28.05.2013.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயம்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐ.நாவிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவி;த்துள்ளார். மனித உரிமைகள் ஆணையகத்தின் அமர்வு நேற்று ஜெனீவாவில் இடம்பெற்றபோதே அவர் நவநீதம்பிள்ளையின் வருகை தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளையின் வருகை, இலங்கைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான முரண்பாட்டை நீக்க உதவும் என ரவிநாத ஆரியசிங்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குற்றவாளிகள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்-

ஊடகம் அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள குறைபாடான குடிவரவு சட்டங்கள் காரணமாக சர்வதேச ரீதியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் தமது நண்பியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் உரிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் எகிப்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிசென்ற ஒருவரும் கடந்த ஒருவருட காலமாக பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். இதேபோல் சுமார் 13ஆயிரம் குற்றவாளிகள் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் என அவுஸ்திரேலிய ஊடகம் கூறியுள்ளது.

நவநீதம்பிள்ளையின் ஆரம்ப உரையில் இலங்கை விடயம் இல்லை-

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ.ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமான கூட்டத்தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரையை நிகழ்த்தியுள்ளார். எனினும் தனது பிரதான ஆரம்ப உரையில் இலங்கை நிலைவரம் குறித்து நவநீதம்பிள்ளை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக சிரியாவின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பேரவையின் உறுப்பு நாடுகளின் அவதானத்துக்கு அவர் கொண்டுவந்துள்ளார். மற்றும் மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை தடுத்துநிறுத்த மியன்மார் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் மோசமான சூழல் தொடர்வதாக மனித உரிமைப் பேரவையில் அறிக்கை-

இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோன்று, வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுகின்றது என அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானநிலையில் இலங்கை தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத நெருக்கடிமிக்க சூழலே காணப்படுகின்றது. பல்வேறு வகையான மனித இயல்புவாழ்க்கைக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் அமைதி ஊர்வலங்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிகாமம் காணி சுவீகரிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு-

யாழ்.வலிகாமம் பிரதேசத்தில் பொதுமக்களின் காணியை அரசாங்கம் அநீதியான முறையில் சுவீகரிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுமீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். வலிகாமம் பிரதேசத்தில் 6,381 ஏக்கர் காணியை அரசாங்கம் அநீதியான முறையில் சுவீகரிப்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து ஆயிரத்து 474 பேர் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்றையதினம்  பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இம்மாதம் 30ஆம் திகதிவரை அதனை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்படாது-இந்திய பாதுகாப்பமைச்சர்-

இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட மாட்டாதென இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். தமிழகம், தஞ்சாவூர் விமானத் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுபாதையை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹல உறுமய, கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை-

இரா.சம்பந்தன்- வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவன்ச, பாதுகாப்புச் செயலர் ஆகியோரின் கருத்துக்கள் அரசின் நிலைப்பாடு இல்லை என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கருத்துக்கள் பதிலளிக்காதிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று திருமலையில் வைத்து ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை எனவும் தேர்தல் நடத்தப்படும் தினத்தை தேர்தல் ஆணையாளர் அறிவித்தபின் கூட்டமைப்பு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளது எனவும் இரா. சம்பந்தன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். 

மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டனில் இடம்பெயர்வு-

மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் பிரதேசத்தில் 19 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி ஹற்றன், கொட்டகலை, வெலின்டன் ஆகிய பிரதேசத்திலுள்ள 19 குடும்பங்களே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவ அமைச்சின்மூலம் இவர்களுக்கு தேவையான தற்காலிக கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீன ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு-

சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றுக்காலை சீனாவைச் சென்றடைந்துள்ளார்.

மேர்வின் சில்வாவிற்கு புதிய அதிகாரம்-

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படவுள்ளது. கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய பூரண அதிகாரமே  அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கென  பாராளுமன்றில்  விசேட சட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது. புதிய சட்டமூலத்திற்கான அங்கீகாரம் அமைச்சரவையில் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அமைச்சுக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரைகளை செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் முகாம்களை இடமாற்ற முயற்சி-இராணுவம்-

யாழ். வலிகாமம் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களில் பெரும்பாலானவற்றை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள பதினாறு முகாம்களிலிருந்து பல முகாம்கள் பலாலி நிரந்தர முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இப்பகுதிகளில் மூன்று முகாம்கள் மட்டுமே இருக்கும் என்றும், இராணுவப் பயன்பாட்டிலுள்ள தனியார் நிலங்களுக்கு இராணுவம் வாடகை செலுத்தி வருகின்றது என்றும் இராணுவப்பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புகளுக்கு தேவையான நிலத்தை வழங்குமாறு இராணுவம் காணி அமைச்சரிடம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.