19ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதில்லை-அமைச்சர் ராஜித-

6-Rajitha

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு நாம் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் இரு மாகாணங்கள் இணைவதை தடுப்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 37ஆவது பிரிவை நீக்கிவிடுவதற்கு நாம் எதிர்ப்பு வெளியிடவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமையின்கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைய முடியும் என்ற சட்டம் தற்போது இறந்துபோய் விட்டது. எனவே அதனை நீக்குவதற்கு முயற்சிப்பதை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால் அதனை 19 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதை ஆதரிக்க முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் மன்மோகன் சிங் கடிதம்-

manmogansingh

13ஆவது அரசியல் அமைப்பை திருத்துவதற்கு இலங்கையில் கட்சிகள் முயற்சித்து வருவது தொடர்பாக இந்தியா, தனது கருத்தை இலங்கைக்கு தெரிவிக்கும் என இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் இலங்கைக்குள் கட்சிகள், தமது தீர்மானத்தை எடுத்துள்ளன. எனினும் இந்தியா, இது தொடர்பில் ஆராய்ந்து தமது கருத்தை தெரிவிக்கும் என இந்தியப் பிரதமர், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்தியா செயற்படும். அனைத்தின மக்களுக்கும் சகல உரிமைகளும் கிடைக்கக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது-அமைச்சர் சம்பிக்க-

Jathika Hela Urumaya

 இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டன. இனி அதுகுறித்து எவ்வித பேச்சுக்கும் இடமில்லை. தொட்டதற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழவேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினருக்கும் பொருந்தும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக ரணவக்க நேற்று தெரிவித்துள்ளார். வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. தமிழீழக் கனவை இல்லதொழிக்க சகல வகையிலும் போராடுவோம். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 66 ஆயிரம் பேரை பலியெடுத்தே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைசாத்திட்டார். இது முழுஅளவில் இலங்கையின் சட்டம் மற்றும் மக்கள் ஆணையைமீறி மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். எனவேதான் இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 1987ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி யாழ். பல்கலைக்கத்திலிருந்து ஆரம்பமான புலிகளின் தாக்குதல்மூலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தைப் பற்றி பேசுவது முறையல்ல என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தமிழர்கள்மீது தாக்குதல்-

singam puli

 இங்கிலாந்தில் ஐ.சி.சி கிண்ண கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுவரும் நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது. இதன்போது, இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி லண்டன் ஓவல் மைதானம் அருகே இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மேற்படி போராட்டத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

சிங்கள ராவயவின் பேரணி ஆரம்பம்-

sinhala Ravaya

 மிருகவதை மற்றும் மத பரப்புரைகளுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி அம்பாந்தோட்டையின் தங்காலை நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. தங்காலை நகரில் பேரணியை ஆரம்பிக்கப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் இடைநடுவே, நகரிலுள்ள மாட்டிறைச்சி கடை தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிங்கள ராவய அமைப்பின் ஊடகப்பேச்சாளர் மாகல் கந்த சுதந்த தேர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு-

கொழும்பு பல்கலைக்கழக கட்டிடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த மாணவி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 2.30மணியளவில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 01ஆம் ஆண்டு விஞ்ஞானபீடத்தில் பயிலும் 23 வயதான மாணவியே உயிரிழந்துள்ளார். நேற்றுகாலை 9.30அளவில் பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து அவர் கீழே குதித்துள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஒலுவில் துறைமுகம் ஜூலையில் திறப்பு- அம்;பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன்கருதி ஒலுவில் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். திகாமடுல்ல மாவட்ட எம்.பி பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்-

fisch bort இலங்கை சிறையிலுள்ள 57 தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய பிற காரணங்களை கருத்திற்கொண்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இலங்கை சிறையிலுள்ள 57 மீனவர்களையும் விடுதலை செய்ய இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்க தலைவர் யேசுராஜா தெரிவித்துள்ளார். இதனிடையே, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வர மீனவர் சங்கம் சார்பில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.