10.06.2013

ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவில்லை-

JVPஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையானது பௌத்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவளிக்காது. மாறாக தேசியளவில் புதிய அரசியல் அமைப்பொன்றுக்கான தேவை காணப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியல் அமைப்பு நிறுவப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது தற்போதுள்ள அரசியலமைப்பில் சிறு சிறு திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாகாண சபை முறைமை மாற்றம் அடைய வேண்டுமென்று ஜே.வி.பி. வலியுறுத்துவது இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கொள்கைகளில் அல்ல. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவமான சந்தர்ப்பங்கள், சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என்பவை உரியவகையில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து இன மக்களுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் இன முரண்பாடுகளே தோன்றும். தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமையானது ஏற்றுக்கொள்ளும் விதத்திலோ அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலோ அமையவில்லை. எனவே, இம்முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. தொடர்ந்தும் உள்ளது என சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

 பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடத்தை வெளியிட வேண்டும்-மனித உரிமைக் கண்காணிப்பகம்-

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் இருப்பிடம் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அண்மையில், எக்நெலிகொடவை தாம் பிரான்ஸில் சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார். காணாமல் போன எக்நெலிகொட மற்றும் ஏனைய காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கண்காணிப்பகம் வலியுத்தியுள்ளது. சட்டவிரோத மற்றும் பலவந்தமான கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பக ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். யுத்தகாலத்தில் 5671பேர் பலவந்தமான முறையில் காணாமல் போயிருப்பதாக ஐ.நா புள்ளிவிபரத் தகவல்கள் கூறுகின்றன. 2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13 பல்கலைக்கழகங்களை நிறுவ நடவடிக்கை-

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகபெரும 13 பல்கலைக்கழக கல்லூரிகளை நிறுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பல்கலைக்கழக கல்லூரிகளின் நிர்மாண பணிகளுக்காக 3173 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்வூட் அழகியற்கலை மையத்திலும் சபுகஸ்கந்த தொழில்பயிற்சி மையத்திலும் இரண்டு பல்கலைக்கழக கல்லூரிகள் நிறுவப்படவுள்ளன. ஜயவர்த்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார கல்விக்கான பல்கலைகழக கல்லூரி நிறுவப்படவுள்ளது. அம்பாறை தொழில்நுட்ப கல்லூரியில் தேசத்திற்கு மகுட கண்காட்சிக்காக நிறுவப்பட்ட புதிய கட்டிடங்களில் பல்கலைக்கழக கல்லூரி நிறுவப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக 09 பல்கலைக்கழக கல்லூரிகளை இரத்மலான, குளியாபிட்டிய, தலல்ல, பத்தேகம, கட்டுநாயக்க, அநுராதபுரம், பொரல்ல, கட்டுபத்த மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிறுவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டலஸ் அழக்பெரும அமைச்சரவைக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
 
புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை-

swissபுகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விதிகளை சுவிட்ஸர்லாந்து கடுமையாக்கியுள்ளது. நாட்டிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் சுவிட்ஸர்லாந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின் பிரகாரம் இராணுவத்தில் இருந்து வெளியேறியமை புகலிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நீண்டகால காரணமாக கருத முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு சுவிஸ் தூதரகத்தின் ஊடாக புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகலிடம் கோரி விண்ணபித்த சுமார் 48 ஆயிரம் வழக்குகள் சுவிட்ஸர்லாந்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டவர் கைது-

ஒன்றரைக் கோடிக்கு மேல் நிதிமோசடியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 7க்கும் மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ள இவர், பலரிடம் தொழில் வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி பணம் வசூலித்து வந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி புஸ்பகுமார தலைமையிலான குழுவினரே இவரைக் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையைச் சேர்ந்த ஆதம்பாவா முகமது ஜிப்ரிஸ் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலீசார் கூறுகின்றனர். 
 
கல்முனை மாநகர சபை உறுப்பினர் வீட்டின்மீது கைக்குண்டு தாக்குதல்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்முனைக்குடி மத்ரசா வீதியில் அமைந்துள்ள மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்வின் வீட்டின்மீது நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், வாசல் கதவு, சுவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலின் போது மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்ட கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை மாநகர சபையின் ஆளும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.எம்.பரக்கத்துல்லாஹ் மாநகர சபையின் அதிருப்திக்குழு அங்கத்தவராக இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அம்பலாந்தொட கடற்பரப்பிலிருந்து 14 சடலங்கள் மீட்பு

சீரற்ற காலநிலை காரணமாக கடும் கற்காற்றில் சிக்குண்டு உயிரிழந்த 14 மீனவர்களது சடலங்கள் இன்று அம்பலாந்தொடவிலிருந்து கொஸ்கொட வரையான கடற்பரப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவர்களது சடலங்கள் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பலபிட்டிய வைத்தியசாலைக்கு நேற்று 12 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று 14 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதேவேளை சீரற்ற காலநிலையில் கடலிற்குச் சென்று விபத்தில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

indiaஇலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்புப் படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இவர்களின் போராட்டத்தின் போது நீலகிரி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு போகும் பாதைகள் பலமணி நேரம் தடைபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது