13ஆவது திருத்தத்தை ஒழிப்பது இந்திய – இலங்கை ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயல்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

plotesiddarthan-207x300[1]இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரமே 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகளை வேரறுக்கும் செயற்பாடாகும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்; எனவும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்திற்கு எந்த உறுப்பினராலும் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டு வரமுடியும். அதனை எவராலும் தடுக்க முடியாது. அத்துடன் தனிநபர் பிரேரணையென்பது பாரிய வலுவானதொன்றல்ல. 13ஆவது திருத்தம் என்பது இலங்கை – இந்தியா என்ற இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளுக்கமைய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுவரப்பட்டது. எனவே இதனை ஒழிப்பதென்பது இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும். அது மட்டுமல்லாது இதனை ஒழிப்பதற்காக பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் கிடைக்கப்போவதில்லை. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, இவர்களுடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன போன்றவர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்பது அவர்களின் கடந்தகால கூற்றுக்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது. தமக்கு ஒரு நியாயமான தீர்வாக அதிகாரப்பரவலாக்கலையே தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஹெல உறுமயவின் தவிசாளரும், அதன் பாராளுமன்றக்குழு தலைவருமான அத்துரலியே ரத்னதேரர் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானத்தை கொண்டுவந்ததன் மூலம் சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வினை வழங்கத் தயாரில்லை என்பதையே காட்டுகின்றது. நிச்சயமாக இந்த நாட்டிலே இனவாதத்தைத் தூண்டும் ஒரு செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. இத்தனிநபர் பிரேரணை ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை என புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் வேட்பாளர் இருக்க வேண்டும்- புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-

ploteதமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்து நிறுத்துவதன் மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியுமென புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன், இது மக்கள் கூட்டமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க உதவுமென்றும் கூறியுள்ளார். வட மாகாணசபை தேர்தல் செப்டெம்பரில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதில் இணைபவர்களுக்கே வாய்ப்பிருப்பது போல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளில் முதலமைச்சர் வேட்பாளராக வரக் கூடியவர்கள், நீண்டகால அரசியல் அனுபவமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டுமென்றால் தகுதியான வேட்பாளரைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து தெரிவுசெய்ய வேண்டும். இதன்மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியுமென்பதுடன், மக்களும் கூட்டமைப்பில் முழுமையான நம்பிக்கையை வைக்க உதவும் என புளொட் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு தொகுதி இலங்கையர்கள் ஆஸியிலிருந்து நாடு கடத்தல்-

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 28 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம்மூலம் நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்களும் இன்றுகாலை கொழும்பை வந்தடைந்துள்ளனர். இதன்படி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 1206 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 994 பேர் சுயவிருப்பில் நாடு திரும்பியவர்கள் எனவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலை பேராசிரியரின் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Jaffna uniயாழ் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுப்பதாக கூறி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் இன்றுகாலை 10 மணிமுதல் 11 மணிவரை மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாணவர்களால் பேராசிரியரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஜயலத் ஜயவர்தன காலமானார்-

Dr_-Jayalath-Jayawardenaஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலரும், பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுகயீனமுற்று சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டொக்டர் ஜயலத் ஜயவர்தன சிகிச்சை பலனின்றி இன்றுகாலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் திகதி பிறந்த ஜயலத் ஜயவர்தன தனது 59வது வயதில் காலமானார். இவர் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர். இதேவேளை டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கு மேல் மாகாணசபை உறுப்பினரும் கம்பஹா முன்னாள் மேயருமான அஜீத் மன்னப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் பூதவுடல் இன்றுமாலை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு, இவரது இறுதிக்கிரியைகள் ஜூன் 03ம் திகதி ஜா-எல வெலிகம்பிட்டியவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 விமான தாக்குதலில் வாலி-உர்-ரஹ்மான் பலி
 
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் தலைவர் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமான தாக்குதலின் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவிக்கப்படுகின்றது.

 ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்படவில்லை ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் அதிர்ச்சித் தகவல்
  
piletanஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ்(57) புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் அமெரிக்கப் படை வீரர்களால்  சுட்டுக் கொல்லப்படவில்லையெனவும், அவர் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும் அவரது முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டதாக அமெரிக்க தெரிவித்தது.
ஒசாமாவை அமெரிக்கப்படைகள் கொல்லவில்லையெனவும். அமெரிக்கப் படைகள்  அபோதாபாத்திலுள்ள வீட்டுக்குள் புகுந்து அவரின் காவலர்கள் இருவரை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர்  ஒசாமாவின் தொடையில் சுட்டதாகவும்.
உடனே ஒசாமா தன் உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்ததாகவும்.  சம்பவம் நடந்தபோது தான் அங்கு இல்லையென்ற போதிலும்  உறவினர்கள் மூலம் இதனைத் தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படைகள் அவரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் இறந்த பிறகு அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டதாகவும் ஒசாமா உடலை கடலில் புதைத்தாகக் கூறுவதில் உண்மையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பொய் கூறியுள்ளதாகவும் அமெரிக்கப்படைகள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ஒசாமா 10 ஆண்டுகளாக தனது இடுப்பில் வெடிகுண்டு அங்கியை கட்டிக் கொண்டு இருந்தார் எனவும் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில அவரது தகவலானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்தோட்டங்களுக்கு சொந்தமான காணிகள் எக்காரணத்தைக் கொண்டும் சுவீகரிக்கக் கூடாது : சதாசிவம்
  
 
நமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்ற தோட்டக் காணிகளை எக்காரணங் கொண்டும் சுவீகரிக்க கூடாது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார். மத்திய மாகாண சபை பதில் தலைவர் டபிள்யூ.எம்.எஸமான தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சனத்தொகைக்கேற்ப குடும்பங்களுக்கான வீட்டு வசதி பிரச்சினைக்கு தீர்வாக வளமற்ற தேயிலைக் காணிகள் வளமற்ற புல்வெளிகள் அரச காணி அபிவிருத்தி ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளைப் பெற்று அங்கு மாடி வீட்டுத் தொகுதிகளைக் கட்டுவதே பொருத்தமாகும் என வலியுறுத்தும் பிரேரணையொன்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  எஸ்.சதாசிவம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு செலாவணியை பெருமளவில் நம் நாட்டிற்கு ஈட்டித்தருகின்ற தேயிலைக் காணிகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இங்கு வாழுகின்ற மக்கள் இன்றும் ஒரே அறையில் பல குடும்பங்களுடன் வாழ்கின்றனர். இத்தகையவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். வளமான காணிகளை வளமாகவே வைத்துக்கொள்ள வேண்டும். தேயிலையிலேயே பிறந்து அதிலேயே மடிந்து அதற்கே உரமாகின்ற அம் மக்களின் வீட்டுப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தோட்டப் பிரதேசங்களில் தொடர் மாடி குடியிருப்புகள் எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல. மரணம் ஒன்று ஏற்பட்டு விட்டால் பிரேதப் பெட்டியை மாடிகளிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு ஜன்னல்களை உடைக்க வேண்டும் அல்லது கயிறு கட்டித்தான் இறக்க வேண்டும். எனவே தோட்டக்காணிகளை வெளியார் தேவைகளுக்காக சுவீகரிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட் காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது: இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

இந்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் பாவனைக்குட்படுத்தப்படாமல் உள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து அதனை பயன்தரக்கூடிய விவசாய நோக்கங்களுக்கான இளைஞர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு தலா இரண்டு ஏக்கர் பெருந்தோட்டக் காணிகளை வழங்குவதற்கான தீர்மானமொன்று பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகள் கடந்த திங்களன்று கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டமொன்றில் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துடனான எந்தவொரு கூட்டத்திற்கும் கம்பனிகள் அழைக்கப்பட்டிருக்கவில்லையெனவும் பயன்படுத்தப்படாத பெருந்தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் இறுதித் திட்டங்கள் குறித்து அவற்றுக்கு எதுவுமே தெரியாதெனவும் கூறினார்.
இந்த வாரம் வேறு சில விவகாரங்கள் குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் நாங்கள் கலந்து கொண்டிருந்த கூட்டத்தில் கூட இது பற்றி கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.

வட மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதில் பிரச்சினையில்லை-அமைச்சர் ராஜித-

6-Rajithaவட மாகாணத்திற்கு பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வடக்கிற்கு பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என சிலர் கூறுகின்றனர். மாகாண சபையால் பொலீசார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலீஸ்மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன், சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலீசார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது. அது மாத்திரமின்றி மாகாணசபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்நாட்டை அழிக்க முற்படுகின்றனர் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார். 

 கைதிகளின் உளநல மேம்பாட்டுக்கு விசேட திட்டம்-

jailகைதிகளின் உளநல விருத்திக்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான உளநல விசேட நிபுணர்கள் மூவரை கொழும்பின் வெலிக்கடை, கண்டியின் போகம்பரை மற்றும் கம்பஹாவின் மஹரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் உளநல பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் உளநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அவ்வாறனவர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு விசேட உளநல பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதனூடாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், அவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளையும் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.