13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ, திருத்தங்களை மேற்கொள்ளவோ இடமளிப்பதில்லை-இடதுசாரி தலைவர்கள்- JR Rajiv

13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கோ திருத்தங்கள் மேற்கொள்வதற்கோ மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லை. அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டொக்டர் ராஜித சேனரத்ன, டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று கூட்டாக தெரிவித்துள்ளனர். இலங்கையை பாதுகாக்க சீனா ஒருபோதும் முன்வரமாட்டாது என்பதை சிங்கள அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மாகாண சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசுக்கூடாக ஐக்கிய இலங்கையை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று கொழும்பிலுள்ள சமசமாஜக்கட்சி அலுவலத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்விடயத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டியூ.குணசேகர, 13ஆவது திருத்தம் மக்கள் ஆதரவுடன் கொண்டுவரப்படவில்லை. எனவே, அதனை ஒழிக்கவேண்டுமென அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச உட்பட சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அரசியல் அமைப்பில் 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், இத்திருத்தங்கள் எதற்கும் மக்கள் ஆதரவு பெறப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவே பெறப்பட்டுள்ளன. 26 வருடங்களுக்கு பின் வட மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனை எதிர்ப்பது தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுவதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுவதாக அமையும் என்று கூறியுள்ளார். இங்கு உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, மாகாண சபை முறைமையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதற்காக 13ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்திருத்தம் கொண்டுவந்த பின்னர் புலிகளை தவிர ஏனைய அனைத்து ஆயுத அமைப்புகளும் ஜனநாயக அரசியலில் இணைந்தன. எனவே, 13ஆவது திருத்தத்தை பலப்படுத்தி வடமாகாண தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 13ஆவது திருத்தச் சட்டம் வடபகுதி மக்களுக்கு வழங்கிய உணவாகும். ஆனால், அதனை பறித்தெடுத்து தென் மாகாணத்தில் 16 வருடங்களாக அனுபவித்து வந்தனர். இன்று வட மாகாண தமிழ் மக்களுக்கு உரித்தான 13ஆவது திருத்தச்சட்டம் வழங்கப்பட தீர்மானித்திருப்பதை எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இத்திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கப்போவதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களாக ரெஜினோல்ட் குரே, சந்திரசிறி கஜதீர, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியை ஏற்க மாட்டோம்-சி.சந்திரகாந்தன்- pillayan

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்று அதனை முதன்முதலில் கிழக்கில் நிர்வகித்தவன் என்ற அடிப்படையிலும் அதேவேளை அதனை பல வகைகளிலும் பல முறைகளிலும் வலுப்படுத்திய ஓர் சிறுபான்மைக் கட்சியை நெறிப்படுத்துபவன் என்ற அடிப்படையிலும் என்னால்; 13ஆவது திருத்த சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும்; ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அரசுடன் ஓர் பங்காளிக் கட்சியாக நாம் இணைந்திருந்தாலும் எமது மக்களின் அரசியல் உரிமைகளை பலவீனப்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் நாம் ஏற்கமாட்டோம். மாறாக இந்த சமாதான காலத்தில் எமது மக்களின் அரசியல் அதிகாரங்களையும் அவர்களது அரசியல் அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க நாம் இதனோடு ஒருமித்த கருத்துடையவர்களுடன் இணைந்து செயலாற்ற என்றும் தயாராகவே உள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் மாத்திரமே வாக்காளர்களாக பதிவுசெய்ய முடியும்-தேர்தல்கள் ஆணையாளர்- election box

வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டத்தின்படி, உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளலாம் எனவும், அகதிகள் மற்றும் அரசியல் அந்தஸ்து கோரியிருப்பவர்களை வாக்காளர்களாக பதிவு செய்யமுடியாது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டிற்காக வடக்கு கிழக்கு மாகாணங்கள் சார்பாக குறைநிரப்பு வாக்காளர் இடாப்பொன்றை தயாரிப்பதற்கான விண்ணப்பப்படிவங்கள் கடந்த 22ஆம் திகதி கிராமசேவகர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், ஜுன் மாதம் 28ம் திகதி அது பொறுப்பேற்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமாயின் அவர்கள் இலங்கைப் பிரஜையாக இருக்கவேண்டும். வெளிநாடுகளில் தங்கியிருப்போர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் நாடு திரும்பியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இந்த திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகள், அரசியல் தஞ்சம் கோரியிருப்போர் இதன் ஊடாக பதியப்படமாட்டார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு உத்தரவு-law help

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலே பிரியதர்சினியை எதிர்வரும் ஜுலை மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சியத்தை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலைசெய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் ஜுலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார் சிறையிலிருந்து அவரை அழைத்துவந்த சிறைச்சாலை பஸ்சிற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், நீதிமன்றத்திற்கு வருகைதந்த சகலரும் கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈ..பி.டி.பி காரைநகர் அலுவலகம்மீது தாக்குதல்-

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) காரைநகர் அலுவலகம்மீது நேற்றிரவு 9மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்க பிரதியமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு-

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க பிரதியமைச்சர் இப்றாகிம் இப்றாகிமை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும், குறிப்பாக 13ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பிலும் கூட்டமைப்பினர், தென் ஆபிரிக்க குழுவிற்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

தமிழ்கத்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட ஆட்கடத்தல்காரர்கள் கைது-

ஆட்கடத்தலில் ஈடுபட முயற்சித்த 2 இலங்கையர் உள்ளிட்ட 4பேர் தமிழகம் நாகப்பட்டினம் பகுதியில் வைத்து நேற்று தமிழகத்தின் கியூபிரிவு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளர். தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை அஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்புபவர்கள் குறித்து பொலீசார் கடுமையாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஆட்கடத்தலில் ஈடுபட முற்பட்ட வேளையில் 2 இலங்கையர்கள் உள்ளிடட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இவர்கள் நீதிமன்றில் முன்னிலை ஆஜர்செய்யப்பட்டபோது இவர்களை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வடபகுதி மக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்-

வடக்கில் வாழும் மக்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறி செல்வதற்கான தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அவுஸ்ரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏனைய பகுதிகளைவிட, வடபகுதியின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் யுத்ததால் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளோர் நாடு திரும்பினால் அவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் உறுதியளிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 மனித உரிமைகள் சட்டத்தில் திருத்தங்கள்; மேற்கொள்வதில் கவனம்-Human

மனித உரிமைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான சிவில் அமைப்புக்களிடம் யோசனை மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். அண்மையில் சிவில் அமைப்புக்கள் சிலவற்றுடன் இதுபற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு எதிர்காலத்தில் விதிமுறைகளை தயாரிக்கவுள்ளதாகவும் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.