பயங்கரவாத இலட்சினைகள், கொடிகளை தடைசெய்ய கோரிக்கை-

பயங்கரவாத அமைப்புகளின் இலட்சினைகள், கொடிகள் மற்றும் தொனிப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஏகப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். ஐ.நா சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை அணுகி, வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்ள இடமளிக்கக்கூடாது. அத்துடன் சர்வதேச ரீதியாக பங்கரவாதத்தை தோற்கடிக்க சகல நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புனரமைக்கப்பட்ட ஏ9 பாதை திறந்துவைப்பு-

மீள புனரமைக்கப்பட்ட கல்குளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ 9 பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக, 20 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 153 கிலோமீற்றர் நீளமான பாதையே இவ்வாறு புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புலிகளால் நிர்மாணிகப்பட்ட இரணைமடு விமான  ஓடுதளம் மறுசீரமைக்கப்பட்டு ஜனாதிபதியால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

சுயாதீன ஆணைக்குழுவுக்கு வலியுறுத்தல்- 

உடனடியாக சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதனிடையே, 17வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சகல சீர்த்திருத்தங்களுக்கும் முன்னர், இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

துப்பாக்கி வெடித்து பொலீஸ் உத்தியோகத்தர் காயம்-

துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்றுமாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த பொலீஸ் உத்தியோகஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நந்தன என்ற பொலீஸ் உத்தியோகத்தரே காயமடைந்துள்ளார். மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திவரும் கைத்துப்பாக்கியே இவ்வாறு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்க் கைதிகளை வடக்கு, கிழக்கு சிறைகளுக்கு மாற்றக் கோரிக்கை-

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் கொழும்புவர பல சிரமங்களை எதிர்கொள்வதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் பல்வேறு கெடுபிடிகளுக்கும் ஆளாகின்றனர். இக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர், இதனால் அக் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என அவ்வமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள்

இணையத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து இயங்கும் இணையத்தளங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய வகையிலும் இந்த சட்டம் அமையவுள்ளன. இலங்கையிலிருந்து இயங்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், சட்ட வரைவுகளை மேற்கொள்ள குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் சரிதா ஹேரத் தெரிவித்துள்ளார். 67 இணையத்தளங்கள் மட்டுமே ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பதிவு செய்யாத இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போலியான தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பதிவுக்கு உட்படுத்தப்படாத ஊடகங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வதை விரும்பவில்லை-ஐரோப்பிய ஒன்றியம்- 

13ஆம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதனை விரும்பவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசியல் சாசனத்தில் காணப்படும் 13ஆம் திருத்தச் சட்டத்தை அதேவாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. உத்தேச திருத்தங்களை இன்னமும் பார்வையிடவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவேஜ் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்திற்கு பதிலீடாக 19ஆம் திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிந்து கொண்டதாகவும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி போதிய தெளிவு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்-அமைச்சர் தினேஷ்-

19 ஆவது திருத்தச் சட்டமூலம் இவ்வாரத்துக்குள் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 19 ஆவது தீருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஒவ்வானதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தை பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டமூலம் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களை இணைப்பதற்கு 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சரத்தை நீக்குவதற்காக கொண்டுவரப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலீசாருக்கு எதிராக நடவடிக்கை-

இலஞ்சம் பெறல், ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 1,200 பொலீசாருக்கு எதிராக தீவிரவிசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் உயர் பொலீஸ் அதிகாரிகள் சிலர் அடங்குவதாகவும் கூறப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலீசாருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவு என பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன