யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்று வருகின்ற தென்னிலங்கை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளை துணைவேந்தரிடம் கையளித்துள்ளோம் என இப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரும் மாணவர்களின் சிரேஷ்ட ஆலோசகருமான ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவருகின்ற முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாகக் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பிரிவில் கல்வி கற்றுவருகின்ற தென்பகுதியைச் சேர்ந்த 3ஆம் வருட மாணவர்களுக்கும் முதலாம் வருட மாணவர்களுக்குமிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரியகுளத்தில் அமைந்துள்ள விகாரை முன்றலில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முதலாம் வருட மாணவர்கள் 3ஆம் வருட மாணவர்களுக்கு கீழ் படிவதில்லை என்ற முரண்பாட்டினால் இரு குழுக்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்தோம்.
அத்துடன் இக் கோஷ்டி மோதல்கள் இடம்பெறும் போது அருகிலிருந்த மாணவர்களிடமும் நாம் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளை நாம் துணை வேந்தர் வசந்தி அரசரெட்ணத்திடம் கையளித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.