அமரர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன அவர்களின் இறுதி நிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்பு-

plotesiddarthan-207x300[1]ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் இறுதிக் கிரியைகள் இன்றுமாலை ஜா-எல, வெலிகம்பிட்டிய றோமன் கத்தோலிக்க மயானத்தில் இடம்பெற்றது. முன்னதாக அன்னாரது பூதவுடல் ஜா-எல, வெலிகம்பிட்டியவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி உரையாற்றினர். புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர். த.சித்தார்த்தன் அவர்கள், டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் இழப்பு சிறுபான்மையின மக்களுக்கு பிரத்தியேகமாக தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். ;தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென உண்மையாக பாடுபட்ட சிங்களத் தலைவர்கள் ஒரு சிலரில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களும் ஒருவராவார். யுத்த காலத்தில் அவர் பல தடைகளையும் தாண்டி தமிழ் மக்களுக்கு உதவியதுடன், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளிலும், அவர்களின் புனர்வாழ்விலும் அக்கறை காட்டியவர் என்று தெரிவித்தார்.

சீதைக்கு கோயில் அமைப்பதற்கு ஆட்சேபனை-

Ravananநுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் சீதை அம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கு இந்தியாவினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கும் முன் இராவணன் மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்படவேண்டும். இராவணன் மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், இராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார். இராவணன் சீதையை பலவந்தப்படுத்தியிருந்தால் சீதை அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார். பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு இராவணன் மன்னன் இடையூறு விளைவித்ததில்லை. எனவே, இராவணன் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைக்கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்-

velikadaகொழும்பு, வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2,500 கைதிகளை வெலிக்கடை சிறையிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு  திட்டமிட்டுள்ளது. கொழும்பிலிருந்து சிறைக்கைதிகளை வெளியேற்றும் திட்டத்தின்கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இடவசதியுள்ள சிறைகளுக்கு படிப்படியாக கைதிகள் அனுப்பிவைக்கப்படுகின்றனர். களுத்துறை, காலி, வட்டரெக்க ஆகிய சிறைச்சாலைகளுக்கு தற்போது வெலிக்கடையிலிருந்து கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறையிலுள்ள சகல பெண் கைதிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் கூறியுள்ளார்.

 வாக்காளர் பதிவு சட்டமூலத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு வழங்கும் என நம்பிக்கை

வட மாகாணசபைத் தேர்தலை நோக்காகக் கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள வாக்காளர் பதிவு திருத்தச் சட்டமூலத்துக்கு பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.கட்சி எதிர்ப்பு வெளியிடாது என்று நம்புவதாக ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு சட்டமூலம் அவசியம் என்பது ஐ.தே.கட்சிக்கு தெரியும். எனவே பெரும்பான்மை பலத்தினால் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலைமையில் மிகவும் அவசியமானதாக காணப்படுகின்ற இந்த சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கட்டாயம் நிறைவேற்றும். அதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 06ம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள வாக்காளர் பதிவு திருத்தச் சட்டமூலம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மகசின் சிறைசாலையில் தேடுதல், போதைப்பொருள், கைப்பேசிகள் மீட்பு-

magasenகொழும்பு மகசின் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆறு ஹெரோயின் போதைப்பொருள் பக்கெற்றுகளும் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமாலை மேற்படி தேடுதல் நடத்தப்பட்டதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புலிகள் இயக்க சந்தேகநபர்கள் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜி.எச் சிறைச்சாலையில் இத் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 11 சிம் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்துவதற்கு திட்டம்-

வெளிநாடுகளில் வாழும் புலிகளுக்கு ஆதரவாகவுள்ள புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிப மகாநாமஹேவா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வகையில் சர்வதேச நாடுகளில் வாழும் இலங்கை சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களைப் போக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமென இலங்கை மனிதவுரிமைகள் ஆணையாளர் பிரதிப மகாநாமஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் இளம் பெண் தற்கொலை-

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் தீக்குளித்து, கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன்படி யாழ் சுன்னாகத்தில் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து இப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலீசார் தெரிவித்துள்ளனர். யாழ். கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த 26வயதான சர்வேஸ்வரன் பிருந்தா என்ற இளம் பெண்ணே இன்றுகாலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலீசார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 நீதிபதி சுனில் அபேசிங்கவுக்கு விளக்கமறியல்-

கொழும்பு, ஹோமாகம மாவட்ட நீதிபதி சுனில் அபேசிங்க எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட வேளையிலேயே அவருக்கான விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 30ஆம் திகதி லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குண்டை வெடிக்கச்செய்து விமானப்படை வீரர் தற்கொலை-

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் நேற்றையதினம் இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர் கைகுண்டொன்றை வெடிக்க வைத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானப்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.