய திருத்த வேலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
வலிகாமம் வடக்கின் மேலும் 192பேர் வழக்குத் தாக்கல்-
யாழ். வலிகாமம் வடக்கைச் சேர்ந்த மேலும் 192பேர் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதை எதிர்த்து நேற்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். தமக்கு வவேறாக சொந்தமாக இருக்கக் கூடிய காணிகள் ஒரே காணியாக கருதப்பட்டு சுவீகரிக்க முடியாது என்றும், அவ்வாறாக சுவீகரிப்பதற்கான பொதுத்தேவை தொடர்பில் தெளிவாகத் தமக்கு கூறப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் சட்டத்தரணிகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று அறிவித்தல்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்படுகிறது. வலி வடக்குப் பிரதேசம் ஒருபோதும் சட்ட ரீதியாக உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இக் காணிகளை சுவீகரிப்பதற்கான நோக்கம் உரியமுறையில் குறிப்பிடப்படவில்லை. மேற்படி காணி சுவீகரிக்கப்படும் பகுதிக்குள் படையினர் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது. உல்லாச விடுதிகள் நடத்துவது. யோகட் தொழிற்சாலை நடத்துவது எமது வாழ்வாதரத்திற்கான உரிமையை மீறும் செயலாகும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் நீதியரசர் விடயமாக ஜே.வி.பி எம்.பி எதிர்ப்பு மனுத்தாக்கல்-
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு வழங்கிய தீர்ப்பினை இரத்து செய்யக்கோரும் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் இந்த எதிர்ப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டதல்ல. இந்த மேன்முறையீட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தமை ஏற்புடையதல்ல. சட்டமா அதிபரின் மனுவை எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடாது என விஜித ஹேரத் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.