தியாகி பொன். சிவகுமாரனின் 39ம் ஆண்டு நினைவுதினம்-

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 39ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். அவர் 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கிலுள்ள படையினரை அகற்றுமாறு கபே கோரிக்கை-

வடக்கில் நீதியான முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனில், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து படையினரை உடன் அகற்றுமாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கபே இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாப் இக் கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கில் 2012ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை படையினர் கோரி வருகின்றனர். கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் வாக்காளர் பட்டியலை வழங்குமாறு கோரி மிரட்டுவதாக தெரியவருகிறது. இது குறித்து எம்மிடம் பலர் முறையிட்டுள்ளனர வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் அங்குள்ள படைகள் அகற்றப்பட வேண்டும். சிவில் நடவடிக்கைகள் யாவும் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன்மூலமே நீதியான தேர்தலை அங்கு நடத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி சலுகை நீடிப்பு-

ஈரானிடமிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பான சலுகையை அமெரிக்கா நீடித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த சலுகையினை அளித்துள்ளது. மேலும் ஆறுமாத காலத்திற்கு ஈரானிடமிருந்து எரிபொருட்களை இறக்குமதிசெய்ய அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதனை வரையறுக்குமாறு அமெரிக்கா ஏற்கனவே கோரியிருந்தது. இவ்வாறு இறக்குமதிகளை வரையறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா சில உதவிகளை வழங்கி வருகின்றது;. இதன்படி இலங்கை, சீனா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தென்கொரியா, துருக்கி மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு தொடர்ந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய பெறுமதிகள் இழக்கப்படுவதாக கனடா குற்றச்சாட்டு-

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் இழக்கப்பட்டு வருவதாக கனடா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. எனவே இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளை இதற்கு முன்னர் பொதுநலவாய நாடுகள் எவ்வாறு அணுகியதோ, அதேபோல, இலங்கையையும் அணுக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தூதுவர் ஹுஜ் சேகல் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமது பொறுப்புக்கூறும் தன்மையை நிலைநிறுத்தும் வகையிலான எந்தவித முன்னெடுப்புக்கான சமிஞ்கைகள் தென்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடாவின் எந்தவகையான குழு பங்கேற்கும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவன் கோவில் பூசகர் படுகொலை-

கதிர்காமத்தில் உள்ள செல்லக் கதிர்காமம் வள்ளிக்குகை சிவன் கோவிலின் தலைமைப் பூசகர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்றுகாலை 7 மணியளவில் பூசகரின் மகன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, கோவிலுக்கு பின்புறமாக உள்ள காட்டிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 70 வயதான பூசகரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் கடத்தப்பட்டமை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது-

சென்னையில் பிரித்தானிய தம்பதி கடத்தப்பட்ட விடயமாக சந்தேகநபர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஸ்கொட்லாண்ட்யார்ட் பொலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். சென்னையில் வைத்து இந்த பிரித்தானிய தம்பதியினர் கடத்தப்பட்டிருந்தனர். இக் கடத்தல் சம்பவமானது லண்டனிலும் சென்னையிலும் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பிரித்தானிய தம்பதியினர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். லண்டனின் டோர்செட் பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை பிரித்தானிய பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் இரு இலங்கையர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சென்னை பொலீசார் ஏற்கனவே கைதுசெய்துள்ளனர்.

அகதிகள் உண்ணாவிரதம்-

தங்களை விடுவிக்குமாறு கோரி, தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இப் போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 அகதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மீது எவ்வித விசாரணைகளும் நடத்தப்படாமல், நீண்டகாலமாக தடுத்து வைத்திருப்பது நியாயமில்லாத செயல் என இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை முன்வைத்து சில மாதங்களுக்கு முன்னர் இந்த முகாமைச் சேர்ந்த சசிகரன் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மனு-

இந்து ஆலயங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் ஜனதிபதிக்கு மனுவொன்றை அனுப்பியுள்ளது. இந்த மனு குறித்த ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் நேற்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்தவாரம நான்கு இந்து ஆலயங்கள் தாக்கி கொள்ளையிடப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

வடக்கில் தேர்தலை நடத்திய இலங்கையின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தலாம்-அமைச்சர் பீரிஸ்-

வட மாகாணசபை தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதன் ஊடாகவே இலங்கையின் முன்னேற்றத் தன்மையினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த முடியும். அதேபோன்று வட மாகாணசபை தேர்தல் விவகாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சி மாநாட்டை பாதிக்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகும். பிரிட்டன் பிரதமர் உட்பட பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர். எனவே, மிகவும் வெற்றிகரமான பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.