கே.பத்மநாபா அவர்களின் 23ஆவது நினைவுதினம்-

eprlf

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி  (ஈ.பி.ஆர்.எல்.எப்)யின் முன்னாள் செயலாளர் நாயகம் கே.பத்மநாபாவின் 23ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போராட்ட காலத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில்  புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதேவேளை மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் அலுவலகத்திலும் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

வடக்குத் தேர்தலில் 714,488 பேர் வாக்களிக்கத் தகுதி-

election office

வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 7லட்சத்து 14ஆயிரத்து 488பேர் தகுதிபெற்றுள்ளதாக வட மாகாண தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வட மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் 07ஆம் திகதி நடாத்தப்படலாமென்ற எதிர்ப்பார்ப்பில் தேர்தலை நடாத்துவதற்குரிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 38 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட சபையாக வட மாகாணசபை அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பின் அடிப்படையின் யாழ்.மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 703 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 589 பேரும், வவுனியா மாவட்டத்தில் 96 ஆயிரத்து 702 பேரும், மன்னார் மாவட்டத்தில் 70 ஆயிரத்து 85 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஆயிரத்து 409 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் குறித்து அடுத்தமாதம் தீர்மானம்-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் அடுத்த மாதம் கோரப்படலாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெரும்பாலும் செப்டம்பர் மாத டுப்பகுதியில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர் கருத்துரைக்கையில், பெரும்பாலும் செப்டம்பர் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரங்களில் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறலாம் எனவும்,. குறித்த மாகாணசபைகளை கலைப்பதாக வர்த்தமான அறிவித்தல் வெளியாகி ஒருவார காலப்பகுதியில், வேட்பு மனு கோரப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

 கடந்தாண்டு அகதிகள் எண்ணிக்கை உயர்வு-

unoஅகதிகளின் எண்ணிக்கை 1994 ஆம் ஆண்டிற்கு பின் கடந்த ஆண்டு உயர்ந்த மட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சிரியா முக்கியமான புதிய காரணமாக அமைந்துள்ளதென ஐ.நா சபை அறிவித்துள்ளது. 55வீதமான அகதிகள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். உலகளாவிய ரீதியிலுள்ள 81 வீதமான அகதிகள் அபிவிருந்தி அடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

 இடம்பெயர்ந்தோர்க்கான வாக்காளர் பட்டியல் இரு வாரங்களில் தயார்-

election boxஇதுவரையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதிவு செய்யப்படாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான மேலதிக வாக்காளர் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் இரு வாரங்களில் தயாராகும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இம்பெயர்ந்த நிலையில், 2012ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்வாங்கப்படாதவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் வகையிலான விசேட சட்டதிருத்தம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விசேட விண்ணப்பம் ஒன்று தேர்தல்கள் செயலகத்தினால் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸி செல்ல முயன்ற ஒரு தொகுதியினர் கைது-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற சிலர் இன்றுகாலை கிழக்கு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்புக்கு கிழக்காக பயணித்தபோதே இவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இன்றுகாலை திருகோணமலையிலிருந்து அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவிருந்த நிலையில் இக்குழுவில் இருந்த 80 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமகால நிலைமைகள் குறித்து இந்திய பிரதமருக்கு விளக்கம்-

tnaதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் நேற்றுமாலை இந்திய் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் ஆகியோரைச் சந்தித்து இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் தன்மை உட்பட பல விடயங்கள் குறித்து தாம் முன்வைத்த கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை, காணாமல் போனோர் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலும் தாம் இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பெண் விரிவுரையாளர்மீது கொழும்பில் தாக்குதல்-

கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூரிய ஆயுதத்தினால் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான தமிழ்ப் பெண் விரிவுரையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சட்ட பீடத்தில் பயிலும் மாணவர் ஒருவர் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சயனைட் அருந்திய குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி-

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயன்ற ஒருவர், யாழ்ப போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை, குருசுமதவடி, சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே நேற்றிரவு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலீசார் நபரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென கூறியுள்ளார். சயனைட் கடித்த குடும்பஸ்தர், சுயநினைவற்ற நினையில் இருப்பதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவருக்கு நினைவு திரும்பியதும் சயனைட் குறித்து விசாரிக்கப்படுமென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய விதிமுறை

வெளிநாடு செல்லும் பெண்களுக்காக புதிய விதிமுறைகள் அடுத்த மாதம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள உத்தியோகத்தர் மூலம் வெளிநாடு செல்வோரின் குடும்ப நிலைமை மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையை பெற்றுக்கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறித்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலாளரின் கையொப்பமிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்த அறிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்மார் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்வதால் அவர்களது பிள்ளைகளும் குடும்பமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்வது கண்டறியப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஊடகங்களை ஒடுக்கும் ஒழுக்க விதிகள் அறிமுகம்-

புதிய ஊடக ஒழுக்கவிதியானது பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சினால் ஊடக ஒழுக்க விதிக் கோவையொன்று அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களை உள்ளடக்கும் வகையில் புதிய ஒழுக்க விதி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, குறிப்பாக அரசாங்கத்தை விமர்சனம் செய்யும், மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை அடக்கும் நோக்கிலேயே புதிய ஊடக ஒழுக்கவிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கணகாணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

போகம்பறை சிறையை அரசிடம் ஒப்படைக்க தீர்மானம்-

கண்டி போகம்பறை சிறைச்சாலையை டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறையிலுள்ள கைதிகள் பல்லேகலே மற்றும் பூஸா சிறைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அமைச்சின் செயலர் பி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். இதுவரையில் கண்டி – போகம்பறை சிறையிலிருந்த 400 விளக்கமறியல் கைதிகள் பல்லேகலே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நகரங்களிலிருந்து சிறைச்சாலைகளை அகற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.