கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் விகாரை அமைப்பதற்கு காணியொதுக்கீடு-இந்து மக்கள் விசனம்-kanniya hot

 திருகோணமலையின் வரலாற்றுப் புகழ்பெற்ற கன்னியா வெந்நீரூற்று கிணற்றுக்கருகில் விகாரை அமைப்பதற்கு வெல்கம் ரஜமஹா விகாரையின் பிரதம குருவுக்கு ஒரு ஏக்கர் காணி அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. இராவணேசன் புகழ்கொண்டதும், இந்துக்களின் புராதன இதிகாசங்களுடன் தொடர்புகொண்டதுமான கன்னியா வெந்நீரூற்றுக்கு நேரே பின்புறம் விகாரையொன்றை அமைப்பதற்கு வெல்கம் ரஜமகா விகாரையின் பிரதம குரு கேட்டுக்கொண்டதற்கு அமைய 0.4120 ஹெக்டேயர் காணியை வழங்குவதற்கு கொழும்பு காணி ஆணையாளர் நாயகம் மாகாண காணி ஆணையாளருக்கு அனுமதி வழங்கியதன்பேரில் மேற்படி காணி பௌத்த விகாரை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த விகாரை இந்துக்கள் தமது ஈமைக்கிரியைகளைச் செய்யும் மடம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகிலும், வெந்நீரூற்றுக்கு நேரடியாக அருகிலும் அமைக்கப்படவுள்ளது. இங்கு தொன்மைமிக்க சிவன் ஆலயமொன்று இருப்பதுடன், இஸ்லாமியர்களை அடையாளப்படுத்தும் சமாதியொன்றும் இருக்கின்ற நிலையிலேயே இவ்விகாரை அமைக்கப்படவுள்ளது. தொல்பொருள் ஆய்வு என்ற காரணங்கள் காட்டப்பட்டு இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இந்துக்களின் மனங்களை புண்படுத்தும் செயலென்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது. இவ் விகாரையை நிறுவுவதுடன், பலநூறு வருடங்களாக பாவனையிலுள்ள பாதையினை மாற்றுவதற்கும் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது. விகாரையைத் தரிசித்த பின்பே வெந்நீர் கிணற்றில் நீராடக்கூடிய விதத்தில் இப்பாதை அமைக்கப்படவிருப்பதாகவும், இதுவரை காலமும் கிணற்றை நேரடியாக அடையக்கூடியதாக இருந்த பாதை தற்பொழுது விகாரையை முதன்மைப்படுத்தி அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய குடிவரவுக் கொள்கையில் மாற்றம்-

ukபிரித்தானியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து பிரித்தானியா செல்ல 3000 ஸ்ரேலிங் பவுண்ட்களை பிணையாக வைக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் முதல் இந்த நிபந்தனை அமுலாகவுள்ளதாகவும் தெரியவருகிறது. மோசடி முறையிலான குடிவரவுகளை தடுக்கும் பொருட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரித்தானிய உள்துறை அமைச்சர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பரின் பின்னர் பிரித்தானியாவுக்கு வீசா பெற 3000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் முன்பிணை வைக்க வேண்டும். எனினும் இந்த பிணைத் தொகையை நாடு திரும்பியபின் மீளப் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும் வீசா காலம் நிறைவடைந்த பின்னரும், வீசாவை பெற்றவர் பிரித்தானியாவில் தங்கியிருந்தால், அவருக்கு இந்த தொகை மீண்டும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா இந்த நடைமுறையையே பின்பற்றிவருகின்றது.

நவநீதம்பிள்ளை ஆகஸ்டில் இலங்கைக்கு விஜயம்-navneetham

இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால்ப் பகுதியையும் நேரில் பார்வையிடவுள்ளதாக கூறப்படுகிறது. நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான விஜயம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போதே அதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் திகதிமுதல் 29ஆம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்கட்சிகளின் பிரமுகர்கள்,, சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதுடன், தற்போதைய நிலைமைகளையும் ஆராயவுள்ளார். அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

கிழக்கு முதலமைச்சர், ஆளுநர் மாற்றம் கிடையாது-ஜனாதிபதி-

imagesCAAFRW6Nகிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரம மற்றும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரை மாற்றுவது இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையில் வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விமலவீர திஸாநாயக்காவை தற்போதைக்கு மாற்ற வேண்டியநிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை நேற்றுமுன்தினம் அலரிமாளிகைக்கு அழைத்து பேசியபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அமைச்சர்கள் ஆளுநருடன் முரண்பட்டும், ஆளும்தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டும் சபை அமர்வு பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  

முஸ்லிம் காங்கிரஸ் தெரிவுக்குழு உறுப்பினர்களை அறிவிக்க ஏற்பாடு-Hekeem

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான தங்களின் உறுப்பினர்களை எதிர்வரும் 29ம் திகதி அறிவிப்பதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இணைப்பாளர் சபீக் ராஜாப்தீன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீடம் கூடி, தீர்மானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் தெரிவுக்குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிக்க முடியும்-ஐ.தே.கட்சி-unp

17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தினால் மாத்திரமே அரசியலமைப்பு திருத்தம் குறித்த ஆராயும் தெரிவுக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகளை நியமிக்கும் என ஐ.தே.கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 17ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தி பொலீஸ் ஆணைக்குழு தேர்தல் ஆணைக்குழு போன்றவற்றை நியமிக்கும்படி நாம் அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளோம். 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் இச்சட்டத்தை அமுல்படுத்தினால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தும் வாய்ப்பு கிட்டும். இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட மேற்படி 17ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாதகலில் படகுகள் தீக்கிரையானமை தொடர்பில் ஐவர் கைது-mathakal

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மூன்று படகுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்துபேரை பொலீசார் கைதுசெய்துள்ளனர். தீ வைக்கப்பட்ட படகுகளில் ஒன்று தீப்பற்றிய நிலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இளவாலை பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் சுமார் 19 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று படகுகளும் அதிலிருந்த இயந்திரங்கள் மற்றும் வலைகளும் எரிந்து நாசமாகியுள்ளன. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறினால் இந்த படகுகளுக்கு தீ வைக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இளவாலை பொலீசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் திரட்டல்-jaffna districts

யுத்தம் இடம்பெற்றபோது வட மாகாணத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலான உரிய தகவல்களை திரட்ட தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கும் விசேட விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கவும் தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட தேர்தல் செயலகங்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை விநியோக்கவுள்ளதாக ஆர்.எம்.ஏ.எல.ரத்நாயக்க கூறியுள்ளார். 

 பொலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்-

LK policeதிக்வல்ல பிரதேச மக்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து திக்வல்ல பொலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியுடன் மேலும் 16 பொலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் மாத்தறை பொலீஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். திக்வெல்ல, நில்வெல்ல பிரதேசத்தில் காவடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த குழுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்களை பொலீஸ் அதிகாரிகளே மேற்கொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த இருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று திக்வல்ல நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்தே பொலீஸ் அதிகாரிகள் இடம்மாற்றப்பட்டு;ளளனர்.

ஜனாதிபதி தன்சானியாவிற்கு விஜயம்- mahintha[1]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாரம் ஆபிரிக்க நாடான தன்சானியாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகச் செயலர் மொஹான் சமரநாயக தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் தன்சானியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்சானிய ஜனாதிபதி ஜகாயா சிக்வெரேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வடமாகாண சபை தேர்தல், சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் வேட்பாளர் தேர்வு-ipg

வடமாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்றையதினம் கொழும்பு டார்ளி வீதியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்திருந்த சுமார் 50பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டிருந்தனர். புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் இத்தேர்வில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்-

jaffna studentயாழ். பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு தென்னிலங்கை மாணவர்களுக்கு இடையில் கோஷ்டி மோதல் இடம்பெற்றுள்ளது. இன்றுபிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பரமேஸ்வராச் சந்தியில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம்வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையே இம்மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் ஆறுபேர் பொலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் இராணுவப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பில் ரி56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

 t 56                            மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தைமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்றுகாலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலீசார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்யவென சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச்சென்ற பொலீசார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து கைதுசெய்து சோதனையிட்டபோது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டுசென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் என்பவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலீசார் தெரிவித்துள்ளனர்.