தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே முக்கியமானது- புளொட் தலைவர் த.சித்தார்த்தன்-
தமிழர் தரப்பு தற்போது தமக்குள்ள இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகூடிய கவனத்தை செலுத்த வேண்டும். அதைவிடுத்து தமக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக கொள்ளலாகாது. அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுமானால் அது தமிழருக்கு பாதிப்பாக அமையும். எனவே, தற்போதுள்ள இருப்பை தக்கவைத்துக் கொண்டே தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும் என்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கேள்வி: வடக்கின் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்படுவது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?
பதில்: அரசாங்கம் வடக்கின் குடிப் பரம்பலை மாற்றுவதற்காக திட்டமிட்டு எமது மக்களின் காணிகளை சுவீகரிக்கின்றது. இதனை உடனடியாக நிறுத்துவதற்கான சரியான நடவடிக்கைகளை நாங்கள் நேர்த்தியாக முன்னெடுக்க வேண்டும். அதனை நாங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளாவிட்டால் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பல் எப்படி மாற்றப்பட்டதோ, அதேபோன்று வடக்கில் தமிழரின் குடிப்பரம்பலும் மாறும் அபாயம் உருவாகும்.
இந்த அபாயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, அதற்கேற்றவாறு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. காணி பறிப்புக்கு எதிராக மக்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்று பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் பாதுகாப்பு தரப்பினரின் முட்டுக்கட்டைகளையும் மீறி நடத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிடம் இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், உலக நாடுகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதைக் காண முடியவில்லை. இந்தக் காணி சுவீகரிப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேசும்போது, அதன் தாற்பரியத்தை அவர்கள் சரிவர புரிந்து கொள்வதில்லை. இலங்கையர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு உட்பட எந்தப் பிரதேசத்திலும் வாழ முடியும்தானே. ஏன் அதனை தடுக்கின்றீர்கள் என தூதுவர்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். ஆனால், இங்குள்ள பிரச்சினையின் உண்மைத் தன்மையை தூதுவர்கள் புரிந்து கொள்வதில்லை. அரசாங்கம் வடக்கில் திட்டமிட்டு குடிப்பரம்பலை மாற்றும் திட்டத்தை முன்னெடுப்பதாக தெளிவுபடுத்தினாலும், அவர்கள் அதன் உள்ளார்ந்த சதியை புரிந்து கொள்வதில்லை. எனவே, தற்போதைய எமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.
கேள்வி: யாழ். வட பகுதியின் இராணுவ பிரசன்னம் அதிகரித்துச செல்வது தொடர்பில்?
பதில்: யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டது. விடுதலைப் புலிகளும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டனர் என்று அரசாங்கம் கூறுகின்றது. இவ்வாறு அரசு தெரிவித்தாலும் அரசாங்கம் வடக்கு இராணுவ முகாம்களை பலப்படுத்தி வருகின்றது. முல்லைத்தீவு, முறிகண்டி, கிளிநொச்சி பிரதேசங்களில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இராணுவ வீரர்களின் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக பல்வேறு வீட்டுத் திட்டங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இனசுத்திகரிப்பிற்கு உள்ளாகியுள்ளோம் என்ற மனோபாவம் தலைதூக்கியுள்ளது. தாங்கள் இராணுவ ஆளுகைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்கள் என்ற எண்ணமும் தiதூக்கியுள்ளது. வடக்கின் சிவில் நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவத்தின் தலையீடு மிகப் பெரியளவில் உள்ளது. இது நிச்சயமாக இனங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவர மாட்டாது. இராணுவம் விலக்கப்பட்டு சிவில் நிர்வாகம் அமுல்படுத்தப்படுவதன் மூலமே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதன்போதே உண்மையான, நிலையான சமாதானம் உருவாகும்.
கேள்வி: வட மாகாணசபை தேர்தலில் செப்டம்பரில் நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இத்தேர்தல் நடக்குமா?
பதில்: வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஜனாதிபதி வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென பலமுறை அறிவித்தார். தற்போதும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தப்படுமென தெரிவித்துள்ளார். இவ்வாறு இத் தேர்தல் நடத்தப்படுமானால் அதில் வெற்றிபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும். ஏனென்றால், வடக்கு மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றி அத்தியாவசியமானது. அப்போதுதான் 80 சதவீதமான வடபகுதி தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கின்றார்கள் என்ற செய்தியை உலகிற்கு வழங்க முடியும். எனவே, தமிழ்க் கட்சிகள் தமக்குள் யார் பெரியவர்? யார் தாழ்ந்தவர்? என்ற பலப்பரீட்சையில் இறங்கக் கூடாது.
இவ்வாறான தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகளை கைவிட்டு வட மாகாணசபை தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டும். அரசின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும். அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் பிரச்சினைகள் இருக்குமானால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்த்துக் கொளள்ப்பட வேண்டும்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பானது தனிக்கட்சி ஆதிக்கம் கொண்ட கட்சியல்ல என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நலனுக்காக முன்னுரிமை கொண்டதாகவே கூட்டமைப்பு இருக்க வேண்டுமென்பதே ‘புளொட்’ அமைப்பின் அபிலாஷையாகும்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தத்தமது தனித்துவத்தை பேணிப் பாதுகாப்பதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது ஆனால் அத் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு கூட்டமைப்பை ஒற்றுமையாக பலப்படுத்துவதன் மூலமே எமது அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வது மாத்திரமல்ல, இன்றிருக்கும் நிலைமையையாவது தக்கவைத்துக் கொண்டு சாத்வீக ரீதியாக அரசியல் தீர்வைப் பெற முடியும்.
கேள்வி: எமது பிரச்சினையில் இந்தியாவின் வகிபாகம் மற்றும் தற்போதைய அமெரிக்காவின் மௌனம் எதனை வெளிப்படுத்துகிறது?
பதில்: அமெரிக்காவின் மௌமென்பது எமது பிரச்சினையை கைவிட்டு விட்டதாக அர்த்தப்படாது என்பதே எனது நம்பிக்கையாகும். இலங்கைப் பிரச்சினை அமெரிக்காவிற்கு முதன்மையான பிரச்சினையல்ல. இதனை என்னைச் சந்தித்த அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா தனது நாடு சார்ந்த பாதுகாப்பு கேந்திரநிலை கொண்ட நாடுகளிலேயே தனது அதிக தலையீட்டை ஏற்படுத்தும். ஆனால் தமிழ்நாட்டின் தலையீடு காரணமாக இந்தியா எமது பிரச்சினையில் அதிக அக்கறையை தொடர்ந்து செலுத்திக் கொண்டேயிருக்கும். ஆனாலும் இந்தியாகூட தங்களுடைய நலன்களுக்குள்ளேயே எமது பிரச்சினைகளை அணுகும் என்பதை நாம் உணரவேண்டும். 1980 தொடக்கம் எமது இயக்கம் சார்பாக இந்திய அரசியல் தலைமைகள், அதிகாரிகள் பலருடன் வைத்திருந்த தொடர்புகளால் இதனை எனக்கு நிச்சயமாக கூற முடியும். எது எவ்வாறாயினும் எமது பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசின்மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரேயொரு நாடு இந்தியாவே ஆகும். எனவே, இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து நட்புறவுகளை பேணிப் பாதுகாக்க வேண்டியது முக்கியமானதாகும் என புளொட் தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
News
யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 32ஆம் ஆண்டு நினைவு தினம்-
இன்று யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 32ஆம் ஆண்டு நினைவு தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும், தொண்ணூற்றி எட்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளையும் உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூலகத்தை மறுநிர்மாணம் செய்யும்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். தற்போது யாழ் நூலகம் மீண்டும் புனரமைக்கப்பட்ட நிலையில் காணக்கிடைக்கிறது. அதனை மறுநிர்மாணம் செய்ய பாடுபட்டவர்கள் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
அரச சார்பற்ற நிறுவன நிதி குறித்து ஆராய நடவடிக்கை-
உள்நாட்டில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான நிதி வழங்கல்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்று அரசாங்கம் கோரியுள்ளது. ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, இது அவசியப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக, குறித்த நிறுவனங்களுக்கு நிதி கிடைக்கிற வழிகள் குறித்து ஆராயப்படுவது அவசியமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய – இலங்கை மின்சார பரிமாற்று வேலைத்திட்டம்-
தொழில்நுட்பம் மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டத்தைக் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் மதுரையிலிருந்து, அனுராதபுரம் வரையில், கடல் மார்க்கமாக மின்சாரத்தை பரிமாற்றும் திட்டம் ஒன்று, கடந்த 2007- 2008ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 285 கிலோமீற்றர் நீளமான மின்சார தந்திமூலம், 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பரிமாற்ற எதிர்பர்க்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தந்தியின் நீளத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்நிலை காணப்படுகிறது. இவ் வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு இதுவே காரணமாக இருக்கிறது என குறித்த வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான இந்திய நிறுவன பேச்சாளர் கூறியுள்ளார்.
பிரசாத் காரியவசம் இடம்பெயர்ந்து பணியாற்றுவோர் குழுவின் பிரதிநிதியாக நியமனம்-
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்ந்து பணியாற்றுவோர் தொடர்பான குழுவின் பிரதிநிதியாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 30ம் திகதி இது தொடர்பிலான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த குழுவிற்காக 14 நிபுணர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். சர்வதேச ரீதியாக இடம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனம் தொடர்பில் கண்காணிக்கும் பொருட்டு, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாத்தாண்டியாவில் கடத்தப்பட்டவர் கைது-
புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டியா பகுதியில் ஒருவர் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. வெள்ளைவேனில் வந்த சிலரால் நேற்றுமாலை 6.30அளவில் தனது கணவரான 34வயதான ரஜித லக்மால் என்பவர் கடத்தப்பட்டதாக அவரது மனைவியால் மாறவெல பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதை மாரவில பொலீசார் இன்றுகாலை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்களுக்கு தற்போது பொலீசாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாணவர் ஒன்றிய செயலரின் வீட்டின்மீது தாக்குதல்-
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள தனது வீடு நேற்றையதினம் இரவு 7.20 மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக தர்ஷானந் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் பொலீசாருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை – சீன உறவு இந்தியாவை பாதிக்காது-
இலங்கை, சீனாவுடன் பேணிவரும் உறவுகள் இந்தியாவை எவ்வகையிலும் பாதிக்காது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாகவே இலங்கை கருதி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுகிறது. குறிப்பாக அபிவிருத்தி அடிப்படையிலான உறவுகள் பேணப்பட்டு வருகின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்-
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இலங்கைப் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் ஐரோப்பிய பாராளுமன்றிற்கு விஜயம் செய்திருந்தது. இக் குழுவினர் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். யுத்தத்தின் பின் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியுள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் மக்கள் அவதி-
தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் மக்கள் அல்லோல கல்லோலப்பட்ட சம்பவம் புத்தளம் மாவட்டம் முந்தல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கேர்புரம் இன்றுகாலை திடீரென இரண்டு தடவைகள் ஒலித்துள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்ததுடன் இதுகுறித்து பொலிஸ் மற்றும் படையினருக்கும் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ தலைமை அதிகாரி ரனவீர கூறுகையில், அது சுனாமி எச்சரிக்கை அல்லவென்றும் தொழில்நுட்பக் கோளாரே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள்மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்-
சப்பிரகமுவ பல்கலைகழக மாணவர்கள் ஆறுபேரை இன்று பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்மீது கண்ணீர்ப்புகை பிரயோகமும் செய்துள்ளனர். தமது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வரும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பு- பதுளைக்கான வீதியில் போக்குவரத்தை முடக்க முயன்றபோதே கண்ணீர்ப்புகை பிரயோகத்தை பொலீசார் மேறகொண்டதுடன் ஆறு மாணவர்களையும் கைதுசெய்துள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 12 பொலீசார் காயமடைந்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் கூறுகின்றன. சப்ரகமுவ மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள பரீட்சைத் தடையை நீக்குமாறுகோரி கடந்த 28ம் திகதி நான்கு மாணவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்திருந்தனர். அதில் இரு மாணவர்கள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அங்கு திரண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகத்துள்ளனர்.