பொலீஸ் தாக்குதலை கண்டித்து நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்-

vavuniyaவவுனியா  வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், இன்றுகாலை நெடுங்கேணி பிரதேச விளையாட்டு விழா இடம்பெற இருந்த சமயம் மைதானத்தில் இருந்து தனது விடுதிக்கு சென்ற சமயம் பொலிஸார் மறித்தபோதிலும் அதனை அவதானிக்காத நிலையில் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தனது விடுதிக்கு சென்றபோது பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் அவரை விடுத்திக்குள் வைத்து தாக்கியதுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக பொலிஸாரிடம் கலந்துரையாடுவதற்காக சென்ற பிரதேச செயலாளரை நிலையத்தின் பொறுப்பதிகாரி நீண்டநேரம் சந்திக்காது காத்திருக்க வைத்ததுடன் உதவி பிரதேச செயலாளரை போக்குவரத்து பொலிஸார் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். எனவே நாம் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம் என தெரிவித்துள்ளனர். இதேவேளை, அதன்பின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இச்சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம்-

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. குடிவரவு சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்துவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய இலங்கை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை வரையறுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இது n;தாடர்பில் ஆஸியின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் சிங்கள குடிசன மதிப்பீடு-

jaffnaயாழ்.மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் யாழ்.மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருகின்றது. யாழ். மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களுமே சேகரிக்கப்படுகின்றன. இது தொடர்பான சுற்றுநிரூபம் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிராம சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம சேவையாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம் தெரிந்த முதியவர்கள் இல்லை என்றும் கிராம சேவையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், பெருமளவான கிராம சேவையாளர்கள் 1983ஆம் ஆண்டிற்கு பின் நியமனம் பெற்றவர்களாக இருப்பதால் தகவல்களை திரட்டுவதில் தாம் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கிராம சேவையாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
வடக்குத் தேர்தலை 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே நடத்த வேண்டும்-

யாழ் ஆயர்- வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு 13ஆவது திருத்தச் சட்டமானது மிகவும் தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. இச் சட்டத்திற்கு அமையவே அரசாங்கம் வடமாகாணத் தேர்தலை நடத்தவேண்டும். தேர்தலை நடத்துகின்றபோது ஜனநாயக அதிகாரங்களை தமிழ் மக்களும் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். எனவே 13ஆவது திருத்தச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தேர்தலை நடத்தத் திட்டமிடுவது பிழையான முடிவாகும் என அவுஸ்திரேலியாவின் தெற்காசிய அரசியல் ஆலோசகர் மைக் ஹில்மனிடம் யாழ் ஆயர் தோமஸ் சவுந்திர நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை-

நாட்டிற்குள் இயங்கும் சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் ஹூலுகல்ல அறிவித்துள்ளார். இலங்கையில் அவை உரிய முறையில் குறித்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படாவிடின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதும் தடை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பதிவு செய்யாமல் நாட்டுக்குச் சேவையாற்றும் தோரணையில் அரசைக் கவிழ்க்க அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொள்ள மோசடிகளில் ஈடுபட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட அரச சார்பற்ற நிறுவனங்கள் இரகசியமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்கப்பட மாட்டாது. எனவே, அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும். பதிவு செய்யாமல் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுலாக்கி அந்த நிறுவனங்கள் நாட்டில் இயங்குவதை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹூலுகல்ல மேலும் தெரிவித்துள்ளார். 
 
10 வடபகுதி இளைஞர்கள் காத்தான்குடியில் கைது-

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச கடற்பகுதி ஊடாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 இளைஞர்களும் அவர்களுக்கு உதவிய ஒருவரும் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள மெத்தைப் பள்ளிவாயலுக்கு அருகிலிருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் யாவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, முருங்கன், கரவெட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிவந்ததாக தெரிவிக்கப்படும் வேன் தப்பிச்சென்றுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
சிறைச்சாலைகள் ஆணையாளரின் உயிருக்கு அச்சுறுத்தல்-

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம சிறைச்சாலை திணைக்களத்தில் பாரிய மாற்றங்களை செய்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களத்தில் இடம்பெற்று வந்த மோசடி நடவடிக்கைகளை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு எதிராக சிலர் சூழ்ச்சி செய்வதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அவரை பதவியிலிருந்து நீக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி சங்கம் கூறியுள்ளது.
 
கொழும்பில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு-

மூன்று தசாப்தகால யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின்கீழ் கிழக்குக்கு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கவென சர்வதேச முதலீட்டாளர் மாநாடொன்று கொழும்பில் நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் அஹ்மட்டின் எண்ணக் கருவுக்கு ஏற்ப எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரு தினங்கள் இப்பேரவை நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண விவசாய, கால்நடை வளர்ப்பு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலா அமைச்சு, பொருளாதார அமைச்சினதும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினதும் ஒத்துழைப்புடன் இதனை ஏற்பாடு செய்கின்றது.