ஆஸி, தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் ஜூலியா கில்லாட் தோல்வி-_rudd_gillard

அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லாட்டை தோற்கடித்து கெவின் ரட் வெற்றி பெற்றுள்ளார். இந்த வாக்கெடுப்பில் கெவின் ரட் 57வாக்குகளையும், பிரதமர் ஜூலியா கில்லாட் 45வாக்குகளையும் பெற்றிருந்தனர். தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பினை நடத்துமாறு கட்சியின் சந்திப்பில் கெவின் ரட்டின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து ஜுலியா கில்லாட் வாக்கெடுப்பினை நடத்தினார். இதேவேளை, 2010ஆம் ஆண்டு கட்சியின் தலைமைத்துவத்திற்கான வாக்கெடுப்பில் ஜூலியா கில்லாட் வெற்றி பெற்றிருந்தார். இந்த வாக்கெடுப்பில் தோல்வியடையும் பட்சத்தில் பதவிதுறக்க தயாராகவுள்ளதாக இருவரும் இதற்குமுன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

13இல் இரு சரத்துக்களை ரத்துச் செய்ய சுதந்திரக் கட்சி தீர்மானம்-13

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இரண்டு ஏற்பாடுகளை ரத்து செய்யவேண்டும் என்ற உத்தியோகபூர்வ தீர்மானத்தை சிறீலங்கா சுதந்திரக்கட்சி இன்று எடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்திலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான சிறீலங்கா சுதந்திர கட்சி இந்த விவகாரத்தில் ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன்பிரகாரம், 13ஆவது திருத்தத்தில் இரண்டு ஏற்பாடுகள் அகற்றப்பட வேண்டுமென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாண சபைகள் இணைந்து தனி மாகாணசபையாக இயங்கமுடியும் என்ற ஏற்பாடு நீக்கப்படல் வேண்டும். மாகாண சபை அதிகாரத்தின் கீழுள்ள பொதுபட்டியலில் உள்ள விடயங்களை திருத்துவதற்கு சகல மாகாண சபைகளிலும் அங்கீகரிக்கவேண்டும் என்பது நீக்கப்படல் வேண்டும் என்பனவே அகற்றப்பட தீர்மானிக்கப்பட்ட விடயங்களாகும்.   யுவெறழசவநn றுநவைநசடநவைநn

வட மாகாணசபைத் தேர்தலுக்கு ஆசிய கண்காணிப்பாளர்கள்-

வட மாகாணசபைத் தேர்தலில் ஆசிய கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 10ஆசிய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பெவ்ரல் அமைப்பின் சுமார் 1000 கண்காணிப்பாளர்கள் வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2012ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்களுக்கு இரு வாரங்களில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்க நடமாடும் சேவைகைளை நடத்திவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கொள்கை குறித்து பாரதீய ஜனதா கட்சி விமர்சனம்-sri &india

இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. இந்தியாவின் பலவீனமான கொள்கையே, இலங்கையுடனான உறவை பலவீனப்படுத்தியிருப்பதாக, பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜஸ்வன் சின்ஹா தெரிவித்துள்ளார். புலிகளை எதிர்ப்பதற்காக இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பியிருந்தமை, இலங்கை விடயத்தில் இந்தியா சந்தித்த பாதகமான அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் அடையாளத்துக்கான அச்சுறுத்தல் என்ற தொனிபொருளில் இடம்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழினி பிணையில் விடுதலை-thailini

புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயநகர் தங்கபுரத்தைச் சேர்ந்த தமிழினி இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தபின் 2009ம் ஆண்டு மேமாதம் 27ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்தார். பின்னர் வவுனியா பூந்தோட்டம் முகாமில் 2012ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அவருக்கான புனர்வாழ்வு ஆரம்பமானது. இந்நிலையில் இன்று தமிழினி விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஸ்பாக் பர்வேஷ் கயானி மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இவ்வார இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உள்ளிட்ட பல பாதுகாப்பு உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதேவேளை, பதுளையிலுள்ள தியதலாவ இராணுவ முகாமில் இடம்பெறும் நிகழ்வொன்றிலும் பாகிஸ்தான் இராணுவத்தளபதி அஸ்பாக் பர்வேஷ் கயானி கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

13ஆவது திருத்தச்சட்டம் மாற்றப்பட்டே ஆகவேண்டும்-அரசாங்கம்-

அரசியலமைப்பின் 13ஆவது  திருத்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டே ஆகவேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் மற்றும் மாகாணங்களை இணைத்தல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள உறுப்புரைகள் மீதான பொது விவாதமொன்று தற்போது இடம்பெற்றுவருகிறது. இது மாற்றப்பட்டே ஆகவேண்டும். அதிலுள்ள சில உறுப்புரைகள் மாறியே தீரவேண்டும். அரசியலமைப்பில் மாற்றம் எதனையும் மேற்கொள்ள தனக்கு உரிமையெதுவும் கிடையாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உணர்ந்து கொண்டதன் விளைவாலேயே 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில மாற்றங்களை முன்மொழிவதற்கென பாராளுமன்றத்திற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

மனிதன் வாழ ஏற்ற 3 கோள்கள் கண்டுபிடிப்பு-

வானியல் நீள்வட்டப்பாதையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 6 கோள்களில் 3 கோள்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கொண்டதாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு நீரும் போதிய அளவு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 3 கோள்களும் பூமியைவிட அளவில் பெரியதாகவும், நெப்டியூனை விட சிறியதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியில் 3 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை என வாஷிங்டன் வின்வெளி ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாசையூர் இறங்குதுறை திறப்புவிழா, அரசாங்கம் புறக்கணிப்பு-

யாழ். பாசையூர் இறங்குதுறை திறப்பு விழாவில் அரசாங்கம் சார்பாக எவருமே கலந்துகொள்ளவில்லை. இந்த இறங்குதுறை திறப்பு விழாவினை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர்கள் இருவர், வட மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட செயலர் உட்பட அரச அதிகாரிகள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மோடி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்று இறங்குதுறையினை திறந்துவைத்துள்ளார். எவ்வாறாயினும் ஐ.ஓ.எம் நிறைவேற்றுப் பணிப்பாளர் யுசுப்பே லொபியுரே, வட மாகாண ஆளுனரின் செயலர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் எமிலியாம்பிள்ளை உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் உணர்விழந்துள்ளனர்-அம்னஸ்டி அமைப்பு-sri jail

இலங்கையின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமக்கு என்ன நடக்கிறது என்ற உணர்வை இழந்த நிலையிலேயே பெரிதும் காணப்படுவதாக அவர்கள் தெரிவிப்பதாக அம்னஸ்டி அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நாவின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அம்னஸ்டி அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமக்கு என்ன நடந்தது என்பதை இன்னமும் நம்பமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிறிய குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காகக் கூட இலங்கைப் பொலீசார் மிளகாய்த் தூளை பிறப்பு உறுப்பில் வீசி சித்திரவதை செய்து விசாரணை நடத்தியுள்ளதாக ஊடகத்தில் வெளியான தகவலையும் அம்னஸ்டி அமைப்பு தனது அறிக்கையில் சேர்த்து அதனையும் சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கையர்கள் நாடு திரும்புவது அதிகரிப்பு-srilanka flag

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 350 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தமிழகத்திலுள்ள ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜனவரிமுதல் இதுவரை 1600பேர் இலங்கை திரும்பியுள்ளதாக  யூ.என்.எச்.சீ.ஆரின் தரவுகள் தெரிவிக்கின்றன. நாடு திரும்பியவர்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. நாடு திரும்ப விரும்புபவர்கள் வசிக்கவுள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, அவர்களை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் திருப்பி அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மட்டு. வர்த்தகர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு-

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக அரசியல் பிரிவுக்கான அதிகாரி மைக்கல் ஏர்வின், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்றுக்காலை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கல் ஏர்வின், வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நடவடிக்கை தொடர்பாகவும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார். சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களின் நிலை மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் அவருக்குத் எடுத்து விளக்கப்பட்டதாக மட்டக்களப்பு  மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன நிறைவேற்று அதிகாரி எஸ்.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் குடும்பங்களுக்கு நலன்புரி திட்டம்-

சிறையில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சமூகசேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைவாசம் அனுபவிப்போரின் குடும்பங்களின் நலன்புரிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக விடப்பட்டு வேண்டுகோளின் அடிப்படையில் சமூக சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது சம்பந்தமான அறிவித்தலை சமூக சேவைகள் அமைச்சின் செயலர் திருமதி இமெல்டா சுகுமார் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பி சமூகசேவை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குடும்பத் தலைவர் சிறைவாசப்பட்டு தண்டனை அனுபவிக்கின்ற குடும்பங்களின் ஏனைய அங்கத்தவர்கள் சமூக பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதன் காரணமாக தவறான பாதையில் ஏனையவர்களும் செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனை கருத்திற்கொண்டு இத்தகைய சிறைவாசம் அனுபவிப்பவர்களின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் பிழையான பாதையில் செல்வதை தடுக்கும் வகையிலும் அவர்களை தேசிய அபிவிருத்தியின் பங்காளர்களாக மாற்றும் வகையிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிறைவாசம் அனுபவிப்பவர்களின் வறுமையை போக்கவும் குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையிலும் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென சமூக சேவைகள் அமைச்சு நிதி உதவி உட்பட தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.