சீனா நிதியுதவியில் யாழ் – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணம்-

china vikaraiகொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்குமிடையில் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு சீனா நிதிஉதவி வழங்கவுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று சீனாவில் கைச்சாத்தாகியுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம், கொழும்பு அதிவேக பாதை உள்ளிட்ட மேலும் பல அதிவேக பாதைகளுக்கும், ரயில் பாதை அமைப்புக்கும் சீனா உதவிகளை வழங்க இணங்கியுள்ளது. இதன்படி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் நீடிக்கவும், கொழும்பு – கண்டி, குருநாகல் மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கவும், இந்த உடன்படிக்கையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது. இதேவேளை சீனா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுமாலை சீன ஜனாதிபதி க்சீ ஜின்பின்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கையர் இருவரை கைதுசெய்ய நடவடிக்கை-

தமிழகத்தில் இடம்பெறும் ஏ.டி.எம். அட்டை ஊடான நிதி மோசடிகளுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் என கருதப்படும் இலங்கையர்கள் இருவர் தேடப்பட்டு வருவதாக தமிழக விசாரணைப்பிரிவு பொலீசார் அறிவித்துள்ளனர். ஏ.டி.எம். அட்டை மோசடி தொடர்பில் மேலும் இருவர் கோயம்புத்தூரில் வைத்து நேற்று கைதுதாகியுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைகளின்போது, இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியின் இரு இலங்கையர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. கனடாவில் வசிக்கும் முகுந்தன் மற்றும் இந்தோனேசியாவில் வசிக்கும் சுனில் ஆகிய இரு இலங்கையருமே இந்த செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். மேற்படி இருவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவருவதாகவும், அவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலீசாரான இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துமீறி புத்தர்சிலை வைப்பதை எதிர்த்து கண்டனப் பேரணி-

protest_against_buththar_009மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வரவேற்பு நுழைவாயிலில் புத்தர் சிலையை நிறுவ மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையைக் கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்றுகாலை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. ஊறணி பிரதேச மக்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் இணைந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியுள்ளனர். பிள்ளையாரடியில் ஆரம்பமான பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், பொதுமக்கள், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் சிலை எதற்கு, புத்தர் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு அரச அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கொலைக் குற்றவாளியின் வீசா ரத்து-

அவுஸ்திரேலியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு பாதுகாப்பு வீசா வழங்கி, சமூகத்துடன் இணைக்கப்பட்டமை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு கட்டுப்பாட்டு திணைக்களத்தை, அந்நாட்டு எதிர்க்கட்சி கண்டித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் முன்னர் அவரது காதலியை கொலைசெய்த இலங்கையர் ஒருவர் அண்மையில் பாதுகாப்பு வீசா வழங்கி சமூகத்துடன் இணைக்கப்பட்டிருந்தார். அதேபோல் சர்வதேச பொலீசாரால் தேடப்பட்டுவரும் எகிப்தின் முக்கிய குற்றவாளி ஒருவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு எதிரக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை நிராகரித்த ஆஸி. குடிவரவு திணைக்கள செயலாளர் மார்ட்டின் போவ்லஸ், குறித்த இலங்கையரின் தற்காலிக வீசா கடந்த ஏப்ரல் மாதம் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக பிரவேசிக்க வேண்டாமென அவுஸ்திரேலியா கோரிக்கை-

ஆட்கடத்தல்காரர்களின் உதவியுடன் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முனைய வேண்டாம் என, அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் உள்ள அவுஸ்திரேலியாவின் பிரதி தூதுவர் டேவிட் ஹோலி இதனைத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் யாராக இருந்தாலும், அவர்களுக்கு விசேட சலுகைகள் எவையும் வழங்கப்படமாட்டாது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிலர் மாத்திரமே மனூஸ் மற்றும் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். எனினும் அவ்வாறு மனூஸ் மற்றம் நவுரு தீவுகளுக்கு அனுப்பப்படுகின்றவர்கள் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பத்த 5 வருடங்களின் பின்னரே, அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு யோசனை வெளியிட்டு வைப்பு-

ranil01ஐக்கிய தேசியக் கட்சியினால் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பின் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டு வைத்துள்ளார். இந்நிகழ்வில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். ஐ.தே.கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் யோசனையில் மக்களின் உரிமையை மீண்டும் மக்களிடமே கையளித்தல், சட்டவாக்கம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்தல், அதிகாரப் பகிர்வு, நீதிமன்றம், நல்லாட்சி மற்றும் பெண்களுக்கான உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்ற கைதிகளில் புலி உறுப்பினரும் அடங்குவதாக அறிவிப்பு- 

மாத்தறை நகரில் சிறைக்கைதிகள் இருவர் தப்பிச்சென்றமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டுள்ளார். மாத்தறை நகரில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வை பார்வையிட கூட்டிச்சென்ற சந்தர்ப்பத்தில்  இவர்கள் தப்பிசென்றுள்ளனர். வெலிக்கடை மற்றும் காலி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே தப்பிச்சென்றதாக பொலீசார் தெரிவித்ததுடன், இவர்களுள் ஒருவர் புலிகள் இயக்க சந்தேகநபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லை நிர்ணயம் குறித்து கட்சிகள் கருத்துக்களை முன்வைக்கவில்லை-

தேர்தல் ஆணையாளர்- எல்லை நிர்ணயம் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் எவ்வித உத்தியோகபூர்வ தொடர்பினையும் கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க வேண்டிய அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைக்க தவறியுள்ளன. இனி எல்லை நிர்ணயம் குறித்து கலந்தாலோசிப்பது பொருத்தமற்றது. இதனை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ எனது தொழில் அல்ல. வழி நடத்த வேண்டியது மட்டுமே எனது கடமை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனது நிர்வாக விடயங்களுக்கு அப்பாற்பட்ட சில விடயங்கள் தொடர்பில் பகிரங்கமாக என்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது. எல்லை நிர்ணயம் தொடர்பில் யார் எக் கருத்துக்களை கூறினாலும் நாம் அரசியல் சார்ந்து செயற்பட மாட்டோம். தேர்தல் திணைக்கள உறுப்பினர்கள் கட்சி சார்பாக செயற்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளை வரலாம், அரசியல் பேசக்கூடாது-

தேசப்பற்றுள்ள இயக்கம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது. அத்துடன் விசாரணை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் விரைவில் காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர உத்தேசித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் யாவும் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா எமக்கெதிராக முன்வைத்த பிரேரணையில் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசின்மீது இறுதிக்கட்டத்தில் கடும் அழுத்தத்தை வழங்கவே ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்ஐக வருகிறார். இவ்வாறான அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடி பணியாது தைரியத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள இயக்கத்தின் வசந்த பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.