12.06.2013

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர்மீது தாக்குதல்-

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர்மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலி, பலபிட்டிய மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்றுமாலை 4.30அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீன்பிடிக்குச் சென்று அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர். அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 
 
இந்தியாவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு-

13வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை நீக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 1987 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் ஒருதலைப்பட்ச மீறல் இடம்பெறுவதாக கூறி, அது குறித்து இந்திய பிரதமர், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோருடன் கலந்துரையாட உடன் இந்தியாவுக்கு வருமாறு, இந்திய அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதுதாக கூறப்படுகிறது. இந்த அழைப்புக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடுத்த சில தினங்களில் புதுடெல்லி செல்ல உள்ளனர். கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சலமான் குர்ஷித், நிதியமைச்சர் பா. சிதம்பரம் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைமீது கூடுதல் அவதானம்-அமெரிக்கத் தூதுவர்

தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முடிவு செய்வதற்ளற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் உள்ள ஐ.நா செயலகத்தில், நேற்று செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னர்சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளார். இலங்கை அரசுடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை இணைந்து செயற்படும்படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது. தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிகக்கவனமாக அவதானித்து வருகிறது என ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
 
உலக அமைதியான நாடுகளில் இலங்கைக்கு பின்னடைவு-

2012ஆம் ஆண்டிற்கான உலகில் அமைதி நிலவும் நாடுகளை தரப்படுத்தி வெளியிடப்படும் உலக அமைதிச் சுட்டெண்ணில் இலங்கை 110வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 162 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இந்தியா 141வது இடத்தைப் பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டைவிட இலங்கை ஆறு இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. அரசியல், உள்நாட்டு முரண்பாடுகள், பயங்கரவாதம் உள்ளிட்ட பல விடயங்களை கணித்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுட்டெண்ணில் இலங்கை 2.3 புள்ளிகளைப் பெற்று 110ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதேவேளை தெற்காசியாவிலேயே மிக அமைதியான நாடாக பூட்டான் முன்னிலையில் உள்ளது. தெற்காசியாவில் அமைதியான நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தையும் இந்தியா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன. 
 
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கூட்டமைப்புக்கு கடிதம்-

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆயர். இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக நடைபெற்ற கொடிய யுத்தத்தில் வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் மக்களாகிய நாம் சொல்லொனா துன்பங்களையும் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் அடைந்து ஏதுமற்ற ஏதிலிகளாய், இழப்பதற்கு இனிமேல் எதுவுமில்லை என்ற நிலையில் நடைப்பிணங்களாய் இருக்கின்றோம் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். எதிர்காலமே இருள் என்ற நிலையில் சிறையில் இருப்பதால் பொருளாதார ரீதியாக அடிமட்ட பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்விரீதியான செலவுகள் மற்றும் வாழ்விடம் என்பவைகளுடன் சட்டத்தரணி தொடர்பான உதவிகள் என பல உதவிகள் தொடர்பாக நாம் பலமுறை கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு எதுவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம் உங்களிடம் எதிர்பார்த்திருப்பது, அரசியல் கைதிகளினுடைய அடிப்படை விடயங்களான குடும்பநலன் மற்றும் சட்டரீதியான உதவிகளையேயாகும். இது தொடர்பாக கூட்டமைப்பிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா? தமிழ் அரசியல் கைதிகளில், திருமணமானவர்களின் எண்ணிக்கை, உடல் பாதிப்பானவர்களின் விபரங்கள் உள்ளிட்ட தரவுகள் தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டனவா? இவ்விடயங்கள் தொடர்பில் தங்களின் காரியாலங்களில் முறையிடும்போது அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியாததையிட்டு மிக வேதனையாகவுள்ளது. பல கைதிகளின், பிள்ளைகள் கல்வியை தொடர புத்தகம், அப்பியாச கொப்பிகள், எழுது கருவிகள் இன்றியும், ஒருவேலை உணவுக்கே கஸ்டப்படும் பொருளாதாரமற்ற நிலையில் கல்வியையும் இடைநிறுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைபில் சட்டத்தரணிகள் பலர் இருந்தும் கூட ஏன்? எங்களுடைய பிள்ளைகளின் சட்டநடவடிக்கைக்கு உதவ முன்வரவில்லை? தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக காட்டுக்கின்ற அக்கறை இந்த விடயத்தில் கூட்டமைப்பிற்கு இல்லாமல் போனது ஏன்? கடந்தகால கசப்பான அரசியல் சூழ்நிலையே இன்று நீண்டகால சிறைவாழ்க்கைக்கான காரணமாகும். இதனை நீங்கள்கூட பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நலன்புரி குழுவொன்றை நியமிக்கவேண்டும் அந்த நலன்புரி குழுவுக்கு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கும். அந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்க் கட்சிகள் பங்கேற்க வேண்டும்-பா.ஜ.க-

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என இந்திய மாநிலங்களவை பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரவிசங்கர் பிரசாத், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும், வடக்கு மாகாண கவுன்சிலில் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருந்தார். அதேபோன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசிய அவர், பாராளுமன்றத் தேர்வுக்குழு உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான அமைப்புகளில் பங்கேற்று தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இருதரப்பும் பிடிவாதத்தை தளர்த்தினால்தான், தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ஆஸி. சென்ற இலங்கை அகதிகள் படகை காணவில்லை

அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கை அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளது.  இப்படகை ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த படகில் இலங்கை அகதிகள் 30 பேர் பயணித்துள்ளனர். இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது. தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 
 
தாய்லாந்திருந்து வந்த இலங்கை வர்த்தகர் கைது-

தாய்லாந்திருந்து இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் அம்பாந்தோட்டை, மத்தல விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்க நகைகள் மற்றும் இரத்தின கல் எடுத்து வந்த நிலையில் இவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றுமுற்பகல் தாய்லாந்து, பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த யூ.எல் 827 என்ற விமானத்தில் பயணித்த கொழும்பு வர்த்தகர் ஒருவரே சுங்க அதிகாரிகளினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரத்தினம் மற்றும் நகைகளின் பெறுமதி பற்றி தொடர்ந்தும் கணித்துக் கொண்டிருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னணியில்-

சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முதனிலை வைரஸ் எதிர் கணனி மென்பொருள் உற்பத்தி நிறுவனமான கெஸ்பர்ஸ்கை நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கணனி பயனாளர்கள் அதிகளவில் சைபர் தாக்குதல்களுக்கு இலக்காவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சைபர் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய உலக தர வரிசையில் இலங்கை எட்டாம் இடத்தை வகிக்கின்றது. 51 வீதமான கணனிப் பயனர்கள் சைபர் தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 15 வீதமான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
காலநிலை குறித்த எச்சிரிக்கை நீடிப்பு-

மன்னார் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற் பரப்பில்  மீன்pடி மற்றும் கடற் தொழிலில் ஈடுப்படுபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 12 மணி நேரத்திற்கு இந்த அவதான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, காற்றுடனான மழை இன்றும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு பெய்த கடும் மழையினாலும் கடுங்காற்றினாலும் நுவரெலியா ஹற்றன் டிக்கோயா நகரசபைப் பகுதிகளில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இந்த நகரசபையின் தவிசாளர்; ஏ.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கடும் மழை வெள்ளத்தினால் டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததினால் டிக்கோயா நகரப்பகுதி குடியிருப்பாளர்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கடும் மழை பெய்வதால் டிக்கோயா நகரில் வெள்ளப்பாதிப்புக்கள் இடம் பெறக்கூடிய இடத்தில் வாழுகின்றவர்களும் அட்டன் காமினிபுரப் பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதால் இப்பகுதி குடியிருப்பாளர்களும் அவதானமாக செயற்படுமாறும் ஹற்றன் – டிக்கோயா நகர தவிசாளர் ஏ. நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, ஹற்றன், மஸ்கெலியா, நோர்வூட்;, பொகவந்தலாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
 
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகரிப்பு-

பலத்த காற்றுடனான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அவர்களுல் 54 பேர் மீனவர்கள் என்றும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இடர் முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான நிதி மாவட்ட செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துகொள்ளுமாறு அறிவித்துள்ளது.