சரியான வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

Sithar ploteவட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின்  உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு  நிற்கின்ற ஒரு வேட்பாளரையே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். அவை பின்வருமாறு,
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மன்னாரில் முஸ்லீம் மக்களையும், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களில் சிங்கள மக்களையும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களி;ல் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மாவட்டமாக மாறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அண்மையில் வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில்கூட சிங்கள குடியேற்றங்கள், இராணுவக் குடும்பங்களுக்கான குடியிருப்புக்கள் போன்றன அமைப்பது இந்த குடிப்பரம்பலை மாற்றும் வேலையாகவும் அமையலாம். இது தொடர்பில் ஐரோப்பிய தூதுவர்களுக்கு நாம் தெரிவிக்கும்போது,அதன் தார்ப்பரியத்தை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்களில்லை. அரசாங்கம் தற்போது எதற்கெடுத்தாலும் தெரிவுக்குழு என்று சொல்லி வருகின்றது. இந்த தெரிவுக்குழுவிலும் நியாயம் கிடைக்கும் என சொல்லி வருகின்றது. இதற்குள் கூட்டமைப்பு சென்று இதில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும். தெரிவுக்குழுவில் நியாயமான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளது. புத்திசாதுரியமாக செயற்படுவதாக நினைத்துக் கொண்டிருந்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு செல்லாது. சர்வதேசத்தின் தலையீடுகள் நிச்சயம் இருக்கும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டித் தீர்வே தேவை. எவ்வாறாயினும்  தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. 1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என சொல்லுமளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது.
தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார். இவர்களின்  இந்தச்  செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாக அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது.
இன்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அது எவ்வளவு நடமுறைச் சாத்தியமானது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிலவேளைகளில் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் சீனாவைக் காட்டியே மஹிந்த ராஜபக்ஷ தனது காரியங்களை நடத்தி வருகின்றார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னர் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை எம்மிடம் வழங்கியிருந்தார். அதற்கு எதிர்மாறாக அவர் இப்போது செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தினையும் புலிகளையும் காட்டி சிங்கள மக்களை தன்வசப்படுத்தி இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற தீர்வாக சமஷ்டி தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு பலம் பொருந்திய சக்தியை உருவாக்காவிட்டால், அது வடமாகாண சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான வாய்ப்பைக் கொடுத்துவிடும். வட மாகாணசபை தேர்தலில் அரசியல் பலம் மிக்க மூத்தவர் ஒருவரை நிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பலத்தினைப் பெறவேண்டும்.
உள்ளுராட்சி சபைகளுக்குள் அதிகாரங்களை சரியாக செய்ய முடியாமல் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கு கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளே காரணமாக அமைகின்றன. உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நான் இந்த கட்சி, நீ அந்த கட்சி என பிரச்சினைப்படுவதினாலேயே உள்ளுராட்சி அதிகாரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதுள்ளது. அத்துடன், வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்றால், மாகாண சபை அதிகாரத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் செயற்படுத்த முடியும்
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையே மிகவும் அவசியமானதாகும். சரியான முதலமைச்சர் வேட்பாளரை நிறுத்துவதன்மூலமே கூட்டமைப்பு வெற்றிபெறும். தற்போது கூட்டமைப்பிற்குள்ளான ஒற்றுமை போதாது. எனவே கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதற்கான சகல முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய, மக்களின் உணர்வுகளைப் புரிந்த, மக்களோடு நிற்கின்ற ஒரு வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இவ்வாறு நிறுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும் என புளொட் தலைவர் த.சித்தார்த்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.

1600 இலங்கை அகதிகள் நாடு திரும்பல்-

கடந்த ஆண்டில் 1600 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யூ.என்.எச்.சீ.ஆர்) தெரிவித்துள்ளது. இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். போர் நிறைவடைந்த பின்னர் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி வருகின்றனர். 2010ம் ஆண்டில் 2040 பேரும், 2011ம் ஆண்டில் 1670 பேரும் இவ்வாறு இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவன் வீடு திரும்பவில்லையென முறைப்பாடு-

வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியில் தரம் 11ல் பயிலும் சிவசூரியகுமார் ஜனராஜ் என்ற மாணவன் கடந்த 13ம் திகதி காலை பாடசாலை சென்ற நிலையில் காணாமற் போயுள்ளதாகவும், இதுவரை இம்மாணவன் வீடு திரும்பவில்லையெனவும் குறித்த மாணவனின் பெற்றோரால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு கோரிக்கை-

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிரந்தரமான ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார். பொருளாதார அபிவிருத்தியுடன் வடபகுதியில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 22வீதமான அபிவிருத்தி இடம்பெற்றுள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை-

மன்னார், காலி ஊடாக பொத்துவில் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை வரையிலுமான கடற்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடலில் பிரயாணத்தை மேற்கொள்வோர் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

 தனியார் பஸ்களில் ஜீபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை-

தனியார் பஸ் சாரதிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகைமையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்றாடம் இடம்பெறும் பஸ் அனர்த்தங்களை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கைய மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன கூறியுள்ளார். ஜீபி.எஸ் எனும் நவீன கருவி மூலம் வாகனங்களின் வேகம் ஆணைக்குழுவினால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. அதேபோல் சுமார் 3200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில், 678 பஸ்களில் மாத்திரம் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்தமாத இறுதிக்குள் மேலும் ஆயிரம் பஸ்களில் மேற்படி கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு-

எதிர்வரும் நவம்பர்மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் குழுவினருடனான நேற்றைய சந்திப்பின்போது அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலாட் இந்த உறுதிமொழியை அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அம்மாநாடு சிறப்புற ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். 

 இரு மாகாண சபைகள் கலைப்பு-

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகள் எதிர்வரும் ஜுலை மாதம் ஆரம்பத்தில் கலைக்கபடலாம் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இந்த மாகாணசபைகள் ஜுலை 5ம் திகதி கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள வடமாகாண சபைக்கான தேர்தலும், குறித்த இரு மாகாண சபைகளுடன் சேர்த்து ஒன்றாக நடத்தப்படுமென்று கூறப்படுகிறது. இந்த தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் அல்லது இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.