பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும சத்தியப் பிரமாணம்-

கம்பஹா மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக அஜித் மானப்பெரும, சபாநாயகர் முன்னிலையில் இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மே மாதம் 30ஆம் திகதி மறைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தனவின் வெற்றிடத்திற்கே அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின்படி அஜித் மானப்பெரும, டொக்டர் ஜயலத் ஜயவர்தனவுக்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறோம்-எரிக் சொல்ஹெய்ம்-

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் மத்தியஸ்த நிலைப்பாடு முடிவடைந்து பல வருடங்கள் கழிந்த போதிலும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அண்மையில் தாம் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்ததாகவும், இலங்கை தொடர்பில் செய்திகளை அறிந்துக்கொள்ளும் தாம் அது தொடர்பானவர்களை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனித் தமிழீழம் என்ற கோரிக்கையை நிராகரித்த அவர், இலங்கையின் ஜனநாயக வரம்பிற்குள் கலந்துரையாடல்கள்மூலம் தீர்வு எட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை மக்கள் சீனாவுக்கு அடிமைகளாகும் நிலை-ஐ.தே.கட்சி-

இலங்கையில் சகல மக்களும் சீனாவின் அடிமைகளாகும் நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீனா இலங்கைக்கு நிபத்தனையின் அடிப்படையிலேயே கடனுதவிகளை வழங்குகின்றது. நுரைச்சோலை அனல்மின்நிலைய கட்டுமான பணிகளை நிறைவு செய்துகொள்ள முடியாத அரசாங்கம், சீன வங்கியிடம் உதவி கோரியது. அந்த கடனை திரும்பிச் செலுத்த கால தாமதமானதால் நுரைச்சோலை திட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குகீழ் கொண்டுவர யோசனை கூறியுள்ளது. இவ்வாறு அனைத்து தேவைகளுக்கும் நிபந்தனையில் கீழ் அரசாங்கம் சீனாவிடம் செல்கிறது. இதனால் இலங்கை குடிமக்கள் அனைவரும் சீனாவின் அடிமைகளாகும் அபாயம் தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார். 

காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்-

மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கெர்ணடிருந்த 103 முஸ்லிம்கள்மீது 1990ஆம் ஆண்டு புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன், பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும் – கிரிஸ் நோனிஸ்-

28 வருடங்களின் பின் இலங்கை பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார். கிரிஸ் நோனிஸ், வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.  பில்லியன் டொலர்கள் செலவில் 2லட்சத்து 97ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட செயற்திட்டம் நடத்தப்பட்டமையும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளதுடன், இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை தொடர்பில் மேற்கத்தைய நாடுகள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கிரிஸ் நோனிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- திருகோணமலை

மட்டக்களப்பு பிரதான வீதியில் கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தூணில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 19 வயதுடைய ஞானரட்ணம் கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்தவராவார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்துச் சென்றவர் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சீனக்குடா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாலைதீவுப் பிரஜை கண்டியில் கைது-

வீசா இல்லாத நிலையில் இலங்கையில் தங்கியிருந்த மாலைதீவுப் பிரஜை ஒருவர் கண்டி, அலவத்துகொட, மாவத்துபொல பிரதேசத்தில் வைத்து பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டி, அலவத்துகொட பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்நபர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அலவத்துகொட பொலீசார் எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்;கொண்டு வருகின்றனர்.

 இலங்கையில் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பு-

ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினாலேயே இந்த ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு  விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து  தயாரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக்கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் ஆயர், பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் நீர்கொழும்பு சிறைக்கு விஜயம்-

மன்னார் ஆயர் இராயப்பு யோசப் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்றுகாலை 10 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்செய்து தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர். இவ்வாறு நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதுடன் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து  கொண்டுள்ளனர் .தமது வழக்கு  தொடர்பான  விடயங்களை பார்வையிடுமாறும், தமது வழக்குகளை  மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்களை தொடர்புபடுத்தி விடுமாறும், தமது குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடும்ப நிலைமைகள் மற்றும் வழக்கறிஞர்கள் குறித்து கவனம் எடுப்பதாக உறுதியளித்ததுடன், சிறையில் இருக்கும் சகல தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களையும் பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளனர்.