13ஆவது அரசியலமைப்பை திருத்த வேண்டியதில்லை-

JR Rajivஇந்திய தூதுக்குழு- இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் வட மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியே ஆக வேண்டும் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் யாழ் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே இந்தியக் குழுவினர் மேற்கண்ட விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி, பொலீஸ் அதிகாரங்களை நீக்கிட்டு தேர்தல் நடத்தவும்- குணதாச அமரசேகர-

13ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் பயனில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் குணதாச அமரசேகர இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை ஒழிக்காது அரசாங்கம் வடக்குத் தேர்தலை நடத்துமானால் அது பிரிவினைவாதிகளின் ஈழக் கனவை நனவாக்கும். அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் தேவையில்லாத திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது. எனவே ஜனாதிபதி உடனடியாக 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி, பொலீஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக பிக்கு சங்கம் நடவடிக்கை-

காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை இரத்துச் செய்யாமல் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமானால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பிக்குகள் சம்மேளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சம்மேளனத்தின் செயலாளர் தொம்பகொட சாராநந்த தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இரு சரத்துக்களை அகற்ற அரசாங்கம எடுத்த நடவடிக்கைக்கு தாம் பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், வட மாகாணசபை தேர்தல், காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை இரத்து செய்த பின்னரே நடத்தப்படவேண்டும் என்றும் தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 14 இலங்கை அகதிகள் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்குத் தயார்நிலையில் இருந்த 14 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்திய கேரள மாநிலத்தின் ஏர்னாகுளம் பகுதியில் வைத்து கொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் பஸ் நிலையத்திற்கு அருகில் விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கொச்சி பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் இருந்து இவர்கள் கொச்சிக்குச் சென்றுள்ளனர். ஜுட் சுசாந், ராஜீவ், கதிர்வேல், வினோத்குமார், தமிழ்செல்வன், புவனேஸ்வரன், குணசேகரன், பாஸ்கரன், முருகையன், பஞ்சேஸ்வரன், நித்தியகுமார், வினித்குமார், தீபன்,  முத்துலிங்கம், ஆகியோரே கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களாவர். கைதானவர்களை தாம் வசித்த அகதிமுகாம்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அரிய தாவர பாகங்களைக் கடத்தியவர் கைது-

5ஆயிரத்து 756 கிலோகிராம் எடை கொண்ட கிடைத்தற்கரிய தாவரங்களின் பாகங்களைக் கடத்திய ஒருவர் பொலநறுவையின் வெலிகந்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுமாலை வெலிகந்தை  வடமுனை பகுதியில் லொறியொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது தாவர பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 118 உரப் பைகளில் இந்த தாவர பாகங்கள் அடைக்கப்பட்டு லொறிமூலம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இவை பாதுகாக்கப்பட்ட தாவர இனத்தைச் சார்ந்தவை என்பதுடன் தம் வசம் வைத்திருத்தல் மற்றும் கொண்டு செல்லல் சட்டவிரோதமானது எனவும் பொலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்க பிஸ்கட்டுக்களுடன் இலங்கையர் சென்னையில் கைது-

தங்க பிஸ்கட்டுக்களைக் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 100 கிறாம் எடைகொண்ட தங்க பிஸ்கட்டுக்களை தனது உள்ளாடைக்குள் மறைத்துவைத்து கடத்திச் சென்றுள்ளார். மிகவும் சூட்சுமமான முறையில் கறுப்பு காகிதத்தினால் சுற்றியவாறு இவற்றை எடுத்துச் சென்றுள்ள நிலையிலும், சென்னை விமானநிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகமடைந்து இவரைக் கைதுசெய்துள்ளனர். கைதானவர் 45 வயதான மொஹமட் நௌசான் என தெரியவந்துள்ளது. இலங்கையிலிருந்து நேற்றையதினம் மாலை 2.45 மணியளவில் பயணித்த சிறீலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பயணித்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெலிக்கடை சிறைக்கைதி கூரைமீது ஏறி உண்ணாவிரதம்-

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவர் கூரைமீது ஏறி உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 55வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள கைதியே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டே இவருக்கு விடுதலை கிடைக்கவுள்ளது. எனினும் வீட்டு விடுமுறை வழங்கும் நிவாரணமாக தனக்கு விடுதலை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தே இக்கைதி உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரியவருகிறது.

வீடுகளைக் கையளிப்பதாக வாக்குறுதி, சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது-

அம்பாறையின் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை மேலும் ஒருவாரத்திற்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்திற்குள் நேற்றுமுற்பகல் பிரவேசித்த மக்கள் இரவுவரையில் தொடர்ந்து சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்காக நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளில் இதுவரை குடியேற அனுமதிக்கப்பட்வில்லை என இம்மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதனையடுத்து சுனாமியால் உண்மையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்பதாக வீடுகளைக் கையளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து சத்தியாக்கிரக நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு, விளக்கமறியல் சிறையில் தேடுதல்; நடவடிக்கை-

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலைக்குள் சுமார் 60 அதிகாரிகளைக் கொண்டு நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அங்குள்ள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்போது 33 கையடக்கத் தொலைபேசிகள், 15 சிம் அட்டைகள் உட்பட 100 கிராம் ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அங்குலானை தேவாலய உருவச்சிலைகள் சேதம்-

கொழும்பு புறநகரான ரத்மலானைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அங்குலானை, புனித. பிரான்ஸிஸ் தேவாலயத்திற்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் தேவாலயத்திற்கு உள்ளிருந்த சொரூபங்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பல பொருட்களை அடித்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளதாக அங்குலானை பொலீசார் தெரிவித்துள்ளனர். தேவாலயத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த இனந்தெரியாத குழுவினரே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். பூஜைபீடம், பூஜை பீடமேசை மற்றும் இரு சொரூபங்களும்; சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலீசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 பிபிசி

இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆளும் ஐக்கிய முற்போக்கு சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், இந்திய இலங்கை ஒப்பந்த்த்தை அடுத்து கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் படி, இரு மாகாணங்கள் தாமாக விரும்பி இணைந்துகொள்ள வகை செய்யும் பிரிவை ரத்து செய்ய ஒரு அரசியல் சட்டத்திருத்தத்தை ஆளும் தரப்பு முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

பிபிசிக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டி
mahinda_daglas-lankatruthமாகாண சபைகள் இணைவதை ரத்து செய்ய புதிய நகர்வு ?

இலங்கையில் மாகாண சபைகள் இணைய விரும்பினால், அவைகள் இணைய வழிவகை செய்யும் 13வது அரசியல் சட்டத்திருத்தப் பிரிவை ரத்து செய்ய இலங்கை அரசு முயலுவதாக வரும் செய்திகள் குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மேலும் இந்த திவினெகும போன்ற, மாகாண அரசுகளின் பட்டியலில் உள்ள அதிகாரங்களில் மத்திய அரசு , சட்டம் கொண்டுவர விரும்பினால், தற்போது அனைத்து மாகாணங்களும் அங்கீகரித்தால் மட்டுமே அது சட்டமாகும் என்ற நிலையை மாற்றி, பெரும்பான்மை மாநிலங்கள் அங்கீகரித்தாலே போதும் என்ற நிலையை உருவாக்கவும் அரசு ஒரு உத்தேச திட்டத்தை முன்வைக்கப்போவதாகத் தெரிகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா, இது குறித்து தமிழோசையிடம் கூறுகையில், இந்தக் கூட்டத்தில் இந்த பிரேரணைகள் குறித்த விளக்கங்கள் மொழிபெயர்ப்பாக தமக்குக் கொடுக்கப்பட்டாலும், அதற்குரிய போதிய விளக்கங்கள் இல்லாததால், இது குறித்து தன்னால் உடனடியாக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை என்றார்.

ஆனால் நாளை வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஏதேனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வந்தால், அது குறித்து முழுமையாகப் பரிசீலித்து ஒரு முடிவை தன்னால் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகின்றபோது, இனவாத நிலைப்பாட்டையோ அல்லது தொடர்ந்து சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையையோ தவிர்க்கவேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இந்த நிலை தொடர்வது சரியல்ல என்றும் தான் இந்தக் கூட்டத்தில் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்து பேசுகையில், உங்களை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் உங்களை ( டக்ளஸை) அமைச்சரவையில் வைத்திருக்கிறோம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை வேறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினைகள் வேறு என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் 13வது சட்டத்திருத்தத்தின் கீழ் தரப்பட்ட அதிகாரங்களைவிட கூடுதல் அதிகாரங்கள் தரப்படவேண்டும் என்ற கோரிக்கை இருக்கும் நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் குறைப்பது என்று இலங்கை அரசு உத்தேசித்தால் , அது குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்று கேட்ட்தற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆராய்ந்துதான் பதிலளிக்கவேண்டும், ஏனென்றால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று அரசு கூறும் போது, அவசரப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றார் டக்ளஸ்