11.06.2013
ஜாதிக ஹெல உறுமைய – ஜனாதிபதி சந்திப்பு-
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாணசபை அமைக்கப்படும் முன்னர் யாப்பிற்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசியமானவை என ஜாதிக ஹெல உறுமைய முன்வைத்த 5 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட 5 விடயங்களில் 2 ஐ, அமைச்சரவைக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெறும் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது மனசாட்சிக்கு அமைய செயற்பட வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் முயற்சியினை ஜனாதிபதி கைவிடவேண்டும்: சம்பந்தன்-
ஜாதிக ஹெல உறுமய,தேசிய சுதந்திர முன்னணிஆகியவற்றின் கோரிக்கைகளுக்கிணங்க 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினை ஒழிப்பதற்கு அல்லது அர்த்தமில்லாத பெறுமதியற்ற பிரயோசனமில்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயல்வது மிகவும் ஆச்சரியத்துக்குரிய நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முயற்சியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைவிடவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளைத் தவிர வேறெந்த கட்சிகளும் கோரிக்கை விடுக்கவில்லை. இந்தக் கட்சியினருக்கு உதவியாக ஜனாதிபதி செயற்படுவது வேடிக்கையான விடயமாகும். இந்த நடவடிக்கையினை ஒருபோதும் ஏற்கமுடியாது. இந்த முயற்சியினை கைவிடுவது நாட்டுக்கும் நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் நன்மையான முடிவாக அமையும் என்று இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
13ஐ திருத்தும் விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிடவுள்ளோம்-
அமைச்சர் திஸ்ஸ விதாரண- அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கொண்டுவரவுள்ள இரண்டு திருத்தங்கள் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எமது கட்சியின் அதிருப்தியை வெளியிடவுள்ளோம் என்று ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அந்த விடயம் தற்போது வலுவிழந்துள்ளது. எவ்வாறெனினும்; 13ஆவது திருத்தத்தில் அதிகாரக்குறைப்பு செய்வது சரியாகாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் நோக்கிலும் மாகாண சபைகள் தொடர்பான சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்போது அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தை பெறவேண்டும் என்ற பிரிவை 13 ஆவது திருத்தச் சட்டத்திலிருந்து நீக்கவும் அரசாங்கம் அவசர சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளது. இது தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் அதிகாரக் குறைப்புக்களை செய்வது சரியாக அமையாது. எனவே அந்த திருத்த யோசனை தொடர்பில் எமது அதிருப்தியை நாங்கள் வெளியிடவுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தீர்மானம்- பவ்ரல்-
வட மாகாணசபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வட மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தங்களுடைய குழு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேரை வரவழைக்கவிருப்பதாகவும் அவர்கள் அனைவரும் வடமாகாணத்திலேயே கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு-
சீரற்ற காலநிலை காரணமாக பலியான மீனவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. காலி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மேலும் 30 மீனர்களை காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் வான்படையினரும் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை தொழிலுக்காக சென்ற 5 மீனவர்களை காணவில்லை என்று கன்னியாகுமரி மீனவ சங்க அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் அறியும் பட்சத்தில் தமக்கு அறியத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதி பொலீஸ்மா அதிபர் கைது-
மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலீஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, இரகசிய பொலீசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் இரகசிய பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, பொலீஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 6ஆம் திகதி பிரதி பொலீஸ் அதிபர் வாஸ் குணவர்தன, இரகசிய பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். கடந்த மாதம் 22ஆம் திகதி பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்