வெற்றிபெறும் நோக்கிலேயே அரசு தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய முனைகிறது-மாவை சேனாதிராஜா எம்.பி.-

வட மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவசர அவசரமாக தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு வாக்காளர் பதிவு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரம் காட்டிவருவதற்குக் காரணம் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்பதற்காகவே என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முன்னேறிய நாடுகள் சிலவற்றில் அந்த நாட்டின் குடிகள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த மக்கள் தமது தாய்நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பது போல், இந்தியாவில் இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் குடியுரிமை பெறாதவர்களும் நடைபெறவுள்ள வடக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை அந்த அந்த நாடுகளிலேயே, உண்டாக்கிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும்-மாணிக்கம் தாகூர்-

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் பொஸ்டனில் இடம்பெற் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் 3 மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். யுத்தம் நிறைவடைந்து 04வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னமும் தமிழர்கள் இரண்டாம் தர மக்களாவே பார்க்கப்படுகின்றனர். யுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்கம் காட்டிய அவசரத்தை, தமிழர்களை மீள்குடியேற்றவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் காட்டவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காண்பதற்கு, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வது அடிப்படை உயிர் நாடியை அகற்றும் செயல்-அமைச்சர் ஹக்கீம்-

13ஆவது திருத்தச்சட்டத்தில் இரண்டு திருத்தங்களை எப்படியாவது கொண்டுவரவேண்டும் என்ற அவசரம் அமைச்சரவையில் இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருக்கும் அடிப்படைக் காப்பீடுகளை 13ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து அகற்றி விடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகாது என நீதி அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்பப் பெறுவது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு இவ்விடயம் அணுகப்படுவதை என்னால் உணரமுடிந்தது. இது 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படை உயிர்நாடியையே அகற்றும் செயல். எனவே இதில் எமக்கு உடன்பாடில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணி பொலீஸ் அதிகாரங்கள் மட்டுமன்றி எந்த வகையான குறைப்பையும் மேற்கொள்வதற்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போகாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கான வாக்காளர் பதிவேடுகளை பார்வையிட வசதி-

பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேடுகள் நாடு முழுவதுமுள்ள கிராம சேவகர் அலுவலகங்களிலும், பிரதேச அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அரச பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு 5 ஆண்டுகளுக்கான வாக்காளர் பதிவேட்டு பிரதியைப் பெற்றுக்கொள்ளவென பெருந்தொகையானோர் தேர்தல் அலுவலகங்களுக்கு வருவதால் திணைக்களத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. தத்தமது பிரதேச செயலகத்தில் அல்லது தத்தமது பிரிவு கிராமசேவகர் அலுவலகங்களில் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 8.50 மணிமுதல் 12.00 மணிவரை இந்த பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்-அமைச்சர் நாராயணசாமி

13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாக இந்தியாவின் திட்டக்குழு மற்றும் பாராளுமன்ற விவகார மத்திய இணையமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் தொண்டமான் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோர் அண்மையில் சந்தித்தபோது வீ.நாராயணசாமியும் அதில் பங்கேற்றிருந்தார். 13ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் இந்தியா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது என இதன்போது கூறப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழப்பு-

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 18 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 24 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 36 மீனவர்களும், 37 படகுகளும் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை இன்றைய தினமும், மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியிலும், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பகுதியிலும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மீனவர்களுக்கு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து, 13பேர் உயிரிழப்பு-

இலங்கையர்களும் உள்ளடங்கியிருப்பதாக நம்பப்படும் அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடந்த புதன்கிழமை அன்று கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் 13 பேர் பலியானதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். மூழ்கிய படகில் 55 அகதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவுஸ்திரேலியாவின் மூன்று படகுகளும், மூன்று உலங்கு வானூர்திகளும் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் பலியான 13பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.  கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் 15 கப்பல்களும் 10 ஹெலிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள். அறிவித்துள்ளனர்.

வட மாகாணசபைத் தேர்தலுக்குத் தேர்தல் திணைக்களம் தயார்-

வட மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் தயாராக இருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்த தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில், 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 07ஆம், 14ஆம் அல்லது 28ஆம் திகதிகளில் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், தேர்தல்களை நடத்த மேலும் 21 நாட்கள் தேவைப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கு மனித உரிமைகள் தொடர்பில் விளக்கமளிப்பு-

மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் வட மாகாணத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுபடுத்தும் செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரையான காலப்பகுதி வரையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் கடமையாற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தெளிவுபடுத்தப்படவுள்ளனர். பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை குறைப்பது இத்திட்டத்தின் நோக்கமென கூறப்படுகிறது.