அதிகாரங்களை குறைப்பதற்கு ஆதரவளிக்க முடியாது: தெரிவுக்குழு குறித்து கூட்டமைப்பு கருத்து

tnaஅதிகாரங்கள் குறைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கோ, செயற்பாட்டுக்கோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஒருபோதும் துணைபோகாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும் அது குறித்த உத்தியோகபூர்வ அழைப்பிதழ் எதுவும் கூட்டமைப்பிற்கு கிடைக்கவில்லையென்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் ஆளும்தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் மற்றும் காணி உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் சிலவற்றை சவாலுக்கு உட்படுத்தி அவற்றை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் திருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்படி தெரிவுக்குழு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் எமக்கு அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கவும் போவதில்லை என்றார்.

13 ஆவது திருத்தத்தில் கைவைக்க விடமாட்டோம் : ராஜித உறுதி

13 ஆவது திருத்தம் தொடர்பில் நான் ஆரம்பத்தில் இருந்து எனது கொள்கையில் மாறவில்லை. அதற்கு எதிராக செயற்பட்டுவரும் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு நான் எதிர்;ப்புத் தெரிவிக்கின்றேன். 13 ஆவது திருத்தம் தொடர்பில் கைவைப்பதற்கு எவ்விதத்திலும் நாம் இடமளியோம் அதனை பாதுகாப்பதற்காக நான் எனது பதவியையும் இழக்கத் தயார் என தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஜித செனரத்ன தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமை கொடுக்கப்பட்டால் ஈழம் உருவாகுமென பேசுபவர்கள் தற்போது தங்களை மாகாண சபைகளின் ஆட்சியை தீர்மானிக்கும் ரிமோட்கொண்ட்றோல் என சொல்லுகின்றனர். மாகாண சபை முறைமையின் கீழ்; தமது வாழ்வாதாரத்தையும் அதன் சுகபோகத்தையும் அனுபவிப்பவர்கள் அதனை தமிழ் மக்களுக்கு வழங்கும் போது அகற்கு எதிராக கூக்குரல் இடுவதேன். இவ்வாறு பிரிவினைவாதம் பேசும் சிங்கள இனவாதிகளால் தான் தமிழ் இனவாதிகள் தோற்றம் பெற்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் இயல்பு நிலை பாதிப்பு ஆயிரக்கணக்கானோர் தொழிலிழப்பு, குளிரும் அதிகரிப்பு
  
 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினையடுத்து நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கடந்த ஒருவாரகாலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, மரம் முறிந்து வீழ்தல், போக்குவரத்து தடை, மின்சார தடை ஆகியவை நீடித்து வருகின்றன.
இதனால் நுவரெலியா, இராகலை, வலபனை, ஹட்டன், தலவாக்கலை, கொட்டக்கலை,நோர்வூட், இரத்தினபுரி, காவத்தை, இறக்குவாணை, பலாங்கொடை, கண்டி, பூஜாபிட்டிய, அக்குறணை, யட்டிநுவர, பஸ்பாகே, பாத்ஹெவாஹெட்ட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
மேலும் காற்றோடு கூடிய பலத் மழையில் நோர்வூட் மேற்பிரிவு மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
அத்தோடு ஹட்டன் இலங்கை வங்கிக்கு அருகில் மரமொன்று சரிநபுது விழுந்தள்ளது. ஹட்டன் டி.கே.டபுள்யூ கலாசார மண்டபத்துக்கு அருகில் மரக்கிளைகள் முறிந்து விழந்து சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இதேவேளை பலத்த மழை காரணமாக நீரேந்து பகுதிகளான மவுசாகலை, காசல்ட்ரீ, விமலசுரேந்திர, நோட்டன் ப்ரீஜ் உள்ளிட்ட நீர்த்தேத்தங்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
இதேவேளை கண்டி மஹியாவையில் மரம் முறிந்து விழுந்ததில் எம். முருகையா (வயது 61) என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் கண்டியில் 35 குடும்பங்கள் வீடுகளை தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. ஹட்டன் தலவாக்கலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் பாடசாலைகளின் கூரைகள் பெரும்பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழை பெய்வதால் ஹட்டன், நுவரெலியா கல்விவலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
மேற்படி மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மின்சார விநியோகப்பாதை பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியாவில்
உருளைக்கிழங்கு, மரக்கறி உற்பத்தி செய்யும் விவசாய காணிகளிலும், தோட்டங்களிலும் மழை நீர் நிரம்பி நிற்பதால் உருளைக்கிழங்கு உள்ளிட்ட ஏனைய மரக்கறி உற்பத்திகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நுவரெலியா விவசாய தோட்டங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிர்க்கதிநிலை அடைந்துள்ளனர்.

அத்தோடு ஒரு சில கிராம வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்தும் பல மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன. தொடர்ந்து மழைபெய்து வருவதால் வழமையைவிட குளிரும் அதிகரித்துள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்திலும் காலநிலை சீர்கேட்டினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தோட்டத்தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகும். தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருப்பதால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் விடயங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரியில் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மாதம்பை ஒரமுல்ல தோட்டத்தில் ஏற்பட்டளள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்களும் இருவாரங்களுக்கு 1610 ரூபா பெறுமதியான உணவு முத்திரைகளும் கொடக்கவௌ பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.ரஞ்சித் டி சொய்சா அவர்களினால் 9 குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரமுல்ல தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடும் மழை, மினி சூறாவளியால் 25 குடும்பங்களின் குடியிருப்புக்கள் பலத்த சேதமேற்பட்டது. இவர்கள் ஒரமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கியிருந்தனர். 25 குடும்ங்களிலும் 115 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஏனைய குடும்பங்களுக்கு கிராமசேவகரின் தகவல்படி கூடாரம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மண்சரிவு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதால் ஒரமுல்ல தோட்டத்தில் 2 ஏக்கர் காணியை பெற்று வீடுகள் அமைத்துக்கொடுப்பதோடு 5 லட்சம் பெறுமதியான கூரைத்தகடுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொடக்காவல பிரதேச செயலாளர் பி.எஸ். ஜி. ருவன்சிறி தெரிவித்தார்.மேலும் 2 வாரங்களுக்கு 805 ரூபா வீதம் 1610 ரூபா பெறுமதியான உணவு முத்துpரைகள் கூட்டுறவு சங்க கடையில் பெற்றுக்கொள்வற்கு முத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கண்டி மஹியாவை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சுமார் 61 வயது நிரம்பிய எம்.முருகையா எம்பவரே இவ்வாறு அகால மர்திற்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யட்டிநுவர அக்குறணை பூஜாபிட்டிய தெல்கொட ஹத்கரலியத்த பஸ்பாகே பார்த். வாஹிவட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 35 குடும்பங்கள் பாதிப்புள்ளாகியுள்ளதுடன் இவற்றைச் சேர்ந்த 109 பேர் பராமரிப்பிற்குட்பட்டுள்ளதாகவும் மற்றும் 03 பேர் காயங்களுகுள்ளாகியுள்ளதாகவும் 05 வீடுகள் முற்றாக சேதமடைந்து உள்ளதாகவும் சுமார் 30 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் அலகல்ல தங்வத்தை தெய்சும இலுக்குவத்தை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் சரிநபுது வீழ்ந்திருப்பதால் அவற்றை அகற்றும் அவசர பணிகள் முடுக்கி விடப்பட்டள்ளதாகவும் மேலும் அளவத்துகொடை கோணகலகல அக்குறனை தெல்கொடை ஆகிய பிரதேசங்களில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டள்ளதாகவும் கோவில் முதுன பிரதேசத்தில் வீடொன்றின் மீதும் மரம் ஒன்று சாய்ந்தால் வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது போன்று 05 வீடு முற்று முழுதாகவும் 30 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதோடு நேற்று முன்தினம் பிற்பகல் மஹியாவை பிரதேசத்தில் மரக்கிணையொன்று முறிந்து வீழ்ந்ததில் மரணமான நபர் தெல்தோட்டையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ரணவீர தெரிவித்தார்.

புலிகளின் நிறுவனங்களை அவதானிக்கவும்; ஜேர்மனியிடம் ஜீ.எல். வலியுறுத்தல் .

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறும் வகையில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகப்பு நிறுவனங்களை கூர்ந்து அவதானிக்கும்படி ஜேர்மனியிடம் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வேளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கைடோ வெஸ்ரவெலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது புலிகள் இயக்கத்தின் பல முகப்பு நிறுவனங்கள் சமுதாய நிறுவனங்கள் என்ற போர்வையில் ஜேர்மனியில் இயங்குவதாக சுட்டிக்காட்டினார். இந்த குழுக்கள் பிரசாரத்துக்காகவும் நிதி சேகரிப்பதற்காகவும் பல பாடசாலைகளை நடத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி விளக்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கு தான் விரும்பிய வகையில் தேவையான காலமெடுத்து அதனை செயற்படுத்தும் உரிமை உள்ளதென கூறினார். பெருமளவிலானோர் கலந்துகொண்ட வெளிநாட்டு கொள்கைக்கான ஜேர்மன் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பீரிஸ், இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் காணப்பட்ட புதிய போக்குகள் பற்றி பல பிரச்சினைகளை பிரஸ்தாபித்தார்.

அரசுடன் இணைவு?; மறுக்கிறார் வினோ எம்.பி

vinoதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தையொன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் வினோ எம்.பி.க்கும் இடையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் கேட்டபோது, ‘அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போகிறேன் என்று வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது’ என்று குறிப்பிட்டார்.

‘மக்கள் எமக்கு வாக்களித்து, எம்மை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்களின் ஆணையை மீறி நாங்கள் ஒரு போதும் செயற்பட மாட்டோம்’ என்றும் அவர் தெரிவித்தார். ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகள் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் சந்திப்பது வழமையானது. அதிலும் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடற்தொழிலில் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடினேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.
‘அமைச்சர் பசிலுடன் எமது ரெலோ அமைப்பு சார்பாக எமது அனைத்து கட்சி உறுப்பினர்களும் சந்தித்திருந்தோம். ஒரு காலத்தில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் செயற்பட முடியாத காலகட்டத்திலும் அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். புகைப்படமொன்றினை வைத்துக்கொண்டு தவறான செய்திகள் வெளியாகியுள்ளமை கவலையளிக்கிறது’ என்று வினோ எம்.பி மேலும் தெரிவித்தார்.