26.05.2013.
கொழும்பு துறைமுகம் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனம்-

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும்வரை அப்பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொலீஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளும் தமது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24ம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

இலங்கை – இந்தியா வீசா அவசியமற்ற முறையை அமுல்செய்ய நடவடிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வீசா அவசியமற்ற முறைமை ஒன்றை அமுலாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக ஊடகச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் நீண்டநாள் நட்பு நாடுகளாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பயணிக்கும்போது வீசா அவசியப்பாடு அற்றநிலையை உருவாக்க வேண்டுமென, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் பேச்சுக்கள்; ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இரு நாட்டின் நட்புறவினையும் மேலும் வலுப்படுத்த முடிவதுடன், சுற்றுலாத் துறையையும் அபிவிருத்தி செய்துகொள்ளவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னல் கிராமத்தில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, தென்னல் கிராமத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் சிறுமியை பொலீசார் மீட்டெடுத்துள்ளதுடன் இச்சிறுமியைக் கடத்திச் சென்ற குடும்பஸ்தரையும் பொலீசார் கைதுசெய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை, தென்னல் கிராமம் ஊடாக சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமியைக் கடத்திச் சென்றிருந்தார். சிறுமி காணாமல் போனது தொடர்பில் சிறுமியின் தாயார் சம்மாந்துறை பொலீசில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அம்பாறை பொலீசார் குறித்த நபரைக் கைது செய்துள்ளதுடன் சிறுமியையும் மீட்டெடுத்துள்ளனர்.

கடலில் மூழ்கிய மாணவர்கள் கடற்படையினரால் மீட்பு-

அம்பாறை அட்டாளைச்சேனை பாலமுனை கடலுக்கு குளிக்கச் சென்ற நிலையில் கடலில் மூழ்கிய நான்கு மாணவர்களையும் கடற்படையினர் மீட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நிந்தவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையில் 8ம் தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ஜே.எம். நஸாத், பாலமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம். சினாஸ், எம்.எஸ்.எம். பௌவாஸ் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த எஸ்.மபாஸ் ஆகிய நான்கு மாணவர்களும் பாலமுனை கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கியநிலையில் கடற்படையினர் நால்வரையும் மீட்டு பொலீசார் ஊடாக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் துணைநிற்காது-

ஹசன் அலி எம்.பி- 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்தால் அதற்கு ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் துணைபோகாது என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலரும், எம்.பியுமான எம்.ரீ. ஹஸன் அலி  தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிற இடங்களில் அவர்களுக்கு அதிகாரத்தை பகிரும் ஒரு தற்காலிக தீர்வாகும். இதை மீளப்பெற ஒருபோதும் சிறுபான்மைச் சமூகம் அனுமதிக்காது. இத் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டாயம் எதிர்த்து வாக்களிக்கும் என ஹசன் அலி எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 01ஆம் திகதி வாக்காளர் தினமாக பிரகடனம்-

ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதுடன் வாக்குரிமையை உணர்த்தும் மாபெரும் பாத யாத்திரையொன்று தேர்தல் ஆணையாளரின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு விஜேராம மாவத்தையிலிருந்து ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரிவரை இந்த பாதயாத்திரை பேரணி ஊர்வலமாகச் செல்வதுடன் கொழும்பு மாவட்டச் செயலகமும் தேர்தல்கள் செயலகமும் இணைந்து இப்பாத யாத்திரையை ஒழுங்கு செய்துள்ளன. எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வாக்காளர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதுடன், இத்தினத்தில் ஆரம்பமாகும் வாக்காளர் இடாப்புத் திருத்தப் பணிகள் ஜுலை 15ஆம் திகதிவரை தொடரவுள்ளன. இக்காலப் பகுதியில் வாக்காளர் பட்டியல் படிவம் வீடுகளுக்குக் கையளிக்கப்படும் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதை உணர்த்தும் வகையிலேயே மேற்படி பாத யாத்திரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2012ல் 1759 சிறார்கள்மீது துஷ்பிரயோகம்-

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை விட சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்களே அதிகமாக இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் தெற்காசியாவில் சிறுவர்களும் பெண்களும் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியாவையும் மிஞ்சிவிடக்கூடிய வகையில் இலங்கையில் இது தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டில் இலங்கையில் 1759 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் அடங்குகின்றனர் என பொலிஸ் அறிக்கைகள் ஊர்ஜிதம் செய்துள்ளன. கடந்த ஆண்டில் 547 சிறுவர் சிறுமியரும் 29 பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 3859 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 547 சிறுவர் சிறுமியர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.