டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபம்-

DSC01533ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலருமான டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்,
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாக பாடுபட்ட சிங்களத் தலைவர்கள் ஒரு சிலரில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் ஒருவராவார். இனமத பேதமற்ற இலங்கையை உருவாக்க வேண்டுமென பாடுபட்ட இவர், அனைத்து சமூகங்களின் நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றிருந்தார்.
யுத்த காலத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி தமிழ் மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளிலும், அவர்களின் புனர்வாழ்விலும் அக்கறை காட்டியவர். அத்துடன் அவர் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தயங்காது குரல் கொடுத்துவந்த ஒரு ஜனநாயகவாதி.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவருடன் நான் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்போது அவர் தான் சார்ந்த இனத்தின்மேல் மிகவும் பற்றுறுதி வைத்திருந்தாலும், சிறுபான்மை தமிழர்களுடைய அரசியல் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு வர வேண்டுமென்பதிலும், தமிழ் மக்கள் முகம்கொடுத்த அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் அக்கறை கொண்டு அயராது உழைத்து வந்தார்.
இனங்களிடையே ஒற்றுமையை வேண்டிநின்ற, அதற்காக அயராது உழைத்துநின்ற, டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களின் இழப்பானது மிகப்பெரிய இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கொழும்பில் இருக்க முடியுமென்றால் வடக்கில் சிங்களவர்கள் ஏன் வசிக்க முடியாது-ஹெல உறுமய-

2 லட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர். வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா? வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட்ட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோமா? பம்பலப்பிட்டியவில் கூட்டமைப்பு காரியாலமொன்றை திறந்துவைத்துள்ளது அதற்கு நாம் கல்லெறிந்துள்ளோமா? என ஹெல உறுமயவின் செயலர் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை நகரசபை – அமெரிக்க தூதரக ஒப்பந்தம் இடைநிறுத்தம்-

திருகோணமலை நகரசபைக்கும், அமெரிக்க தூதரகத்துக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள திருமலை நகரசபைக்கும், அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது. கல்வி தகவல் நிலையமொன்றை ஸ்தாபிக்கவே உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. எனினும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் செய்த இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை-

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் நாளை இடம்பெறவுள்ள பரீட்சையில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்;டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் ஊழியரை நாளை மறுதினம்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை மாணவர்களின் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த 12 பொலீசாரும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற வீடு திரும்பியுள்ளனர்.

உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலர்களை பதவி நீக்க நடவடிக்கை-

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்க பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதேச செயலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிரூபத்தின் ஊடாக  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்  அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார். இந்த பதவிகளிலிருந்து நீக்கப்படும் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

புலி உறுப்பினர் தப்பியமை தொடர்பில் சிறை அதிகாரிகள்மீது விசாரணை-

மாத்தறை வெசாக் வலயத்திலிருந்து புலி உறுப்பினர் தப்பிச்செல்ல உதவிய இரு  சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து சிறைச்சாலை மற்றும் பொலீசார் இணைந்து இரு குழுக்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு அதிகாரிகளும் இலட்சக்கணக்கான ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு, குறித்த சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேற்படி அதிகாரிகள் பற்றி பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு அறிவிக்க உள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தப்பிச்சென்ற புலி உறுப்பினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் நீண்டகாலம் மேற்கொண்ட திட்டத்தின் அடிப்படையில் குறித்த புலி உறுப்பினர் தப்பிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என மேலும் கூறப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் கடத்தல்-

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான 25வயதுடைய சிவராசா சிவகரன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலீஸ்  நிலையத்தில் உறவினர்களால் இது விடயமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரசசார்பு அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பணியாற்றும் உறவினரான ஒருவரே தனது கணவரைக் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் தன்னிடம் கூறயதாக கடத்தப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரை புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் சமூகமளிக்குமாறு பொலீசார் அறிவித்துள்ள போதிலும் அவர் இதுவரை பொலீஸ் நிலையத்திற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நாடுகடத்தப்படும் இலங்கையர்கள் தொடர்பில் ஐ.நா. கவனம்-

பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளாகள் நாடு கடத்தப்படுவது குறித்து ஐ.நா அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கொரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடுத்தப்படுகிறார்களா? அவ்வாறு நாடு கடத்தப்படுவதன்மூலம் உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்நோக்கினார்களா என்பது பற்றி பிரித்தானிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 12 மாதகால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐ.நா அமைப்பு, பிரித்தானிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 

பிள்ளையாரடியில் புத்தர்சிலை வைக்க மேன்முறையீடு

மட்டக்களப்பு நகரில் பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். அவ்விடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த புதன்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பொதுமக்களும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலீசார் முன்வைத்த அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. எங்களால் புத்தர் சிலை வைக்கமுடியாமல் போனால் வேறு யாரால் வைக்க முடியும் என குறித்த தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மூன்று கோயில்கள் உடைத்து கொள்ளை-

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கோயில் உடைக்கப்பட்டு கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன. களுவாஞ்சிகுடி பகுதியிலேயே இவ்வாறு மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதன்படி குருக்கள் மடம் செல்லக்கதிர்காமர் ஆலயம், குருக்கள்மடம் ஐயனார் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம் ஆகிய ஆலயங்களே உடைக்கப்பட்டு பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். குருக்கள்மடம் சிறீலசிறீ செல்லக்கதிர்காமத்தின் சகல மூல விக்ரகங்கள், பரிபால விக்ரகம்கள் உடைக்கப்பட்டு தங்க தகடுகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆலய களஞ்சியசாலை உடைக்கப்பட்டு தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலய மூலவிக்ரகம் உடைக்கப்பட்டு தங்க தகடு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.