தமிழ் மக்களை வலுப்படுத்துமாறு இந்தியக்குழு வலியுறுத்தல்-

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துமாறு, இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுன்றக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தாம் நேற்று ஜனாதிபதி மகிந்த hஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக, பாரதீய ஜனதா கட்சியின் பிரதித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் குழு நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளது. இதன்போது, யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழர்களின் இதயத்தை வெல்லக்கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியுள்ளார். இதற்காக வடக்கில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான தேர்தல்களை நடத்துவதுடன், அதிகாரப்பகிர்வையும் வழங்கி, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

மீனவர்கள் கைதாகும் விடயத்திற்கு முடிவுகட்டுமாறு வலியுறுத்தல்-

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைதுசெய்யப்படுகின்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டுமாறு, தி.மு.க தலைவர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதும், மத்திய அரசு இன்னமும் மௌனமாகத்தான் இருக்கிறது. இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த விதமான வினைத்திறனான நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங்கினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுயாதீனக் குழுக்களை நியமிக்குமாறு கோரிக்கை-

வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக 17ம் அரசியல் திருத்தத்தின் கீழுள்ள சுயாதீன குழுக்களை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்றையதினம் கொழும்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறு சுயாதீனக் குழுக்கள் நியமிக்கப்படாவிட்டால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு, அதன் தலைமைத்துவத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி அறிவுறுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா தீர்ப்பாயத்தின் இலங்கை நீதிபதி பதவி விலகல்-

சீனாவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடற்பிராந்திய பிரச்சினை தொடர்பான ஐ.நாவின் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் குழுவிலிருந்த இலங்கை நீதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த பதவி விலகலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. எனினும் இது தீர்ப்பாயத்தின் செயற்பாடுகளை பாதிக்காது என்று பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தினருக்கு சீனா பயிற்சி-

இலங்கை இராணுவத்தினருக்கு சீனா பயிற்சிகளை வழங்கவிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ தெரிவித்துள்ளார். இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் கடந்தவாரம் 2.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான உட்கட்டுமான வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே சீனா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்கவிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

  இரத்தினபுரியில் மினி சூறாவளி-

இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிவரை தொடர்ந்து வீசிய மினி சூறாவளி காற்றினால் இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின் கம்பங்கள் சரிந்து விழந்தமையால் போக்குவத்து தடைப்பட்டிருப்பதாகவும் இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது. இரத்தினபுரியின் அனேக பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்து காணப்படுப்படுவதாகவும் அத்துடன் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும் தடைப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நீர்கொழும்பு மீனவர்கள் மீட்பு-

புயல் காற்றில் சிக்கியதில் படகு கவிழ்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பைச் சேர்ந்த அன்ரன் ராஜமணி (33 வயது) மற்றும் மனோஜ் (31 வயது) ஆகியோரே காப்பாற்ப்பட்ட மீனவர்களாவர். குறித்த மீனவர்கள் இருவரும் நேற்றுமாலை 5 மணியளவில் தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர். இரவு கரையிலிருந்து 5 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையில் கடும்காற்று காரணமாக இவர்களது படகு கவிழ்ந்துள்ளது. பாதுகாப்பு ஜாக்கட் அணிந்திருந்மையால் இருவரும் படகினை பிடித்தவாறு கரையை நோக்கி 2 கிலோமீற்றர் துரம் வரை வந்துள்ளனர். 

சீரற்ற காலநிலை: 2 மீனவர் பலி, 15 பேரைக் காணவில்லை-

காலி, பலப்பிட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவரின் சடலங்கள் கரையொங்கியுள்ளன. மேலும் மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களைக் காணவில்லையெனவும், 8 வெறும் படகுகள் மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாகவே படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் பின்னர் பலபிட்டிய கடல் பகுதியிலிருந்து 11மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் அப்பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு-

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பகுதியில் உயிருக்குப் போராடிய மீனவர்கள் மூவர் விமானப்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் காலி முகத்திடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை படகு மூழ்கியதன் காரணமாக பேருவளை கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாதிப்பு-

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீசிய பலமான காற்று காரணமாக விமானநிலையத்தினுள் மரமொன்று முறிந்து விழுந்துள்ளதுடன் பல விளம்பரப் பதாதைகளும் உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. மேலும் இதன் காரணமாக சில விமானங்கள் புறப்படுவதிலும் காலதாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யாழில் பஸ் விபத்தில் அறுவர் படுகாயம்-

யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6பேர் படுகாயமைந்துள்ளனர். இந்த விபத்து, மிருசுவில் பகுதியில் இன்றுஅதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ். அரியாலையைச் சேர்ந்த குணசேகரப்பிள்ளை அருளினி (வயது 39) கணேஸ்வரன் வயது (வயது 45) பிரதீபா (வயது 30) அச்சுவேலியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் அஞ்குஜன் (வயது 22) இராசேந்திரம் றுசாந், ஜீவரத்தினம் (வயது 22) ஆர்னோல்ட் பிரசாத் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் சென்று கொண்டிருந்த பஸ்;சே பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் மிருசுவில் பகுதியில் வந்ததடைந்தபோது, பஸ்ஸின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பஸ்ஸை செலுத்தியதாகவும் இதன்போதே மேற்படி விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.