25.05.2013.

13 ஆவது திருத்தம் பற்றி கூற பாதுகாப்பு செயலருக்கு அதிகாரமில்லை.அமைச்சர் வாசு-

 vaasudevaஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன்வைக்கப்படவுள்ள தனிநபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்காது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது. தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இராயப்பு ஜோசப்பிற்கு எதிராக பொதுபல சேனா மாநாடு-

Bodu_bala sanaமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும், இதன்போது மன்னார் ஆயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் எனவும் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். மன்னார் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமெனவும் ஞானசார தேரர் சுடடிக்காட்டியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர்-

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஜூன்; 14ம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரின் அமர்வுகளின்போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன், பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதுடன் மேலும் பல நாடுகளும் அவதானிப்பு நாடுகளாக பங்கேற்கவுள்ளன. கூட்டத்தொடருக்கு இலங்கை சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் எந்த பிரதிநிதிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மட்டும் ஒரு உயரதிகாரி பங்கேற்பாரென்றும் தெரியவருகிறது. எனினும் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதரக அதிகாரிகள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுக் கட்சிகளுடன் பேசி பொலிஸ், காணி அதிகாரம் குறித்து முடிவு-

அமைச்சர் பசில்- அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலீஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதிவரை இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து எதிர்வரும் 06ம்திகதி அதை நிறைவேற்றவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் படையுடன் வானூர்திகள் இணைப்பு-

இலங்கை விமானப் படையுடன் இணைக்கப்படவுள்ள எம்.ஐ. 171 ரக உலங்கு வானூர்திகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வகையான 10 உலங்கு வானூர்திகள் விரைவில் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. ஹெலி ட்ரெவல்ஸ் நிறுவனத்திலிருந்து இந்த உலங்கு வானூர்திகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையர் ஒருவர் சைப்பிரஸில் கைது-

சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பரஸில் வைத்து கைது  செய்யப்டப்டுள்ளார். அவருடன்  மேலும்  நான்கு  பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்பிரஸ் பொலீஸ் தரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைப்பிரஸில் குடியுரிமை பெற்றுக்கொள்ளவென, அந்நாட்டு குடியுரிமை கொண்டவர்களை சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் பங்களாதேஸைச் சேர்ந்த ஒருவர், சைப்பிரஸ் குடியுரிமை பெற்றுள்ள தமது காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை-கருணாநிதி-

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வசித்துவரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிளுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் 2.6 லட்சம் இந்தியர்களுக்கு எவ்வித ஆவணங்களுமின்றி அமெரிக்கா குடியுரிமை வழங்கியிருந்தது. இதேபோல் இலங்கையர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என கலைஞர் மு.கருணாநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
இலங்கையர் உள்ளிட்ட வெளிநாட்டவருக்கு பொதுமன்னிப்பு-

சட்டவிரோதமான முறையில் தம் நாட்டில் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக குவைத் அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது. இதில் இலங்கையர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தண்டனை எதுவுமின்றி நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதியளிப்பது தொடர்பாக குவைத் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. உரிய வீசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியிருந்தவர்களுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் குவைத்தில் பணியாற்றி வருகின்றனர்.

என்ஜின் கோளாறு காரணமாக மிஹின் லங்கா பயணிகள் அசௌகரியம்-

என்ஜின் கோளாறு காரணமாக மிஹின் லங்கா விமானம் தனது பயணத்தை இரு தடவைகள் நேற்று இரத்துச் செய்த சம்பவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருந்தனர். மிஹின் லங்கா விமானமான எம்.ஜே. 305 நேற்றுப்பகல் 12.30அளவில் 173 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் மதுரைக்கு பயணிக்கத் தயாராகியிருந்தது. எனினும் என்ஜின் கோளாறு காரணமாக அப்பயணத்தை இரத்துச் செய்த அதிகாரிகள் விமானத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணிக்கு அவ்விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க இருந்தவேளை மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அப்பயணமும் இரத்துச் செய்யப்பட்டதுடன் 150 பயணிகள் மாத்திரம் சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானம்மூலம் நள்ளிரவு 12.01க்கு மதுரை பயணமாகியுள்ளனர். மீதமிருந்த 23 பயணிகள் இன்றுகாலை வேறு விமானத்தில் வைக்கப்படவிருந்தனர்.

இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 21 இலங்கை அகதிகள் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி இவர்கள் கைதுசெய்யப்படடுள்ளனர். இவர்களில் 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் அடங்குகின்றனர். தமிழகத்திலுள்ள நான்கு முகாம்களைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு அவுஸ்ரேலிய செல்ல முயன்றமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.