13ஐ மாற்றவோ நீக்கவோ இந்தியா அனுமதிக்காது-சுரேஷ் எம்.பிsuresh

இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் வட கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் ஏற்பாடான 13ஆவது அரசியலமைப்பை மாற்றவோ நீக்கவோ அனுமதிப்பதில்லையென இந்தியா உறுதியளித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிராந்தியம் என்ற சரத்து அடங்கிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் இடமெல்லை என்று இந்திய தலைவர்கள் தெரிவித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13வது திருத்தத்தை ஆராயும் குழு உறுப்பினர்கள் விபரம்- parliament

13வது திருத்தச் சட்ட மாற்றம் குறித்து ஆராயவென அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா ஆளும்கட்சி உறுப்பினர்கள் குழுவின் தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் அறிவித்துள்ளார். குழு உறுப்பினர்களின் பெயர்களாவன, நிமல் சிறிபாலடி சில்வா, மைத்திரிபால சிறிசேன, ஜி.எல்.பீரிஸ், டபிள்யு.டி.ஜெ.செனவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, தினேஸ் குணவர்த்தன, சுசில் பிரேமஜெயந்த், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.ஏ.எம்.அதாவுல்லா, டியு.குணசேகர, ரிஷாத் பதியூதின், பாட்டளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரசன்ச, பசில் ராஜபக்ஷ, லக்ஷமன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார, முத்து சிவலிங்கம், ஜானக பண்டார, சுதர்ஷனி பெனாண்டோ புள்ளே ஆகியோராவர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் யாப்பு ஆளும் கட்சியிடம் சமர்ப்பிப்பு-unp

ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பு, இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்நாயக்கவினால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச அரசியல் யாப்பில், மாகாணங்களுக்கான அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று அதிகாரம் போன்ற விடயங்களில் சீர்த்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம்-

sri &indiaஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அடுத்தமாத நடுப்பகுதியில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். சிவ்சங்கர் மேனன் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரென்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பிலான திருத்தங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை ஜனாதிபதியுடன் அவர் பகிர்ந்துக் கொள்வாரென்றும் கூறப்படுகின்றது.

பேர்லினில் இலங்கை நிலைவரம் குறித்து ஆராயும் மாநாடு-

இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ஆராயும் வகையில் ஜேர்மன் தலைநகரான பேர்லினில் விசேட மாநாடொன்று நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரனும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகள் அடங்கிய அடையாள அட்டை- 

தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்,நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைச்செய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சலீம் மர்சூப், பிரியசத் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று  20 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே. இலத்திரனியல் அடையாள அட்டையை மும்மொழிகளிலும் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. இவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக,தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் இல்லை.
அரசியலமைப்பின் 18 ஆவது,19 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22 வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை நேற்றைய விசாரணையின் போதே பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பெருமளவு சட்டவிரோத செல்போன்கள் மீட்பு-pohon

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான 149 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 184 வாசனைத் திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் விமானநிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. டுபாயிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரினால் இப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக  சுங்கப் பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீர்வை வரி நிவாரணமொன்று வழங்கப்படுவது வழமை என்பதால் அவர்களின் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டாது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு தொண்டராசிரியர்களுக்கு நியமனம்-

கிளிநொச்சி மாவட்ட மருதங்கேணி கோட்ட தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலர் சீ.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். இந்நியமனங்கள் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிறுகாலை 9 மணிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, மடுவலய  ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்ட 5 வாகனங்கள் வடக்கில் மீட்பு

கொழும்பு, நுகேகொட பகுதியில் வைத்து சுமார் ஒரு வருடத்திற்கு முன் வாடகைக்கு அமர்த்தப்பட்ட 04 கார்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்று என்பன யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலீசார் அறிவித்துள்ளனர். வாடகைக்கு அமர்த்தப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இரண்டரை கோடி ரூபா பெறுமதியான இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகத்தின்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நுகேகொடை குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.

4.1 செக்கன்களுக்கு ஒருவர் அகதியாவதாக யூ.என்.எச்.சீ.ஆர் அறிவிப்பு-unhcr

2012ஆம் ஆண்டு 4.1 செக்கன்களுக்கு ஒருவர் தனது வீட்டைவிட்டு துரத்தப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சீ.ஆர்) சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் அகதிகள் குறித்து யூ.என்.எச்.சீ.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 1.1 மில்லியன் மக்கள் சர்வதேச எல்லையை தாண்டி ஓடியுள்ளனர். 6.5மில்லியன் மக்கள் தமது நாட்டினுள்ளே இடம்பெயர்ந்தவர்களாக காணப்பட்டனர். அதேயாண்டு மொத்தம் 45.2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த ஆண்டு உள்நாட்டில் மட்டும் 28.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 15.4 மில்லியன் பேர் நாட்டு எல்லையை தாண்டிய இடம்பெயர்ந்தவர்களாக காணப்பட்டனர். அதுமட்டுமன்றி 2012ல் 93,700பேர் புகலிடக் கோரிக்கையாளர்களாக காணப்பட்டனர். இடம்பெயர்வுக்கு பிரதான காரணமாக யுத்தமே உள்ளது. இடம்பெயர்ந்தோரில் 55சதவீதமானோர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர் என யூ.என்.எச்.சீ.ஆரின் குறிப்பிட்டுள்ளது.

 ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கைக்கு போதிய கரிசனை கிடையாது-அமெரிக்கா-usa

சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையரசு போதிய கரிசனை செலுத்தத் தவறியுள்ளதாக ஆட்கடத்தலை தடுப்பது தொடர்பான அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஆட்கடத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலது குறைந்த ஆதரவற்ற சிறுவர்கள் போன்றே முதியவர்களும் சட்டவிரோதமாக யாசகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனைத் தவிர கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க நகரங்களில் வீட்டு வேலைகளுக்கும் உலர் வலயத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கும் கடற்றொழிலுக்கும் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். உள்ளக இடம்பெயர்வுக்குள்ளானவர்கள் மற்றும் யுத்தத்தால விதவையாக்கப்பட்ட பெண்களும் அதிகளவில் ஆட்கடத்தலுக்கு இலக்காகின்றனர். இதேவேளை வீட்டு வேலைகளுக்காகவும் ஆடைத் தொழிற்சாலை மற்றும் நிர்மாணத்துறை வேலை வாய்ப்புக்களுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பணியாளர்கள் அங்கு வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்போது அவர்கள் உடல் மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர் என சட்டவிரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கான அமெரிக்க நிறுவனம் தனதறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.