நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடம்-

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜேகப் ஸூமா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மாத்திரம் மூன்றாவது தடவையாக வைத்தியசாலையில் நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ளார். 94வயதான நெல்சன் மண்டேலாவின் தற்போதைய நிலை பெரும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு-

யாழ். புத்தூர் பகுதியில் 15 வயது சிறுவன்  காணாமற் போயுள்ளதாக அச்சுவேலி பொலீஸ் நிலையத்தில் அச்சிறுவனின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் தம்மிடம் நேற்றுமாலை சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுவேலி பொலீசார் இன்று தெரிவித்துள்ளனர். புத்தூர் மேற்கைச் சேர்ந்த கவிதாசன் ரிஷாந்தன் என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். இவர் கடந்த 19ஆம் திகதி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய பிரதி பொலீஸ் மாஅதிபர் நியமனம்-

உடன் அமுலுக்கு வரும்வகையில் கொழும்பு வடக்குக்கான புதிய பிரதி பொலீஸ் மாஅதிபர் ஒருவர்; நியமிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்படி திருகோணமலை பிரதேசத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த பிரதி பொலீஸ் மாஅதிபர் எல்.ஜீ.குலரட்ன நேற்றுமுதல் கொழும்பு வடக்கு பிரதி பொலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலீஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன, பம்பலபிட்டியவில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரை பதவி நீக்குவதற்கு பொலீஸ் மாஅதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவூதியில் உள்ளோர்க்கு வீசா பெற கால அவகாசம்-

சவூதி அரேபியாவில் விசா அனுமதியின்றி தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவூதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03ஆம் திகதிவரை விசா பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வீசா அனுமதியின்றி சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு, நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து 13 ஆயிரம் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவூதியிலுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர் கொல்லப்பட்டமை தொடர்பில் நியூசிலாந்தில் அணிவகுப்பு-

இலங்கையர் ஒருவர் கொலை தொடர்பில் நியூசிலாந்து நாட்டவர்கள் இருவர் கென்டிபெரி நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 28 வயதான சமீர சந்திரசேன என்ற இலங்கையர், கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி, ஒக்ஸ்போர்டடில் உள்ள அவரது வர்த்தக நிலையத்தில் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த இலங்கையர் எரியூட்டப்படுவதற்கு முன் கடுமையாக தாக்கப்பட்டிருந்தமை பொலீஸ் விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்விடயத்தினை விசாரணை செய்த பொலீசார் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்த இருவரை நேற்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியிருந்தனர்.

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முகமட் சுகிர் ரகுமான் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது முகமட் சுகிர் ரகுமான், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநர் செயலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இதன்போது கேட்டறிந்து கொண்டுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இந்த சந்திப்பின்போது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி விளக்கிக் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்யத் தடை-

அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி பரிசு, விற்பனை, நன்கொடை உள்ளிட்ட எவ்விதத்திலும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது. இதற்கு இனி சட்டத்தில் இடமில்லை. இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற முடியும். காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளை குத்தகைக்கு விடுவார்களாயின் குத்தகைக்கு விடும் காலம் அதிகபட்சம் 99 ஆண்டுகள் மாத்திரமேயாகும் என ஜனாதிபதியின் யோசனையில் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் கிழமை நாட்கள் மாற்றம்-

சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தமது தொழில் வாரத்தை மாற்றியுள்ளன. இதன்படி, மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவின் எஸ்.பி.ஏ. செய்திச் சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில், மன்னர் அப்துல்லா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையான காலப்பகுதி வேலைநாட்களாக கருதப்படும். வெள்ளிக்கிழமை தொழுகை நேரங்களை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொழுகைக்காக வர்த்தக மற்றும் சேவை வழங்குநர்கள், சர்வதேச பிரதிநிதிகள் சென்று விடுகின்ற நிலையில், பாரிய பொருளாதார ஸ்தம்பிதம் ஏற்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை-மாவை சேனாதிரராஜா எம்.பி-

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவியுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி பிரதிநிதிகள் 19 பேரையும் சபாநாயகர் சமால் ராஜபக்ஷ ஏற்கனவே பெயரிட்டுள்ளார். இக் குழுவிற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகிறார். இதேவேளை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தெரிவுக்குழுவில் இடம்பெறாவிட்டாலும் எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கும்-அமைச்சர் ராஜித- பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆளும் கட்சியின் சார்பில் அனைவரும் இடம்பெற முடியாது. தெரிவுக்குழுவில் நான் இடம்பெறாவிடினும் எனது நிலைப்பாட்டையுடைய பலர் அதில் உள்ளனர். எனவே எமது கருத்துக்கள் அங்கு ஒலிக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான அதிகாரக் குறைப்பையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்திவரும் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறாமை தொடர்பில் விபரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றுமொரு பாகிஸ்தானாக மாறுவதை விரும்பவில்லை-சுதர்சன நாச்சியப்பன்-

இலங்கை மற்றுமொரு பாகிஸ்தானாக மாற்றமடைவதை விரும்பவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதனையே விரும்புவதாக இநதிய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். இலங்கை படையதிகாரிகள் பயிற்சிபெற அனுமதிப்பதில் தவறில்லை. இலங்கைப் படையதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை இந்தியா நிறுத்திக் கொண்டால்;, அந்த அதிகாரிகள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன்மூலம் இந்தியாவின் எதிரிப்பட்டியல் நீளுமே தவிர நன்மைகள் ஏற்படாது. இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானினால் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. மற்றுமொரு பாகிஸ்தானாக இலங்கை மாறுவதனை விரும்பவில்லை. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசாங்கம் மதிப்பளிப்பளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் இரவுநேர நிகழ்ச்சிகளை தடைசெய்யத் தீர்மானம்-

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்களிகிடையே வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவித்த யாழ்.பொலீஸ் பிரிவின் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, யாழ்.குடாநாட்டிலுள்ள இந்துக் கோயில்களில் இரவு 10மணிக்குப் பின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். யாழ். குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் திருவிழாக்காலங்கள் ஆரம்பித்துள்ளமையால் கோயில்களில் பாரிய குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் இறுதிநாள் நிகழ்வின்போது நடைபெறும் இசைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெறுவதால் இசைநிகழ்ச்சி முடிவடைய இரவு 12மணிக்கு மேல் ஆகிவிடுகின்றது. இதனால் இசை நிகழ்ச்சியைப் பார்க்கவரும் இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபட்டு வாள்வெட்டுச் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதனால் கோயில்களில் இரவு 10 மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகளை நடாத்த தடைவிதிக்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.