27.05.2013.
படகு விபத்தில் இலங்கையர்களும் உயிரிழந்திருக்கலாமென சந்தேகம்-

Australia[1]படகு விபத்தில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா பயணித்துக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இப் படகில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எட்டு உயிர்காப்பு அங்கிகள் கொகோஸ் தீவுகளில் கரையொதுங்கியுள்ளன. இந்த உயிர்காப்பு அங்கிகளை எந்த நாட்டவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய பொலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றிரவு சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கின் அழைப்பையேற்று, ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சீன ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் நாளை மறுதினம் நடைபெறும் மாநாட்டிலும், ஆசிய அரசியல்கட்சி மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்பு-

தனது இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர். மட்டக்களப்பு மீராவோடை ஆற்றிலேயே குறித்த தாய் இன்றுமுற்பகல் 11 மணியளவில் தனது இரு குழந்தைகளுடன் குதித்துள்ளார். இரு குழந்தைகளான பூஜா (வயது 07) மற்றும் மூன்றரை வயதான மேனுஜா ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். இவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் ஆற்றில் குதித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பியும் விசாரணைக்கு அழைப்பு-

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலீசார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழிலுள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் அன்று  விசாரணைக்கு செல்ல முடியவில்லை எனவும், எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு வருவதாக தான் கூறியுள்ளதாகவும் அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

யாழ். விபத்தில் 2 இராணுவத்தினர் காயம்-

இராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ். கந்தர்மடம் சந்தியில் நேற்றிரவு 9.20 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புஞ்சு பண்டா (வயது 47), அபயக்கோன் (வயது 33) ஆகிய இராணுவத்தினரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். முரளி (வயது 19) என்ற இளைஞரும் மேற்படி விபத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் யாழ். போக்குரவத்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையர்களுக்கு தற்காலிக வீசா

சவூதி அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலத்திற்கு அமைய, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு தற்காலிக வீசா வழங்கும் நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் இந்த நடமாடும் சேவையை முன்னெடுத்துள்ளது. இதன்படி வுதியின் பல பகுதிகளுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தற்காலிக வீசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு, சவுதி வழங்கியுள்ள பொது மன்னிப்புக்காலம் எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் மீனவர்களின் கோரிக்கை சாத்தியமற்றது-

தமிழகம் காரைக்கால் மீனவர்களின் கோரிக்கை சாத்தியமற்ற ஒன்று என மீன்பிடி அமைச்சின் ஆலோசகர் எஸ்.பி அந்தோனிமுத்து குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்திய மீனவர்கள் கூட்டாக மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என காரைக்கால் மீனவர்கள் நேற்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழக மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதன்பொருட்டு கூட்டு மீன்பிடிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி கருத்து வெளியிடப்பட்டுள்ளது. யுத்த பாதிப்பிலிருந்து மீண்டுவரும் மக்கள் தொழில் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான ஓர் இணக்கப்பாடு இலங்கையை பொறுத்தவரையில் ஏற்புடையது அல்ல என அந்தோனிமுத்து கூறியுள்ளார். 

இந்திய உயர்ஸ்தானிகர் ஜூனில் கொழும்பு வருகை-

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான யஷ்வர்தன் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன்மாத நடுப்பகுதியில் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இவரது நியமனத்தை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அறிவித்தார்.

கீதாஞ்சலியின் பாதுகாப்பு பொலீசார்மீது தாக்குதல்-

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் பாதுகாப்பு பொலீசார் இருவரும் வாகன சாரதியும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தனது பாதுகாப்பு பொலீசார் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபின் நேற்றிரவு 10 மணியளவில் வவுனியா வீட்டிற்கு தாம் திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை வீட்டில் இறக்கிவிட்ட பின்னர், வாகன சாரதி மற்றும் பொலீசார் வவுனியாவில் இரவு உணவை பெறத் தயாரானபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 15பேர் கொண்ட குழு நடத்திய தாக்குதலில் காயமடைந்த வாகன சாரதி தப்பிவந்து தன்னிடம் விபரத்தை தெரிவித்ததாக மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.