பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை-
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மாணவர் விவகார பணிப்பாளர் கீர்த்தி சுரங்ஜித் மாவெல்லகே குறிப்பிட்டுள்ளார். பகிடிவதை செய்தமை உறுதியாகும் மாணவர்கள் குறித்து எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை-
மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கோரியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலீசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பிரச்சினையை ஏற்படுத்தும் விடயமென குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியிருந்தனர். இதற்கமைய நீதவான் என்.எம்.எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சீதைக்கு கோவில்–
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேச மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறியுள்ளார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டிற்காகவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக உறுதி-ஐ.தே.கட்சி-
பொதுநலவாய உச்சி மாநாட்டிற்காகவே அரசாங்கம் வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஆட்சிசெய்ய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. நாட்டை ஏகாதிபத்திய ஆட்சி செய்யவே அரசு விரும்புகிறது. நீதியை நிலைநாட்டுவதற்கு அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. இந்நிலையில் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எதனையும் நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. பொநலவாய உச்சி மாநாடு இலங்கையில் இடம்பெற வேண்டும் என்ற காரணத்திற்காகவே வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாணத்தில் அடையாள அட்டைப் பிரச்சினை-
வட மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாகவும பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 3ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவிலும், 5ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேசசெயலர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளதாகவும், இதேபோல் வட மாகாணத்தின் ஏனைய பகுதிளிலும் நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாகவும் பவ்ரல் மேலும் குறிப்பிட்டுள்ளது.